மூவரில் முந்தப் போவது யார்?

தமிழக அரசியலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக மாறப்போவது யார், கமல்ஹாசன்,  டி.டி.வி. தினகரன், சீமான் ஆகியோரில் முந்தப் போவது யார்
மூவரில் முந்தப் போவது யார்?


தமிழக அரசியலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக மாறப்போவது யார், கமல்ஹாசன்,  டி.டி.வி. தினகரன், சீமான் ஆகியோரில் முந்தப் போவது யார் என்பது ஞாயிற்றுக்கிழமை (மே 2)  நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவரும்.

தமிழக அரசியலில் எப்போதுமே தலைமையை மையமாக வைத்துத்தான், அதாவது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்வைத்துத்தான் வாக்காளர்கள் வாக்குச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை இதுவரை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் வரலாற்றில் கடந்த 1977,  1989 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்கள் முக்கிய திருப்புமுனைத் தேர்தல்களாக இருந்தன. யார் மாற்று சக்தி என்பதை நிர்ணயிக்கும் தேர்தல்களாகவே அவை அமைந்தன.

அதற்குப் பிறகு, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்தான் அதுபோல திருப்புமுனைத் தேர்தலாக மாறியுள்ளது.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் அரசியல் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு மீண்டும் மாற்று சக்தி யார் என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாகவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலும் மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி, மு.க.ஸ்டாலின்,  நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் என 5 முதல்வர் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 

இந்தத் தேர்தலில் அதிமுக-திமுக இடையே நேரடிப் போட்டி நிலவியது என்றாலும், அதிமுகவின் நீட்சியாக விளங்கும் தினகரன், திரைப்பட ஆளுமை என்ற வெளிச்சத்தில் கமல்ஹாசன்,  தீவிர தமிழ் தேசிய கருத்தியல், தனித்துப் போட்டி என்ற அடிப்படையில் சீமான் ஆகியோர் களமிறங்கியது, தேர்தல் களத்தில் பல மாற்றங்களை உருவாக்கியது.

தினகரன், கமல், சீமான் என "மூவேந்தர்கள்' பிரிக்கப் போகும் வாக்குகள் யாருடையவை என்பதைத்தான் அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். ஏனெனில்,  2006-இல் தேமுதிக புதிதாகக் களம் இறங்கியபோது, அந்தக் கட்சி பிரித்த வாக்குகள் 141 தொகுதிகளில் அதிமுக-திமுகவின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்தன. அதேபோல, இந்த முறை அமமுக-மநீம-நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பிரிக்கும் வாக்குகள்தான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக இருக்கப் போகிறது. 

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பிரதமர் மோடியும்,  திமுகவுக்கு ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளர்களாக இருந்த நிலையில், அமமுக-மநீம-நாம் தமிழர் ஆகியவை பிரதமர் வேட்பாளர் இல்லாத நிலையிலேயே முறையே 5.5 சதவீதம்,  3.72 சதவீதம், 3.89 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக இவர்களே நேரடியாக நிற்கும்போது நிச்சயமாக 2019-இல் இவர்கள் பெற்ற வாக்குகளைவிட இந்த முறை கூடுதல் வாக்குகள் பெறப் போவது உறுதி என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், யார் யார் எவ்வளவு வாக்கு சதவீதத்தை உயர்த்தப் போகிறார்கள் என்பது மே 2-இல் தெரிந்துவிடும்.

அமமுக: 2019 மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் பார்க்கும்போது, தினகரன் தலைமையிலான அமமுக காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில்தான் அதிக வாக்குகளைப் பெற்றது. தினகரன் பொதுத் தள தலைவராகவே தொடர்ந்து களத்தில் நின்றாலும், அவருக்கு ஏற்கெனவே கிடைத்த வாக்குகளும், அவர் பிரசாரத்துக்கு போகும்போது வந்த கூட்டமும் முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில்தான் இருந்தது என்பதைக் காண முடிந்தது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட முயற்சி எடுக்காமல் கடைசி நேரத்தில் தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்த அமமுக, முன்பைவிட மிக கூடுதலாக வாக்கு வங்கியை உயர்த்துமா என்பது கேள்விக்குறிதான். 

