மம்தாவின் கனவு நனவாகுமா?

காங்கிரஸ் பலவீனமாக உள்ள இந்தச் சூழலில் அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என்று மம்தா பானர்ஜி திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி


மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். 

இது தவிர பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை திரிணமூல் காங்கிரஸூக்கு ஈர்க்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கு உதாரணமாக கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் லூசினோ ஃபெலேரோ அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததைக் குறிப்பிடலாம். இதேபோல, மேகாலய மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ்  அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அடித்தளம் கொண்டது; சுமார் 20 சதவீத வாக்கு வங்கி கொண்ட அக்கட்சியைப் போன்றதல்ல திரிணமூல் காங்கிரஸ். இது மம்தாவுக்கும் தெரியும். எனினும், அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்முயற்சி செய்வது ஏன் என்பது புதிராக உள்ளது.

பாஜக அணி, அதற்கு மாற்றாக காங்கிரஸ் அணி என்ற இரு அணிகளே தேசிய அரசியல் களத்தில் முக்கிய சக்திகளாக விளங்குகின்றன. எனினும் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதைக் காட்டிலும் பலவீனமாக உள்ளது. ஒரு காலத்தில் அசைக்க முடியாக ஆளுங்கட்சியாக விளங்கிய அக்கட்சிக்கு தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம்.

காங்கிரஸ் பலவீனமாக உள்ள இந்தச் சூழலில் அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என்று மம்தா பானர்ஜி திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. எனினும் மேற்கு வங்கத்தைத் தாண்டி வாக்குகளைப் பெற இயலாத அவரால் இதைச் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

அதிக எம்.பி.க்களை கைவசம் வைத்திராமலேயே பிரதமர் பதவிக்கு வந்த வி.பி.சிங், சந்திரசேகர், தேவெ கௌடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட மம்தா முயற்சி எடுக்கக் கூடும். எனினும் எந்தக் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலை தோன்றினால் மட்டுமே மம்தாவின் கனவு நனவாகும். அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், மம்தா தனது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின் 2014 வரை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 1996}இல் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. அந்த அடிப்படையில் வாஜ்பாய் ஆட்சி அமைத்தபோதிலும் அவரது அரசு 13 நாள்களே நீடித்தது. அவரது அரசு கவிழ்ந்ததும் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும் இடதுசாரிகள் அதை ஏற்காததால் அவர் பிரதமர் பதவிக்கு வர முடியவில்லை.

1996 தேர்தலில் நடந்தது போல 2024-இல் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தன்னை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கலாம் என்பது மம்தாவின் கணிப்பாக இருக்கக் கூடும். இந்தச் சூழலில்தான் அண்மையில் மும்பை சென்ற மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனையின் இளைஞரணித் தலைவரான ஆதித்ய தாக்கரே ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். 

"பாஜகவுக்கு ஈடு கொடுக்கும் வல்லமை வாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இல்லை. அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் மம்தா பானர்ஜி மட்டுமே' என்று திரிணமூல் காங்கிரஸ் கூறி வருகிறது. 

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, "மம்தா பானர்ஜி ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மம்தா, பின்னர் வந்த காங்கிரஸ் கூட்டணியிலும் இடம்பெற்றார். சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை உடையவர் அவர்' என்று விமர்சித்துள்ளது. பதிலுக்கு ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல் திரிணமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெற உள்ளது. அப்போது பாஜக, மோடியையே பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரûஸப் பொருத்த வரை தற்போது தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி உள்ளார். அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் மீண்டும் ராகுலைத் தலைவராக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுலே முன்னிறுத்தப்படக் கூடும்.

அதேசமயத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளராக மம்தாவை முன்னிறுத்துமா, அதை எதிர்க்கட்சிகள் ஏற்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒரு வாதத்துக்காக அவை அனைத்திலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறுவதாகக் கொண்டாலும், அதன்மூலம் மம்தா பானர்ஜி பிரதமராக முடியாது. சுமார் 150 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் கட்சியால் மட்டுமே மத்தியில் ஆட்சிக்கு வருவது பற்றி யோசிக்க முடியும்.

இந்தச் சூழலில் மம்தா மேற்கொண்டுள்ள முயற்சியை காங்கிரûஸ பலவீனப்படுத்தும் முயற்சி என்றே கருத வேண்டியுள்ளது. காங்கிரஸ் பலவீனமாக உள்ள மாநிலங்களில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை இழுப்பது, அங்கு தேர்தல் நடைபெறும்போது திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்துவது போன்றவை மம்தாவின் உத்தியாக உள்ளன. இதனால் காங்கிரஸூக்கு வாக்குகளில் சிதறல் ஏற்பட்டு அது பாஜகவுக்கே சாதகமாகிறது. எனவே, மம்தா பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

மம்தாவை நம்பி அவருடன் தேர்தலில் கூட்டணி வைக்க பிற மாநிலக் கட்சிகள் முன்வருமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோதிலும் அனைத்து மாநிலங்களிலும் அக்கட்சிக்கென குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அதனால்தான் மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்  போன்ற மாநிலக் கட்சிகள் காங்கிரஸூடனான கூட்டணியில் உறுதியாக இருக்கின்றன.

ஒருவேளை இக்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகி திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தாலும், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அக்கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது நிதர்சனம். 

இதைக் கருத்தில் கொண்டே, "காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணி வலிமையாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரு கூட்டணி அமைக்க யாரும் முயற்சி மேற்கொண்டால் அது பாஜக வலுப் பெறவே உதவும்' என்று சிவேசனை கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, காங்கிரஸின் பலவீனத்தைப் பயன்படுத்தி அந்த இடத்தில் திரிணமூல் காங்கிரஸே வளர்ப்பது என்ற மம்தாவின் திட்டத்தை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்காது என்றே தோன்றுகிறது. இதற்கு உதாரணமாக அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைக் கூறலாம். கோவா தேர்தலில் திரிணமூல் காங்கிரஸூடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்காது என்று அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.  

ஒருவேளை மத்தியில் மம்தா ஆட்சிக்கு வந்தாலும் அவரை தங்கள் விருப்பப்படி ஆட்டுவிக்க முடியாது என்றே எதிர்க்கட்சிகள் கணக்கிடக் கூடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி அமைப்பதுடன் தங்கள் விருப்பத்துக்கு இணங்க அக்கட்சி செயல்படும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

மேலும் மம்தாவை பிரதமராக ஏற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ராகுல் அல்லாத வேறு ஒரு தலைவரை பிரதமராகக் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. 

கடந்த காலத்தில் அவ்வாறே மூத்த தலைவரான மன்மோகன் சிங் பிரதமராக வர காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது பிரதமர்
பதவியைக் குறிவைத்துள்ள மம்தாவின்  கனவு நனவாகும் வாய்ப்புத் 
தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com