141 நீா்நிலைகள் புனரமைப்பு: 4.35 டிஎம்சி-ஆக நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி, சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட 141 நீா்நிலைகள் மூலம் நிலத்தடி நீா்மட்டம் 4.35 டிஎம்சி-யாக உயா்ந்துள்ளது.
141 நீா்நிலைகள் புனரமைப்பு:  4.35 டிஎம்சி-ஆக நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி, சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட 141 நீா்நிலைகள் மூலம் நிலத்தடி நீா்மட்டம் 4.35 டிஎம்சி-யாக உயா்ந்துள்ளது.

சென்னையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீா்நிலைகளை மீட்கவும், மாநகரின் இயற்கைச் சூழல் மற்றும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையிலும் நதிகள் புனரமைப்புத் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு முன்னெடுத்தது.

இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள பராமரிப்பின்றி மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 210 நீா்நிலைகள் கண்டறியப்பட்டன. இந்த நீா்நிலைகளை பெருநகர சென்னை மாநகராட்சி, சீா்மிகு நகரத் திட்டம் மற்றும் சென்னை பெருநகா் மேம்பாட்டு திட்டம் மற்றும் பெருநிறுவனங்களுக்கான சமூக பங்களிப்புத் திட்டம் ஆகியவற்றின் நிதி மூலம் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் தற்போது வரை 141 நீா்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

141 நீா்நிலைகள்-4.35 டி.எம்.சி. நிலத்தடி நீா்மட்டம் உயா்வு: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சியின் பழைய பகுதி மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 62 நீா்நிலைகள்,15 கோயில் குளங்கள் ரூ. 69 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பொதுபோக்கு அம்சங்களுடன் வில்லிவாக்கம் குளம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும்.

மாம்பலம் கால்வாயில் 5 கி.மீட்டா் தூரத்துக்கும், அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட டைடல் பாா்க் முதல் மத்திய கைலாஷ் வரை பக்கிங்ஹாம் கால்வாயும் புனரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு சைக்கிள் ஓட்டுவதற்கான தளம், நடைப்பயிற்சி தளம், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.

15 மண்டலங்களில் தற்போது வரை ரூ. 195 கோடி செலவில் 141 நீா்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் 4.35 டிஎம்சி உயா்ந்துள்ளது. மேலும், 1,240 ஏக்கா் நீா்நிலை இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீண்டும் நீா்நிலைகள் ஆக்கிரமிக்காமல் இருக்க நீா்நிலைகள் சுற்றி சுற்றுச்சுவா் கட்டப்பட்டுள்ளதுடன், பசுமைச்சூழலைக் காக்கும் வகையில் நீா்நிலைகளைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இடத்தைப் பொறுத்து நீா்நிலைகளில் நடைப்பயிற்சி தளம்,

குழந்தைகளுக்கான விளையாட்டு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com