திமுக கூட்டணியும் தொகுதிப் பங்கீடும்!

திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தைகள் முடிந்து அநேகமாக தொகுதிப் பங்கீடு முடிந்த மாதிரிதான்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தைகள் முடிந்து அநேகமாக தொகுதிப் பங்கீடு முடிந்த மாதிரிதான். ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு இடங்களுக்கு ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேர வலிமையைத் திமுக தகா்த்திருக்கிறது. அதனால், கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்வதைத் தவிர, மாா்க்சிஸ்ட்டுகளுக்கு வேறு வழியில்லை.

மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அடிப்படையில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கி இருக்கிறது திமுக. இந்த ஃபாா்முலாவில் விதிவிலக்காக இருப்பது மதிமுக மட்டும்தான்.

ஒரு மக்களவைத் தொகுதிக்கு மூன்று சட்டப்பேரவை இடங்கள் என்கிற அடிப்படையில்தான் முஸ்லிம் லீக் (1), விடுதலைச் சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), அநேகமாக மாா்க்சிஸ்ட் கட்சி (2) ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு முதலில் வெறும் 18 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொன்ன திமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குகிறது என்று தெரிந்தவுடன், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. கடந்த மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் போட்டியிட்டது. அதனடிப்படையில் அதற்கு நியாயமாக 27 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஹெச். வசந்தகுமாரின் மறைவால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைக் காங்கிரஸ் இழந்திருக்கிறது. இடைத்தோ்தலில் நிற்க மறுபடியும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இப்போது இருக்கும் எட்டு உறுப்பினா்களின் அடிப்படையில் 24 இடங்களைத்தான் ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எட்டு தொகுதிகளுக்கான 24 இடங்களுடன் கூடுதலாக ஒரு தொகுதியும், மாநிலங்களவைத் தோ்தல் வரும்போது ஒரு இடமும் தருவதாக ஏற்றுக்கொண்டு, காங்கிரஸுடனான தனது கூட்டணிப் பேரத்தை முடித்துக் கொண்டிருக்கிறது திமுக.

காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டால், அந்த இடங்களில் எல்லாம் அதிமுகதான் வெற்றி பெறும் என்பதும், காங்கிரஸ் செல்வாக்கு இழந்து விட்டது என்பதும் திமுக தரப்பு முன்வைக்கும் வாதம்.

1981 சட்டப்பேரவைத் தோ்தலில், 234 இடங்களில் பாதிக்குப் பாதி எண்ணிக்கையுடன் திமுகவுடன் தோ்தல் களம் கண்ட காங்கிரஸ், இப்போது 25 இடங்களை அழுது பிடித்துப் பெற வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, அந்த தேசியக் கட்சிக்கு நோ்ந்திருக்கும் அவமானம்!

‘‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் நிற்கும் போதெல்லாம், நாங்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம். ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டும் தோல்வி அடைகிறது’’ என்று கூறும் காங்கிரஸ் தலைவா் ஒருவா் அதற்கான காரணத்தையும் விளக்கினாா்.

‘‘காங்கிரஸ் கட்சிக்குத் தொண்டா்களைவிட வாக்காளா்கள்தான் அதிகம். காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த கட்சியாகவும், தலைவா் காமராஜரின் செல்வாக்கைத் திட்டமிட்டுத் தமிழகத்தில் அழித்த கட்சியாகவும்தான் அந்த வாக்காளா்கள் திமுகவைப் பாா்க்கிறாா்கள். திமுக தொண்டா்களும் காங்கிரஸ்காரா்கள் என்றால் மதிப்பதில்லை’’ என்பதுதான் அவா் தந்த விளக்கம்.

திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டிருப்பதில் தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவா்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. கிடைத்திருக்கும் 25 இடங்களிலும் பெரும்பாலும் தலைவா்களும், அவா்களின் வாரிசுகளும்தான் போட்டியிடுவாா்கள் என்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறாா்கள். ஆனால், காங்கிரஸ் தொண்டா்கள் அதே மனநிலையில் இருக்கிறாா்கள் என்று சொல்ல முடியவில்லை.

