இயர்போன் ஆபத்து! செவித்திறனைக் காத்துக்கொள்ளுங்கள்!

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துவரும் சூழ்நிலையில் இன்று மின்னணு, தொழில்நுட்ப சாதனங்களின் தேவைகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன., தவிர்க்க முடியாதவையாகவும் மாறிவிட்டன.
இயர்போன் ஆபத்து! செவித்திறனைக் காத்துக்கொள்ளுங்கள்!

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துவரும் சூழ்நிலையில் இன்று மின்னணு, தொழில்நுட்ப சாதனங்களின் தேவைகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன., தவிர்க்க முடியாதவையாகவும் மாறிவிட்டன. இந்த வகையில் இன்று அனைத்துத் தரப்பினருக்கும் அவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது அறிதிறன் கைபேசிகள் (ஸ்மார்ட்போன்கள்)!. 

கரோனா தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள், பணிபுரிவோருக்கு அலுவலகக் கூட்டங்கள் என செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், அதே அளவுக்கு இயர்போன்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது.

பாட்டுக் கேட்பது, ஒருவருடன் போனில் பேசுவது என பெரும்பாலானோர் செல்போனுடன் இயர்போனையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர். எதிர்முனை ஒலியைத் துல்லியமாகக் கேட்க இயர்போன்கள் பெரிதும் உதவுகின்றன. பாடல்கள், இசையைக் கேட்பதற்கு பலரும் இயர்போனை பயன்படுத்துகின்றனர். 

இயர்போன் அதிகமாக பயன்படுத்தும்போது கேட்கும் திறனில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவற்றை இடைவெளிவிட்டு, அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தும்படியும் நிபுணர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இயர்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் செவித் திறன் குறைபாட்டால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இயர்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் செவித் திறன் குறைபாடு பிரச்னைகளைத் தவிர்ப்பது எப்படி?  பார்க்கலாம்.

பாதுகாப்பு  வரம்புகள்

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 'செட்டிங்ஸ்' வசதி உள்ளது. சாதாரணமாக இயர்போனின் ஒலியை அதிகரிக்கும்போது, குறிப்பிட்ட வரம்பை மீறினால் ஓர் எச்சரிக்கை செய்தி வரும். எனவே, செட்டிங்ஸ்-ல் இந்த எச்சரிக்கை செய்தி வரும்படி உங்கள் ஸ்மார்போனில் செட் செய்து பாதுகாப்பாகக் கேட்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். 

அதிக ஒலி ஆபத்தானது

ஸ்மார்ட்போனில் சராசரி அதிகபட்ச ஒலி அளவான 102 டெசிபல் இசையை 5 முதல் 10 நிமிடங்கள் வரை கேட்கலாம். அதற்கு மேல் இந்த ஒலி அளவில் கேட்பது ஆபத்தானது. உங்கள் செவித்திறனைப் பாதுகாக்க உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த நேர வரம்பையும் செட் செய்துகொள்ளுங்கள். 

60/60 விதி

இயர்போன் பயன்பாட்டினால் காது கேளாமையைத் தடுக்க 60/60 விதியை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்களும், மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். அதாவது 60 நிமிடங்களுக்கு 60 சதவீத இசை அளவுடன் கேட்க வேண்டும். மிதமான அளவு ஒலியுடன் குறிப்பிட்ட இடைவெளியில் இயர்போனைப் பயன்படுத்துவது கேட்கும் திறனில் பிரச்னையை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

வழக்கமான உள்-காது இயர்பட்ஸ்-களைவிட காது முழுவதும் மறைக்குமப்டியான வெளிப்புறத்தில் பொருத்தும்படியான இயர்போன்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஏனெனில் வெளிப்புறத்தில் இயர்பட்ஸ் இருக்கும்போது ஸ்மார்ட்போனில் இருந்து ஒலியானது நேரடியாக முழு ஒலியுடன் செல்வதில்லை.

ஒலி அளவைக் குறைக்கவும் 

ஆய்வுகளின்படி, சுமார் 80 டெசிபல் வரையுள்ள ஒலியை 20 மணி நேரத்திற்கும் மேலாக கேட்க முடியும். இந்த 80 டெசிபல் ஒலி என்பது ஸ்மார்ட்போன் ஒலி அளவின் 60 சதவீதமாகும். ஒலி அளவை 60 முதல் 85 டெசிபல்களுக்கு இடையில் வைத்திருப்பது கேட்கும் திறனில் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும். இதற்கு மேற்பட்ட ஒலியைக் கேட்பது செவித்திறனைப் பாதிக்கும். சுமார் 100 டெசிபலில் இசையைக் கேட்கும்போது 10-15 நிமிடங்களுக்கு கேட்கலாம். அதன்பின்னர் ஒலி அளவை 80 டெசிபலுக்கு குறைத்துவிட வேண்டும். 

இயர்பட்ஸ்களை சுத்தம் செய்யுங்கள்

பாக்டீரியா, வியர்வை மற்றும் இறந்த சரும செல்களால் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க இயர்பட்ஸ்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

வெளிப்புற சப்தத்தை அனுமதிக்காத இயர்போன்

வெளியில் செல்லும்போது சுற்றுப்புறத்தில் ஒலி அதிகமாகும்போது இயர்போன் ஒலியை அதிகரிப்பது பெரும்பாலானோரின் வழக்கமான செயலாக உள்ளது. ஒலியை அதிகரித்தால் மட்டும்தான், கேட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், இவ்வாறு ஒலி அளவை அதிகரிப்பது தீங்கு விளைவிக்கும், செவித்திறனை பாதிக்கும். எனவே, இயர்போனில் ஒலி அளவை அதிகரிப்பதற்கு பதிலாக வெளிச் சப்தத்தை அனுமதிக்காத இயர்போன்களை வாங்கி பயன்படுத்துங்கள். 

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கிடைக்கும் வரங்களுடன் சேர்த்து இலவச இணைப்பாக நிறைய சாபங்களும் நம்மை வந்தடைகின்றன. துல்லியமான கேட்பு வசதியுடன்  செவித்திறனைப் பாதிக்கும் இயர்போன்கள்! எச்சரிக்கையாக இருந்து இயன்றவரை பாதிப்பிலிருந்து தப்பிப்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. எச்சரிக்கை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com