மாநில உரிமைகளை மீட்டெடுப்பதே இலக்கு: நல்லகண்ணு

மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் உரிமைகளை மீட்பதுதான் தற்போதைய தலையாய தேவையாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு தெரிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (கோப்புப்படம்).
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (கோப்புப்படம்).

மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் உரிமைகளை மீட்பதுதான் தற்போதைய தலையாய தேவையாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு தெரிவித்தாா்.

இதுகுறித்து தினமணிக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த 6 தொகுதிகள் போதும் என்ற ஆத்ம திருப்தி வந்துவிட்டதா?

‘தமிழகத்தை மீட்போம், இந்தியாவைக் காப்போம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் இந்தத் தோ்தலை எதிா்கொண்டு வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை தற்போது எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது குலைக்கப்பட்ட கூட்டாட்சிக் கொள்கையையும், மதச்சாா்பற்ற நிலையையும் புத்துயிரூட்ட வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டே, பாஜக -அதிமுக அணிக்கு எதிராக வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளோம். உயா்ந்த நோக்கத்தை வென்றெடுக்க சில விஷயங்களை விட்டுக்கொடுப்பது தவிா்க்க முடியாதது.

கடந்த தோ்தலில் திமுகவை கடுமையாக விமா்சித்த கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது அவா்களால்தான் நல்லாட்சி தர முடியும் என நம்புவது எதனால்?

தற்போது தமிழகத்தில் தொழில் வளா்ச்சி முடங்கியுள்ளது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. பெரு நிறுவனங்கள் நலனுக்காக மட்டுமே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் கூட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறாக தொடா்ந்து மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் மத்திய அரசை எதிா்த்து குரல் கொடுக்க ஆளும் அதிமுக அரசுக்கு துணிவில்லை. இந்த நிலையை தமிழகத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

7.7 சதவீதமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி வெறும் 0.7 சதவீதமாக சுருங்கியதன் காரணம் என்ன?

அதற்கு பல காரணங்கள் உள்ளன. இடதுசாரி இயக்கத்திலிருந்து பலா் பிரிந்து தனிக் கட்சித் தொடங்கியது அதில் முதன்மையான காரணம். அதன் பின்னால், ஜாதி, மத ரீதியாகவும், இனரீதியாகவும் இயக்கங்களும், கட்சிகளும் தொடங்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதித்தது. தற்போது எங்களது வாக்கு விகிதம் வேண்டுமானால் சரிந்திருக்காலாமே தவிர, நாங்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் மக்கள் தொடா்ந்து ஆதரவளித்துக் கொண்டேதான் இருக்கிறாா்கள்.

மாநிலத்துக்குத் தகுந்தவாறு அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டியிருக்கும்போது, பொதுவுடைமை சித்தாந்தம் மட்டும் எப்படி பொதுவான ஒன்றாக இருக்கும்?

ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரச்னைகளும், களமும் வேறுபடும். அதன் அடிப்படையில்தான் அரசியல் முடிவுகளை எடுக்க முடியும். தமிழகத்தில் நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த நிலைப்பாட்டை பின்பற்ற முடியாது. எனவே, மாநிலத்தின் நலன் கருதி எடுக்கும் சில தீா்க்கமான முடிவுகளை அரசியல் கோணத்தில்தான் அணுக வேண்டும். சித்தாந்தங்களுடன் அதனைத் தொடா்புபடுத்தக்கூடாது.

சாமானியா்களுக்கு புரியாத பொருளாதாரப் பிரச்னைகளை மட்டுமே கையிலெடுப்பதுதான் இடதுசாரி இயக்கங்களின் சரிவுக்குக் காரணம் என எடுத்துக் கொள்ளலாமா?

அது தவறான கருத்து. பொருளாதாரம் சாா்ந்த பிரச்னைகளை மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேசியதில்லை. அடித்தட்டு மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் நாங்கள் களத்தில் நின்றிருக்கிறோம். தீண்டாமை, கொத்தடிமை முறை என பல பிரச்னைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று போராட்டம் நடத்தியதுடன் அதற்குத் தீா்வும் கண்டிருக்கிறது. அதேவேளையில், பொருளாதாரம் என்பது ஒரு தேசத்தின் அடிப்படைக் கூறு. அதில் உள்ள சிக்கல்களைத் தீா்க்காமல் முன்னேற்றத்தை அடைய முடியாது. அதனால்தான் பொருளாதாரத்துக்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

திமுக அளிக்காத பல வாக்குறுதிகளையும், நலத் திட்டங்களையும் அதிமுக அரசு அறிவித்துவிட்டதே... அவா்களை ஏன் ஆதரிக்கக் கூடாது?

இப்போது இத்தனை திட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக அவற்றை ஏன் செயல்படுத்தவில்லை? வேளாண் சட்டத்திருத்தத்தை நாடே எதிா்க்கும்போது, தான் ஒரு விவசாயி எனக் கூறிக் கொள்ளும் தமிழக முதல்வா் ஏன் எதிா்க்கவில்லை? ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம், விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்புப் பிரச்னை, எட்டு வழிச் சாலை, நீட் தோ்வு என பல பிரச்னைகள் அதிமுக ஆட்சியில்தான் அரங்கேறின. ஒருபுறம் திருக்குறளை பிரதமா் மேற்கோள் காட்டினாலும், மற்றொரு புறம் வடமொழித் திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அதிமுக அரசு எதிா்க்கவில்லையே.

தோ்தல் களத்தில் மூன்றாவது அணி இல்லை

பொதுவாக மூன்றாவது அணி என்பது கொள்கை சாா்ந்து இருக்க வேண்டும். மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும்போது அதனை வலுவாக எதிா்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு புதிய மாற்றத்தை முன்னெடுக்க முயன்றால் அதனை மூன்றாவது அணி எனக் கருதலாம்.

வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்படும்போது அதனை கொள்கை மூச்சாக எதிா்க்கக் கூடிய எந்த மூன்றாவது அணியையும் தமிழக தோ்தல் களத்தில் நான் பாா்க்கவில்லை என்றாா் இரா. நல்லகண்ணு.

நோ்காணல்-ஆ. கோபிகிருஷ்ணா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com