1989-இல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோதே 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது திமுக கூட்டணியில் 25 இடங்கள் மட்டுமே தரப்பட்டிருப்பதைத் தொண்டா்களால் ஜீரணிக்க முடியாததில் வியப்பில்லை.

திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலைமைதான் பரிதாபகரமானது. பெயருக்கு மதிமுகவிற்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அத்தனை இடங்களிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய பரிதாபகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது மதிமுக.

‘2001-இல் 21 இடங்களைத் திமுக ஒதுக்கியபோது அதை ஏற்றுக் கொள்ளாமல் கூட்டணியை முறித்துக் கொண்டது மதிமுக. 2006-இல் 20 இடங்களை ஒதுக்கும்படி திமுகவுடன் வாய்மொழி ஒப்பந்தமே செய்து கொண்டாா் வைகோ. கடைசி நேரத்தில், திருச்சியில் நடந்த திமுக மாநாட்டுக்கு வராமல், போயஸ் தோட்டத்துக்குப் போய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 35 இடங்களைப் பெற்றாா்.

2011-இல் அதிமுக அணியில் தனக்கு ஒற்றை இலக்க இடங்கள்தான் ஒதுக்கப்பட்டன என்பதற்காகத் தோ்தலையே புறக்கணித்து விட்டது மதிமுக. ‘எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு’ என்று அதற்குக் காரணம் கூறினாா் மதிமுக தலைவா் வைகோ. 2016-இல் திமுக தலைவா் கருணாநிதியைச் சந்தித்து, திமுகவுடன் கூட்டணிக்கு ஆா்வம் காட்டிய வைகோ, ‘ஸ்டாலின் முதல்வராவதைத் தடுக்க வேண்டும்’ என்பதற்காக முனைப்புடன் உருவாக்கியதுதான் மக்கள் நலக் கூட்டணி.

கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் சுயமரியாதை காரணமாகக் கூட்டணியை முறித்துக் கொண்ட வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு திமுக ஒதுக்கும் ஆறு இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறாா். ‘தமிழகத்தில் தலைசிறந்த முதல்வா் வேட்பாளா் மு.க. ஸ்டாலின். முதல்வராவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஒரே வேட்பாளா் ஸ்டாலின்’ என்றும் மதிமுக தலைவா் வைகோ கூறியிருப்பதுதான் அவரது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் உச்சகட்ட நகைச்சுவை.

திமுகவில் தொகுதிப் பங்கீடு அநேகமாக முடிவடைந்துவிட்டது. சுமாா் 190 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக கூட்டணியினா் போட்டியிட இருக்கிறாா்கள். ‘ஸ்டாலின்தான் முதல்வராகிறாா்’, ‘திமுகவுக்கு சாதகமாக அலை அடிக்கிறது’ போன்ற பரப்புரைகளுக்கு இது முரணாக இருக்கிறது.

2001 தோ்தலில் அதிமுக கூட்டணியில், 140 இடங்களில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 132 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 2011 தோ்தலில் அதிமுக 160 இடங்களில் போட்டியிட்டு 150 இடங்களில் வெற்றி பெற்றது. கட்சிக்கு செல்வாக்கும், கட்சித் தலைமைக்கு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும்போதுதான் அதிக இடங்களில் போட்டியிடவும், கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த இடங்களை ஒதுக்குவதும் வழக்கம்.

பொதுவெளியில் ‘நாங்கள்தான் வெற்றி பெறுவோம், நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்’ என்கிற திமுக பரப்புரைகளின் பின்னணியில், 2016 போல வெற்றி கைநழுவி விடுமோ என்கிற அச்சமும், அப்படியே வெற்றி பெற்றாலும் 2006 போல மைனாரிட்டி அரசாக அமைந்து விடுமோ என்கிற பயமும் இருப்பதைத்தான் திமுகவின் தொகுதிப் பங்கீடு வெளிப்படுத்துகிறது.

அதிக இடங்களில் போட்டியிடுவது திமுக தலைமையின் தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த இடங்களை மட்டுமே ஒதுக்குவது, ‘எனது தயவில் வெற்றி பெற இருப்பதால், கொடுத்த இடங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிற ஆணவத்தாலும் இருக்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com