பினராயி விஜயனை மீண்டும் முதல்வராக்கிய பாஜக!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியே மறுபடியும் வென்று, பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகி இருக்கிறார்.
பினராயி விஜயனை மீண்டும் முதல்வராக்கிய பாஜக!



கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியே மறுபடியும் வென்று, பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகி இருக்கிறார். இதன்மூலமாக, கேரளத்தில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்று நிலவிவந்த தொடர் வழக்கத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

ஆனால், இந்த வெற்றியை அவர் பெறுவதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த எதிரியான பாஜக. இதுதான் தற்போதைய கேரள பேரவைத் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான திருப்பம்.

2016 பேரவைத் தேர்தலில் 91 தொகுதிகளில் வென்ற இடது ஜனநாயக முன்னணி, 2021 தேர்தலில் கூடுதலாக 8 இடங்களில் வென்று 99 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, சென்ற தேர்தலைவிட 6 இடங்களை இழந்து, 41 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இம்முறை சென்ற தேர்தலைவிட அதிகமான கட்சிகளை தனது கூட்டணியில் கொண்டிருந்தது இ.ஜ.முன்னணி.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், லோக்தந்திரிக் ஜனதாதளம், இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ணன்), ஜனாதிபத்ய கேரள காங்கிரஸ் ஆகியவை இணைந்த இ.ஜ.முன்னணி, சில தொகுதிகளில் சுயேச்சைகளையும் ஆதரித்தது.  

எதிரணியில், காங்கிரஸ் கட்சி,  இ.யூ.முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரள தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி (ஜான்), புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஐக்கிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டன. 

இவை இரண்டிற்கும் போட்டியாக மூன்றாவது அணி அமைத்த பாஜக, பாரத தர்ம ஜனசேனா, அதிமுக, கேரள காமராஜ் காங்கிரஸ், ஜனாதிபத்ய ராஷ்ட்ரீய சபா, ஜனநாயக சமூகநீதி கட்சி ஆகியவை இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்திருந்தது. 

கேரளத்தைப் பொருத்த வரை ஒவ்வொரு பேரவைத் தேர்தலிலும் ஆட்சியாளர்களை மாற்றுவதை அந்த மாநில மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். ஒரு கட்சியே தொடர்ந்து ஆள்வதால் ஊழல் பெருகும் என்பது கேரள மக்களின் கருத்தாக இருந்தது. எவ்வளவு நல்லாட்சி அளித்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி என்ற மனப்பாங்கே அங்கு நிலவிவந்தது.

அதனால்தான் இதுவரையிலான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணியும் (1980, 1987, 1996, 2006, 2016), ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (1982, 1991, 2001, 2011), தேர்தல்களில் மாறி மாறி வென்று வந்தன. 

அந்தத் தொடர் வழக்கப்படி இம்முறை (2021) கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. இதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திடீர் வளர்ச்சியே காரணமாகி உள்ளது.

பாஜகவைப் பொருத்த வரை, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமமான அரசியல் எதிரிகளே. எனினும் இடதுசாரிகளின்  வன்முறையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால், பாஜக ஆதரவாளர்களுக்கு லேசான காங்கிரஸ் சாய்வு உண்டு. 

அதனால்தான் கேரளத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஏற்ப பேரவைத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்குப்பதிவு சாத்தியமாகவில்லை. எனினும் கடந்த சில தேர்தல்களில் பாஜகவின் வாக்குவங்கி சிறுகச் சிறுக உயர்ந்து வந்துள்ளது. பாஜகவின் வளர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாகி வருகிறது. 

அதிலும் இம்முறை பாஜக அதீத நம்பிக்கையுடன் பேரவைத் தேர்தலை அணுகியது. இரட்டை இலக்கத்தில் மாநிலப் பேரவைக்கு தங்கள் உறுப்பினர்களை அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், கேரள பாஜக கடுமையாக உழைத்தது. மத்திய, மாநிலத் தலைவர்களும் ஆளும் கூட்டணி, ஆண்ட கூட்டணிக்கு சற்றும் சளைக்காமல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இதன் விளைவாக, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 11 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்; ஆயிரத்துக்கு  உள்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இரு இடங்களில் தோல்வியுற்றனர். அதேசமயம், போட்டியிட்டவற்றில் 90 சதவீத இடங்களில் மூன்றாமிடமும் கணிசமான வாக்குகளும் பெற்றனர். சுமார் 25 தொகுதிகளில் 30,000க்கு மேற்பட்ட வாக்குகளை பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். பாஜகவின் வாக்குவிகிதம், 2016 தேர்தலில் 10.6 சதவீதமாக இருந்தது 2021 தேர்தலில் 11.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு பாஜக பெற்ற கணிசமான வாக்குகளே சுமார் 60 தொகுதிகளில் ஐ.ஜ.முன்னணி தோல்வியுறக் காரணமாகியுள்ளது. குறிப்பாக, வாக்கு வித்தியாச அடிப்படையில், ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் 3 தொகுதிகளிலும், 2000க்குக் குறைவான வாக்குகளில் 3 தொகுதிகளிலும் 5000க்கு குறைவான வாக்குகளில் 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றுள்ளது. 

