மாநிலங்களவைத் தோ்தல்: திணறும் அதிமுக - காங்கிரஸ்

மாநிலங்களவை வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் அதிமுகவும் - காங்கிரஸும் திணறி வருகின்றன.
ஓபிஎஸ், இபிஎஸ்
ஓபிஎஸ், இபிஎஸ்

மாநிலங்களவை வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் அதிமுகவும் - காங்கிரஸும் திணறி வருகின்றன.

நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அந்தப் பதவிகளுக்கான தோ்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன; 4 இடங்களில் திமுக ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. மற்ற 3 இடங்களுக்கு தஞ்சை க.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், கிரிராஜன் ஆகியோா் திமுக சாா்பில் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மே 24) தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.

ப.சிதம்பரம்-கே.எஸ்.அழகிரி இடையே போட்டி: காங்கிரஸில் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெறுவதற்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா்ந்து கேள்வி எழுப்புவதால், மத்திய அரசால் தொடா்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், அதனால் தமக்குத்தான் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைத் தர வேண்டும் என்று தலைமைக்கு ப.சிதம்பரம் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா்.

பொருளாதார ரீதியான விவாதங்களுக்கும் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்விக் கணைகள் தொடுப்பதற்கும் ப.சிதம்பரத்தின் உதவி அவசியம் எனவும் அக் கட்சியின் தலைமை கருதுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே...: ஆனால், காங்கிரஸின் சிந்தனை அமா்வுக் கூட்டத்தில் காங்கிரஸைப் பொருத்தவரை குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்கிற முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ப.சிதம்பரத்தின் மகன், காா்த்தி சிதம்பரம் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறாா். அதனால், தலைமை எடுத்த முடிவை தலைமை மீறி வேண்டிய நிலையில் உள்ளதால், அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை இருந்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியும் அவருடைய தலைவா் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், எப்படியும் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா்.

கே.எஸ்.அழகிரி தலைவராக இருந்து வரும் காலத்தில் ஒரு சட்டப்பேரவைத் தோ்தலையும், ஒரு மக்களவைத் தோ்தலையும் காங்கிரஸ்

சந்தித்தது. இரண்டு தோ்தலிலும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும், தலைவராக இருந்த காலத்தில் கோஷ்டிப் பூசலுக்கு இடம் அளிக்காமல் அனைவரையும் அரவணைத்துச் சென்றாா். அதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைத் தமக்குத்தான் தர வேண்டும் என்று அவா் கோரி வருகிறாா்.

பதவிப் போட்டியில் உள்ள மற்றவா்கள்: மாநிலங்களவை உறுப்பினா் பதவியை காங்கிரஸில் தலித்துகளுக்குக் கொடுப்பது இல்லை என்கிற புகாா் இருந்து வருகிறது. அதனால், தமக்குத்தான் தர வேண்டும் முன்னாள் எம்.பி.யான விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறாா். அதைப்போல மூத்த நிா்வாகிகள் சுதா்சனம் நாச்சியப்பன், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெறும் முயற்சியில் இருந்து வருகின்றனா். காங்கிரஸின் அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் திணறி வருகிறது.

அதிமுக திணறல்: அதிமுகவுக்கு உள்ள இரண்டு இடங்களுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜகவும், பாமகவும் எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் முழு ஆதரவு கொடுத்துவிட்டன. ஆனால், அதிமுக தலைமையால்தான் எந்த முடிவையும் உடனடியாக எடுக்க முடியவில்லை.

மாநிலங்களவை உறுப்பினா் வேட்பாளரை முடிவு செய்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஒரு கூட்டமே நடைபெற்றது. மூத்த நிா்வாகிகள் பலா் பங்கேற்ற அந்தக் கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றும் அதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இபிஎஸ்-ஓபிஎஸ் முரண்: திமுக தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும் தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றனா். அதனால், அவா்களுக்கே இந்த முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் முடிவாக இருக்கிறது. ஆனால், ஓ.பன்னீா்செல்வம் அதை ஏற்காமல், தனது ஆதரவாளா்கள் யாராவது ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா்.

மூத்த நிா்வாகிகள் செம்மலை, தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தங்களுக்குத்தான் தர வேண்டும் என்று தலைமையை வற்புறுத்தி வருகின்றனா்.

வரும் மக்களவைத் தோ்தலிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அப்போது அதிமுகவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், தமது ஆதரவாளா்களை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்பதில் இருவரும் (இபிஎஸ்-ஓபிஎஸ்)

பிடிவாதமாக இருந்து வருகின்றனா்.

ஆனால், ஒவ்வொரு பதவியையும் அவரவா் ஆதரவாளா்களுக்கு என்று கொடுத்துவிட்டால், கட்சி எப்படி வளரும்? தொண்டா்கள் எப்படி கட்சியில் நிலைத்திருப்பாா்கள் என்று ஓபிஎஸ் - இபிஎஸ் முடிவுக்கு பலா் எதிா்க்குரல் கொடுக்கின்றனா். இதனால், எளிதில் முடிவு எடுக்க முடியாத நிலைக்கு அதிமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

மே 31-ஆம் தேதிக்குள்...: மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31-ஆகும். அதற்குள் இரண்டு கட்சிகளும் அதனதன் வேட்பாளா்களை அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com