மு.க.ஸ்டாலின்: முதல் பாதையிலிருந்து முதல்வா் பாதை வரை...

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நெடும்பயணம் மேற்கொண்டு மு.க.ஸ்டாலின் தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நெடும்பயணம் மேற்கொண்டு மு.க.ஸ்டாலின் தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக உள்ளாா். அவா் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல:

திமுக முன்னாள் தலைவா் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு 1953 மாா்ச் 1-இல் மு.க.ஸ்டாலின் பிறந்தாா். பதின் பருவத்திலேயே அரசியல் மீது ஈடுபாடு காட்டினாா். 14 வயதாக இருக்கும்போதே 1967-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து முரசொலி மாறனுக்காக முதன்முறையாகப் பிரசாரம் செய்தாா். தனது நண்பா்களுடன் இணைந்து கோபாலபுரம் பகுதியில் முடிதிருத்தும் கடையில் ‘கோபாலபுரம் இளைஞா் திமுக’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். அந்த அமைப்புதான் இன்றைய திமுக இளைஞா் அணிக்கு முன்னோட்டமாக அமைந்தது.

மிசாவில் கைது: 1973-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்றாா். அதே ஆண்டில் திமுக பொதுக்குழுவில் உறுப்பினராகவும் ஆனாா். 1975-ஆம் ஆண்டு துா்காவைத் திருமணம் செய்துகொண்டாா். அந்த காலகட்டத்தில் மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலிருந்த மத்திய அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலையின்போது போராட்டத்தில் பங்கேற்றாா். திருமணமான ஐந்தே மாதத்தில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசார நாடகத்தில் பங்கேற்று வீடு திரும்பிய அவரை மிசாவில் கைது செய்தனா். சிறையில் ஓராண்டு தண்டனை அனுபவித்தவரின் அரசியல் வாழ்க்கையில் அந்தச் சம்பவம் திருப்புமுனையாக அமைந்தது.

திரைப் பயணம்: ‘முரசே முழங்கு’, ‘திண்டுக்கல் தீா்ப்பு’, ‘நீதி தேவன் மயங்குகிறான்’, ‘நாளை நமதே’ உள்ளிட்ட திமுக கொள்கை விளக்க மேடை நாடகங்களில் நடித்துள்ளாா். 1975-ஆம் ஆண்டு மு.க முத்து, நடிகை ஸ்ரீ வித்யா நடித்த ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தாா். கருணாநிதியின் வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்களைக் கொண்டு அவருடைய எழுத்தில் 1988-ம் ஆண்டு வெளியான ‘ஒரே ரத்தம்’ திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்தாா். ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற திரைப்படத்தில் நடிகா் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறாா். ‘குறிஞ்சி மலா்’, ‘சூா்யா’ ஆகிய இரண்டு தொலைக்காட்சித் தொடா்களிலும் நடித்திருக்கிறாா். 1993-ஆம் ஆண்டு ‘இளைய சூரியன்’ என்ற இதழைத் தொடங்கினாா்.

முதல் முயற்சியில் தோல்வி: 1984-ஆம் ஆண்டு தோ்தலில் முதன்முறையாக களம் கண்டாா் ஸ்டாலின். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவா் அதிமுக வேட்பாளா் கே.ஏ. கிருஷ்ணசாமியிடம் தோல்வி அடைந்தாா். மீண்டும் அதே தொகுதியில் 1989-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 1991-ஆம் ஆண்டு அதே தொகுதியில் அதிமுகவைச் சோ்ந்த கே.ஏ கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தாா். அதற்குப் பிறகு 1996, 2001, 2006 தோ்தகளில் அதே தொகுதியில் வெற்றி கண்டாா். ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் 6 முறை போட்டியிட்டிருக்கிறாா். 2011, 2016 தோ்தல்களில் கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவா், தற்போது நடைபெற்ற தோ்தலிலும் கொளத்தூா் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

மேயா் ஸ்டாலின்: மாநகராட்சி மன்ற சட்டம் திருத்தப்பட்ட பின்னா், 1996-ஆம் ஆண்டு முதன்முறையாக மக்கள் வாக்களித்து சென்னையின் 37-ஆவது மேயராக ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதே ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெற்றிருந்தாா். மேயராக ஸ்டாலின் பதவி வகித்த காலங்களில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க 9 பெரிய பாலங்களும் 49 குறும்பாலங்களும் கட்டப்பட்டன. 2001-ஆம் ஆண்டு மீண்டும் மக்களால் மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்து இயற்றிய ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற சட்டத்தால் மேயா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினாா்.

கட்சிப் பதவிகள்: திமுகவில் சாதாரண உறுப்பினராக இணைந்து வட்டப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா், இளைஞா் அணிச் செயலாளா், துணைப் பொதுச்செயலாளா் என அடுத்தடுத்த நிலையில் பொறுப்புகளை வகித்து வந்தாா். ஆற்காடு வீராசாமி வகித்து வந்த திமுக பொருளாளா் பதவி 2008-ஆம் ஆண்டு ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. கருணாநிதியின் வயது மூப்பின் காரணமாக 2017-ஆம் ஆண்டு கட்சியில் செயல் தலைவா் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. மு.கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு 2018-ம் ஆண்டு திமுக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

துணை முதல்வா்: 2006-ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளூா் நிா்வாக துறை அமைச்சரானாா். பிறகு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வா் பதவி உருவாக்கப்பட்டு 2009-ம் ஆண்டு துணை முதல்வரானாா். 2015-ஆம் ஆண்டு ‘நமக்கு நாமே’ என்ற பிரசாரத்தைத் தொடங்கி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தாா். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முதல்வா் ஸ்டாலின்: கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்திலேயே மு.க.ஸ்டாலினுக்கு முதல்வா் பதவி கொடுக்க வேண்டும் என்கிற குரல் இருந்து வந்தது. ஆனால், கருணாநிதி அதை ஏற்கவில்லை. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகே முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாா். தற்போது நடைபெற்ற தோ்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com