மேலும், 10,000க்குக் குறைவான வாக்குகளில் 16 தொகுதிகளிலும், 20,000க்குக் குறைவான வாக்குகளில் 16 தொகுதிகளிலும் 30,000க்குக் குறைவான வாக்குகளில் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்தத் தொகுதிகளில் பாஜக பெற்ற கணிசமான வாக்குகளே காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் கனவை நிறைவேற விடாமல் தடுத்துள்ளன.

இ.ஜ.முன்னணி வெல்லக் கூடாது என்பதற்காக இதுவரை காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்த பாஜக ஆதரவாளர்கள் பலரும்கூட, இம்முறை காங்கிரஸ் தலைவர்களின் தீவிர பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டால் மனம் மாறிவிட்டனர். மாநிலத்தை ஆளும் இ.ஜ.முன்னணிக்கு எதிரான தாக்குதல்களை விட, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பிரதமர் மோடி மீதான தாக்குதல்களையே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அதிகமாக மேற்கொண்டனர். அதன்மூலமாக, கேரளத்தில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை கூடுதலாகப் பெற முடியும் என்று  அவர்கள் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

ஆனால், சபரிமலை கோயில் மாசுபடுத்தப்பட்ட விவகாரத்தில் ஹிந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, பினராயி விஜயன் அரசுக்கு எதிராக பாஜகவைவிட அதிகமாகக் குரல் கொடுத்ததன் பலனை அக்கட்சி தற்போது அறுவடை செய்துள்ளது. அதன் காரணமாக, சிறுபான்மையினரின் வழக்கமான ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்திருப்பது பத்தனம்திட்டா மாவட்டத் தொகுதிகளில் ஐ.ஜ.முன்னணி பெற்ற வாக்குகளிலிருந்து புலப்படுகிறது. சபரிமலை இடம்பெற்றுள்ள இந்த மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளையும் இ.ஜ.முன்னணியே கைப்பற்றி உள்ளது.

தவிர, சென்ற தேர்தலில் பாஜகவின் ஓ.ராஜகோபால் வென்ற ஒற்றைத் தொகுதியான நேமத்தில் இம்முறை பாஜக வெல்லக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளிதரன்  களமிறங்கினார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார்; பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் தோற்றார். ஆனால், இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சிவன்குட்டி தான் வென்றார். அதேசமயம், பாஜக ஆதரவாளர்களின் மறைமுக ஆதரவை, காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் இழந்தது. 

இவ்வாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் போட்டியால் மாறியமைந்த கேரள தேர்தல் களத்தில், பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் பெற முடியாமல், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் இழந்து,  தோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ். அதன் காரணமாகவே, இரண்டாவது முறையாக வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறார் பினராயி விஜயன். மூன்று முறை முதல்வராக இருந்த இ.கே.நாயனாரே நிகழ்த்தாத சாதனை இது!

அதுமட்டுமல்ல, தேசிய அளவில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழுவிலும் பினராயி விஜயனின் மதிப்பு  அதிகரித்திருக்கிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் சைலஜாவுக்கு புதிய அரசில் வாய்ப்பளிக்காமல் தவிர்க்கும் அளவுக்கு முதல்வர் பினராயி விஜயனின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தனது மருமகனையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருப்பது அவரது செல்வாக்கின் வெளிப்பாடு. 

போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றாலும், தனது இரு அரசியல் எதிரிகளில் ஒருவரை கடுமையாக நிலைகுலையச் செய்திருக்கிறது கேரள பாஜக. இருப்பதையும் பறிகொடுத்து திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. எது எப்படியோ பினராயி விஜயனை மீண்டும் முதல்வராக்கிவிட்டது பாஜக!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com