கடந்த முறை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுவிட்டு இந்தத் தேர்தலில், 171 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு தேமுதிக வாக்குகள் பரிமாற்றம் ஆவதில் எப்போதும் சிக்கல் இருந்து வருவதால், அமமுக கட்சித் தலைமை எதிர்பார்க்கும் அளவுக்கு வாக்குகள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால், காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் 65 தொகுதிகளில் ஒற்றை இலக்கத் தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், இரட்டை இலக்கத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் அமமுக பெற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், மாநில அளவில் 5 முதல் 6 சதவீத வாக்குகளை அமமுக தக்கவைத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

மநீம: அதேபோல, 2019 மக்களவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் கமல் வேட்பாளர்களைக் களம் இறக்கினார்.  இது 216 பேரவைத் தொகுதிகளுக்குச் சமம்.  கமல் கட்சிக்கு கடந்த தேர்தலில் சென்னை மண்டலம், கொங்கு மண்டலம், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்தன. கிட்டத்தட்ட நகரப் பகுதிகளில் உள்ள பேரவைத் தொகுதிகளில் 35 முதல் 40 தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடித்திருந்தார். கொளத்தூரில் மட்டும் இரண்டாவது இடம் கிடைத்தது.

பொதுத்தள தலைவராக உருவெடுத்த கமல், வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றைப் புறக்கணித்துவிட்டார். வெற்றியோ, தோல்வியோ மனவலிமையுடன் துணிவுடன் இந்தத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால் கிராமப்புற மக்களிடமும் தனது கட்சியையும், சின்னத்தையும் இன்னமும் அதிகமாக பிரபலப்படுத்தியிருக்க முடியும். 
மக்களவைத் தேர்தலில் துணிந்து தனித்து களம் இறங்கிய கமல், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகள்,  சமத்துவ மக்கள் கட்சிக்கு 33 தொகுதிகள், தமிழக இளைஞர் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கி, 7 பேரவைத் தொகுதிகளில் வேட்பாளரையே நிறுத்தாமல் களம் காண்கிறார்.

மேலும், தேர்தல் நெருங்க நெருங்க கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறுவதை நோக்கமாக வைத்து தினமும் அதே  தொகுதியில் காலை, மாலையில் கமல் பிரசாரத்தில் ஈடுபட்டது ஒருவகையில் அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கும் பலவீனம். திரைப்பட ஒளிவட்டம் மிக்க கமல், 234 தொகுதிகளிலும் நகரம், கிராமம்  என இரு பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தால் இப்போது பெறப்போகும் வாக்குகளைவிட இரு மடங்கு கூடுதலாகப் பெற்றிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும், கொங்கு மண்டலமான கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதால் அதன் வீச்சு கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் நிச்சயம் எதிரொலிக்கும். 

நாம் தமிழர் கட்சி: சீமான் 2016 பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ந்து தனித்து களமிறங்கி போட்டியிட்டு வருகிறார். வெற்றியோ, தோல்வியோ மிகுந்த மனவலிமையுடன் பொதுத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ந்து களமிறங்கியுள்ளார். மேலும், 234 தொகுதிகளில் தலா 117 ஆண், பெண்  வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.

மேலும், பொதுத் தொகுதியில் ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது புதிய வியூகமாகவே பார்க்கப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் ராமதாஸூக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளைத் தவிர்த்து பிற தொகுதிகளில் இளம் தலைமுறை வன்னியர் வாக்குகளும் சீமானுக்கு பரிமாற்றம் ஆகலாம்.

இதேபோல, சிறையில் இருந்து வந்த சசிகலாவை நேரில் சந்தித்தது முக்குலத்தோர் வாக்கு வங்கியிலிருந்து ஓரளவு வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.  அதிமுக, திமுகவுக்கு மாற்றுக்கட்சி வாய்ப்பை தேடும் முதல் தலைமுறை வாக்காளர்களில் பெரும் பகுதியினர் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

தென் மாவட்டங்கள், டெல்டா, கொங்கு, சென்னை என அனைத்து மண்டலங்களிலும் ஒரே சீராகவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் இதுவரை கிடைத்து வருகின்றன. அதிமுக-திமுகவை நேரடியாக ஆவேசமாகத் தாக்கி சீமான் பேசி வருவது இளம் வாக்காளர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. 

மநீம, அமமுக வாக்குகள் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே குவிந்து கிடப்பதால், ஒரு சில தொகுதிகளில் இரண்டாவது அல்லது 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மநீம, அமமுக மூன்றாவது இடம் வருவதற்கு வாய்ப்புள்ளது. ம.நீ.ம., அமமுகவை ஒப்பிடும்போது அவர்களைவிடக் கூடுதல் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பெற வாய்ப்பு அதிகம். 

அதிமுக-திமுகவுக்கு மாற்று சக்தி யார் என்பது மே 2 வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரிந்துவிடும்.

டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகிய மூவரில் முந்தப்போவது யார் என்பதைவிட, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அவர்களில் அரசியலில் தொடர்ந்து முந்தப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com