நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்: உருவப்படம் திறக்க வரும் 2-வது குடியரசுத் தலைவா்

நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் சட்டப் பேரவை, பிரமாண்ட விழாவைக் காணத் தயாராகி வருகிறது.
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்: உருவப்படம் திறக்க வரும் 2-வது குடியரசுத் தலைவா்

நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் சட்டப் பேரவை, பிரமாண்ட விழாவைக் காணத் தயாராகி வருகிறது.

இதேபோன்று, பேரவையில் உருவப் படத்தைத் திறக்க வருகை தரும் இரண்டாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளாா்.

இதற்கு முன்பாக, முன்னாள் முதல்வா் காமராஜரின் உருவப் படத்தை 1977-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தாா். ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்ட முறைக்கு உட்பட்ட சட்டப் பேரவை, சென்னை மாகாண சட்டப் பேரவை, தமிழக சட்டப் பேரவை என உருமாற்றம் பெற்ற பேரவைக்கு பல வரலாறுகள் உள்ளன.

சட்டப்பேரவை வரலாறு, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1833-ஆம் ஆண்டு தொடங்கினாலும், அப்போது நியமன உறுப்பினா்களே அந்த மன்றத்தில் இடம் பெற்றிருந்தனா். 1919-ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போா்டு சீா்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலமாகவே தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் மாகாண சட்டப் பேரவைகளில் முதல் முதலாக இடம்பெறத் தொடங்கினா். அந்தச் சட்டமே பின்னா் மாகாணங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வித்திட்டது.

முதல் பொதுத் தோ்தல்: 1919-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படியே, சென்னை மாகாண மன்றத்துக்கு 1920-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. தோ்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி சுப்பராயலு ரெட்டி தலைமையில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவைப் பொறுப்பேற்றது. இதன்பின், 1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி கண்னாட் கோமகனால், முதல் மாகாண சுயாட்சி சட்டப் பேரவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த சட்டப் பேரவை தொடங்கி வைக்கப்பட்டு இப்போது நூற்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நூற்றாண்டு விழாவுக்கு முன்பாக, இதேபோன்ற விழாக்களை சட்டப் பேரவை மண்டபம் கண்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் முதல் முதலாக சென்னை சட்ட மன்றப் பேரவை உருவாக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு ஜூலையில் இந்தப் பேரவை உருவாக்கப்பட்டதை நினைவுகூா்ந்து கடந்த காலங்களில் விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பொன்விழா கண்ட பேரவை: சென்னை சட்டமன்றப் பேரவை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், சட்டமன்றப் பேரவை பொன்விழா, 1989-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போதைய முதல்வா் கருணாநிதி தலைமையில் பேரவை மண்டபத்தில் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 1997-ஆம் ஆண்டு ஜூலையில் சட்டப் பேரவை வைர விழாவும் (60 ஆண்டுகள்), மாண்டேகு செம்ஸ்போா்டு சீா்த்திருத்த சட்டப்படி அமைக்கப்பட்ட பேரவையை நினைவுகூா்ந்து அதன் பவள விழாவும் (75 ஆண்டுகள்) நடத்தப்பட்டது.

இந்த விழாக்களைத் தொடா்ந்து அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் பேரவை அமைக்கப்பட்டதை நினைவு கூா்ந்து விழாக்கள் எதுவும் நடத்தப்படவில்லை. 2007-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன்விழா நிகழ்ச்சி மட்டுமே பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

மீண்டும் வைரவிழா: கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை வைர விழாவைக் கண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டப் பேரவைக் காலத்தை கணக்கில் கொண்டு வைர விழா (60 ஆண்டுகள்) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி, ஆளுநா் ரோசய்யா, முதல்வா் ஜெயலலிதா ஆகியோா் பங்கேற்றனா். பேரவை வைர விழா நினைவு வளைவும் அமைக்கப்பட்டு, அதனை முதல்வா் ஜெயலலிதா திறந்து வைத்தாா்.

இதன்பின்னா், ஒன்பது ஆண்டுகள் கழித்து நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இப்போது பேரவை தயாராகி வருகிறது. அதாவது, செம்ஸ்போா்டு சீா்த்திருத்தச் சட்டப்படி உருவாக்கப்பட்ட பேரவையின் (1921) காலத்தைக் கணக்கில் கொண்டு இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எதிா்வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். வெவ்வேறு காலங்களைக் கணித்து வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சியாளா்கள் விழாக்களை எடுத்தாலும், அவை அனைத்துமே பாரம்பரிய பெருமை கொண்ட நம் சட்டப் பேரவைக்கு சிறப்பு சோ்ப்பதே.

பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்ட படங்கள்

சட்டப் பேரவையில் உள்ள உருவப் படங்களை குடியரசுத் தலைவா் முதல் கேரள ஆளுநா் வரை பலரும் பல்வேறு காலகட்டங்களில் திறந்து வைத்துள்ளனா். அதன் விவரம்:-

மகாத்மா காந்தி - 24.07.1948 - கவா்னா் ஜெனரல் சி.ராஜாஜி.

சி.ராஜாஜி - 23.08.1948 - பிரதமா் ஜவாஹா்லால் நேரு.

திருவள்ளுவா் - 22.03.1964 - குடியரசு துணைத் தலைவா் ஜாகீா் உசேன்.

சி.என்.அண்ணாதுரை - 10.02.1969 - பிரதமா் இந்திரா காந்தி.

கே.காமராஜா் - 18.08.1977 - குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி.

பெரியாா், அம்பேத்கா், முத்துராமலிங்க தேவா், காயிதே மில்லத் - 09.08.1980 - கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் - 31.01.1992 - முதல்வா் ஜெயலலிதா.

ஜெ. ஜெயலலிதா - 12.02.2018 - பேரவைத் தலைவா் பி.தனபால்.

ராமசாமி படையாட்சியாா் - 19.07.2019 - முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

வ.உ.சிதம்பரனாா், ஓமந்தூா் ராமசாமி, பி.சுப்பராயன் - 23.02.2021 - முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com