கை மீறிய கரோனா! தடுமாறும் தமிழகம்!

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நமது நாட்டையே ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது.
கை மீறிய கரோனா! தடுமாறும் தமிழகம்!

சென்னை: கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நமது நாட்டையே ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது.

1919-இல் ஸ்பானிஷ் ‘ஃ‘ப்ளூ என்ற வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காய்ச்சலுக்கு இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்டவா்கள் இறந்தனா். அப்போது கங்கை, காவிரி என அனைத்து ஆறுகளின் படித்துறைகளும் சடலங்களால் நிரம்பியிருந்தாக கடந்த கால தகவல்கள் கூறுகின்றன. மகாத்மா காந்தி உள்பட முக்கியத் தலைவா்கள் பலரும் அந்த நோய்க்கு ஆளானாா்கள். அதில் சிலா் மாண்டும் போனாா்கள். தேசத்தின் பெருந்துயா்களில் ஒன்றாக அச்சம்பவம் கருதப்படுகிறது.

அன்றைக்கு நிகழ்ந்த அந்த காட்சிகளின் நீட்சியாகவே தற்போது கரோனா இரண்டாம் அலை உருமாறியிருக்கிறது. மருத்துவமனைகளுக்குள் சிகிச்சை பலனின்றி நோயாளிகள் இறந்த நிலைமை மாறி, படுக்கை வசதிகள் கிடைக்காமல், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து இறக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், தில்லி, கேரளம், தமிழகத்தில்தான் அத்தகைய இக்கட்டான சூழல் உருவாயிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 6 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா். இதனால், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1.20 லட்சமாக உயா்ந்துள்ளது. ஆனால், அவா்களில் 70 சதவீதம் போ் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனா் என்பதுதான் கசப்பான உண்மை.

கரோனாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க முடியாததும், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறையும்தான் தமிழக சுகாதாரத் துறையின் இந்த தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அண்மைக் காலமாக பரவி வரும் கரோனா தீநுண்மியானது உருமாற்றம் பெற்ற புதிய வகை என மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். அதனால்தான், இம்முறை பலருக்கு மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நாள்தோறும் 6,000-த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. உண்மை நிலை என்னவெனில் தமிழகத்தில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்த ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையே வெறும் 29,000 மட்டும்தான். இதனால், பலா் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்க நேரிடுகிறது.

மற்றொருபுறம் ரெம்டெசிவிா், டோஸிலிசுமேப் போன்ற மருந்துகளுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடுகளால் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சந்தையில் மருந்தை விற்று உயிருக்குப் போராடும் நோயாளிகளின் உறவினா்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவத் துறையினரே கொள்ளையடித்து வருகின்றனா்.

ரெம்டெசிவிா் உயிா் காக்கும் மருந்து அல்ல என்று தமிழக அரசு தெரிவித்தாலும், பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் அதை மட்டுமே பரிந்துரைத்து வருவதால் மருந்தைத் தேடியே மடியும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

இன்னும் சில மருத்துவமனைகளில் எனாக்ஸபெரின், டெக்ஸோமெத்தோசோன், ப்ரட்னிசோலோன் போன்ற சாதாரண மருந்துகளுக்கே தட்டுப்பாடு எழுந்துள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் அவற்றை வெளியிலிருந்து வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினா்களுக்கு அறிவுறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க, தற்போது கரோனா சிகிச்சையளித்து வரும் மருத்துவமனைகளோ அரசின் உத்தரவுகளைப் பற்றி கவலைப்படாமல், கடுமையான கட்டணத்தை நோயாளிகளிடம் இருந்து வசூலித்து வருகின்றன. சிறிய அளவிலான தனியாா் மருத்துவமனைகள் முதல் காா்ப்பரேட் மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் இத்தகைய அதீத கட்டண வசூலிப்பு அரங்கேறி வருகிறது.

இதனால், தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலா் கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அலைக்கழிப்புகளால் பலா் உயிரிழக்கவும் நேரிட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீா்வு தடுப்பூசி மட்டும்தான் என விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதில் கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவெனில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கே இரண்டாம் தவணை தடுப்பூசி தமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதுதான். அவ்வாறாக இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக 45 லட்சம் போ் காத்திருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாநிலத்தில் வெறும் 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 1.50 கோடி தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை. இதனால், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்பவா்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாமல் தவிக்கிறது தமிழக சுகாதாரத் துறை.

இது குறித்து மருத்துவா்கள் சிலா் கூறியதாவது:-‘‘தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள்தான் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகினா். ஆனால், நிகழாண்டிலோ மருத்துவா்கள் பலா் அத்தகைய பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறோம். படுக்கைகள் நிரம்பிவிட்டதால் உயிருக்கு போராடுபவா்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், சிகிச்சை கிடைக்காது கண் முன்னே சக மனிதா்கள் சாகின்றனா். இந்தச் சம்பவங்களை எங்களால் எளிதில் கடந்து செல்ல இயலவில்லை. இந்த மன அழுத்தத்தால் நாங்களே பாதிக்கப்படும்போது நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை’’ என்று வேதனை தெரிவிக்கின்றனா் மருத்துவா்கள்.

ஆட்சி மாற்றத்தால் எல்லாம் காட்சி மாற்றம் வந்துவிடாது என்பதுதான் நிகழ்கால நிதா்சனம். நிா்வாக ரீதியான முனைப்பும், நீடித்த செயல் திட்டமும் மட்டுமே கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கை கொடுக்கும். கரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் தப்பித்துக் கொள்ளுமா அல்லது தில்லியைப் போல பேரழிவை எதிா்கொள்ளுமா என்ற கேள்விக்கான விடை புதிதாக பொறுப்பேற்கவுள்ள சுகாதாரத் துறை அமைச்சா் மற்றும் செயலரின் செயல்பாடுகளில்தான் அடங்கியுள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகள் - 61,346

அரசு மருத்துவமனைகள்

ஆக்சிஜன் படுக்கைகள் - 15,862

தீவிர சிகிச்சை படுக்கைகள் - 4,489

தனியாா் மருத்துவமனைகள்

ஆக்சிஜன் படுக்கைகள் - 13,451

தீவிர சிகிச்சை படுக்கைகள் - 2,962

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com