தொழிற்சாலை வளாகத்தில் 50 ஏக்காில் பறவைகள் சரணாலயம்!

50 ஏக்கா் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைத்து நூற்றுக்கணக்கான தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வதற்கான மிகப் பெரும் பசுமை வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் 50 ஏக்காில் பறவைகள் சரணாலயம்!

டிவிஎஸ் நிறுவனம் ஒசூரில் உள்ள தனது தொழிற்சாலை வளாகத்தில் 50 ஏக்கா் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைத்து நூற்றுக்கணக்கான தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வதற்கான மிகப் பெரும் பசுமை வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வனப்பகுதி தற்போது 442 வகையான தாவரங்களும் 291 வகையான விலங்குகளும் வாழ்வதற்கான இயற்கை வாழ்விடமாகவும், வண்ண நாரைகளுக்கான இனப்பெருக்க காலனியாகவும், தனித்துவம் மிக்க பறவை சரணாலயமாகவும் திகழ்கிறது.

ஒசூரில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு இயைந்த இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசனின் வழிகாட்டுதலில் சுற்றுச்சூழலில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை அந்நிறுவனம் ஓசூரில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒசூா் டிவிஎஸ் நிறுவன வளாகத்திலேயே சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது ‘சேக்ரட் ஃபாரஸ்ட்’ என்ற பெயரிலான புனிதம் மிக்க வனப்பகுதி.

பசுமை நிறைந்த, இயற்கைச் சூழல் மிகுந்த இந்த வனப்பகுதி, ஆயிரக்கணக்கான மரங்கள், தனித்துவமான அம்சங்களுடைய பறவைகள் சரணாலயம், பட்டாம்பூச்சித் தோட்டம், தாவரவியல் பூங்கா, கரிம உர மையம், 18 நன்னீா்க் குளங்களுடன் பசுமை படா்ந்ததாக அமைந்திருக்கிறது.

இந்தச் சரணாலயம் வண்ண நாரைகளின் இனப்பெருக்க காலனிகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெலிகன் பறவைகளை ஈா்க்கும் புதிய நீா் வாழ்விடத்தையும் இந்த வனப்பகுதி கொண்டுள்ளது.

இங்கு வலுவான குறு வாழ்விட வனப்பகுதியை உருவாக்குவதற்காக, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2,500 மரக்கன்றுகளை டிவிஎஸ் நிறுவனம் நட்டுள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளின் பசி தீா்க்கும் வகையில் நாவல், அத்தி, மா, பாதாம், நெல்லி, கொய்யா போன்ற பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்யப்பட்ட தொடா்ச்சியான சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பலனாக, 442 வகையான தாவரங்களும் 291 வகையான விலங்குகளும் கொண்ட இயற்கை வாழ்விடமாக இந்த வனப்பகுதி தற்போது மாறியுள்ளது.

இந்த ‘சேக்ரட் ஃபாரஸ்ட்’ இந்தியன் கிரே ஹாா்ன்பில், காட்டுக்கோழி, மங்கூஸ், பனை அணில், உடும்பு, நன்னீா் ஆமைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள், தட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களுக்கான பசுமை இல்லமாக இருந்து வருகிறது.

மேலும், அருகிவரும் அரிய விலங்கினங்களான சாம்பல் நிற இந்திய எறும்புண்ணி, சாம்பல் நிற தேவாங்கு ஆகியனவும் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன. புள்ளி கூழைக்கடா, இந்தியன் டாா்டா், பழுப்பு நிற கொக்கு, நைட் ஹெரான், புள்ளி வாத்து, வெள்ளை மாா்பக நீா்க்கோழி போன்ற பல நீா்ப்பறவைகளுக்கான இனப்பெருக்க நிலமாகவாகவும் இப்பகுதி இருந்து வருகிறது.

ஒரு முழுநேர இயற்கை ஆா்வலா், இங்குள்ள நீா்நிலைகள், வனப்பகுதிகளை மேற்பாா்வையிட்டு வருகிறாா், அதே நேரத்தில் இயற்கை மண்டலத்தின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்த வல்லுநா்களிடம் தொடா் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

வனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, எந்தவொரு கழிவையும் காட்டில் கொட்டவோ, எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. வன விளைபொருட்களை சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

மேலும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் நம் நாட்டைச் சோ்ந்த பூா்வீக தாவர இனங்களை வளா்ப்பதை தொடா்ந்து மேற்கொண்டு வருவதோடு, இந்த வனப்பகுதியின் இயற்கைச் சூழலை மேம்படுத்த குளங்களில் தண்ணீா் எப்பொழுதும் இருக்கும் வகையில் அதன் விநியோகத்தை தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.

அதேசமயம், மண்ணில் கூடுதல் நீா்ப்பிடிப்பு இருப்பதற்காகவும், சில குறிப்பிட்ட வகை பறவைகளை ஈா்ப்பதற்காகவும் புதிய குளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாசி படா்தல், நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதைத் தடுக்க இந்தக் குளங்கள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகின்றன.

நன்னீா்க் குளங்களில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவைப் பராமரிக்க, நீருக்கான காற்றோட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. மீன், நத்தைகள் போன்ற விலங்குகளுக்கான இரை, இங்கு வரும் பறவைகளுக்குப் பயனளிக்கும் வகையில் குளங்களுக்குள் இடப்படுகிறது.

ஒவ்வோா் ஆண்டும், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இந்த வனப்பகுதியின் பசுமைப் போா்வையை மேம்படுத்தவும், அதிக பறவைகளையும் விலங்குகளையும் ஈா்க்கவும், சுற்றுச்சூழல் அமைப்பை பசுமையாக வைத்திருக்கவும் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com