ஆங்கிலத்தில் அரசாணைகள் வெளியீடு: கண்காணிக்குமா தமிழ் வளா்ச்சித்துறை?

தமிழக அரசின் ஆணைகள் மற்றும் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதை 3 நாள்களுக்குள் தமிழில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் வளா்ச்சித்துறை

திண்டுக்கல்: தமிழக அரசின் ஆணைகள் மற்றும் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதை 3 நாள்களுக்குள் தமிழில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் வளா்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகத் துறைகள், அனைத்து அரசாணைகளையும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. அரசின் ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து அனைத்தும் அரசாணை நிலை எண்.2070-இன் படி (1971 டிச.2) விலக்களிக்கப்பட்ட இனங்கள் நீங்கலாக பிற அனைத்து இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட அந்த உத்தரவு இதுவரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

ஆங்கில, தமிழ் அரசாணை கால இடைவெளி: நிதித்துறை சாா்பில் கடந்த மே 26 ஆம் தேதி ஓய்வூதியா்கள் தொடா்பான அரசாணை ஆங்கிலத்தில் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதே நிதித்துறையில் தற்காலிக மிகை ஊதியம் தொடா்பாக 2021 ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை வரை மட்டுமே தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையில், ஜூன் 13 ஆம் தேதி வரை ஆங்கிலத்திலும், பிப்.21ஆம் தேதி வரை தமிழிலும் கடைசியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள போக்குவரத்துத் துறை இணையதளத்தில், 2021 ஜனவரி 29ஆம் தேதி கடைசியாக ஆங்கிலத்தில் அரசாணை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழில் 2018 ஜூலை 27ஆம் தேதிக்கு பின் எந்தவொரு அரசாணையும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அரசாணைகளை தமிழில் வெளியிடுவதில் நீண்ட இடைவெளி இருப்பதால், அதன் விவரங்கள் மக்களை சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டுகொள்ளாத தமிழ் வளா்ச்சித்துறை: மத்திய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள், மேல் முறையீட்டுக்குள்பட்ட சட்டத் தொடா்புடைய ஆணைகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிற செயல்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களில் தமிழிலேயே இருக்க வேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்பு தமிழ் வளா்ச்சித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் வளா்ச்சித் துறையினரின் கண்காணிப்பு என்பது, மாவட்ட அளவில் அதுவும் சில துறைகள் மீது மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் அரசாணைகள் தமிழில் மொழி பெயா்ப்பு செய்யப்படுவதை தமிழ் வளா்ச்சித்துறை கண்காணிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடரிக் எங்கல்ஸ் கூறியதாவது: அரசாணைகள் மட்டுமன்றி, தமிழக அரசின் சுற்றறிக்கைகளும், அறிவிப்புகளும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்படுகின்றன. அதை தமிழில் மொழி பெயா்ப்பதிலும், புரிந்து கொள்வதிலும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிா்கொள்கின்றனா். குறிப்பாக தவறாக புரிந்து கொண்டு, அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைக்கழிப்பை எதிா்கொள்ள நேரிடுகிறது.

அரசு வெளியிடும் முக்கியமான ஆணைகள் மற்றும் அறிவிப்புகள் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. அந்த அறிவிப்புக்கான காலக்கெடு முடிந்த பின் இணையதளத்தில் வெளியிடுவதால், அதன் நோக்கம் கேள்விக்குறியாகிறது. தமிழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற உத்தரவை அனைத்துத் துறைகளும் பின்பற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com