வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள்

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் இந்திய மாணவர்கள்


வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு சென்று வேலை செய்தால் அதிக ஊதியம் கிடைக்கும், வாழ்க்கையில் விரைவாக முன்னேற முடியும், உயர்தரமான வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமே வெளிநாட்டு வேலை மீதான மோகத்துக்கான அடிப்படைக் காரணியாக உள்ளது. இருப்பினும் இந்தியாவில் கடந்த 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினிச் சாவுகளால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்வாதாரம் தேடி புலம் பெயர்ந்தனர்.

உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் 18 கோடி

தென்னாப்பிரிக்கா, மியான்மர், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். உலக நாடுகளில் 13.45 கோடி இந்தியர்களும், வம்சாவளியினர் 18.68 கோடி பேரும் உள்ளனர் என்கிறது இந்திய வெளியுறவுத் துறையின் புள்ளி விவரம்.

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக ஆசிய கண்டத்தில் இருக்கும் சீனா இருந்தாலும், ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புலம் பெயரும் மக்களாக இந்தியர்கள் இருக்கின்றனர். கல்வி, தொழில் வளர்ச்சி ஆகியவை உள்நாட்டிலேயே அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், உடலுழைப்புத் தொழிலாளர்கள் மட்டும் ஆங்காங்கே புலம் பெயர்ந்து வந்தனர். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி பெறத் தொடங்கிய பிறகு "ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் அதிக ஊதியம் கிடைக்கக் கூடிய வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பிறகு கல்வி என்பது உலகளாவிய வர்த்தகப் பொருளாக மாறியதும், குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைக்கும் நாடுகளை இந்தியர்கள் தேடத் தொடங்கினர்.

50 ஆயிரத்தில் இருந்து 4.44 லட்சமாக உயர்வு

கடந்த 2000-ஆம் ஆண்டு வரையிலும் கல்விக்காக ஆண்டுதோறும் புலம் பெயரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021-இல் மட்டும் அது 4.44 லட்சமாக உயர்ந்திருந்தது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நடப்பாண்டில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி வரை 1.33 லட்சம் மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அதேபோல, கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கின்படி, வெளி நாடுகளில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.46 லட்சமாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2022-இல் சுமார் 3 மடங்கு அதிகரித்து 13.24 லட்சமாக உயர்ந்திருப்பதாக வெளியுறவுத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்திய மாணவர்களின் உயர் கல்வி தேடலுக்கான இடங்களில் அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, பிரிட்டன் போன்ற நாடுகள் முதல் வரிசையில் உள்ளன. அதேபோல, பட்டப்படிப்பைக் காட்டிலும் பட்ட மேற்படிப்புக்காக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இன்றும் கனவு தேசம் அமெரிக்கா

மேலும், இந்தியாவில் இருந்து வேலைக்காகப் புலம் பெயர்ந்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2021 நிலவரப்படி 3.20 கோடியாக இருக்கிறது. வேலைக்காகப் புலம் பெயர்பவர்களின் கனவு தேசமாக இன்றும் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் 44.60 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சவூதி அரேபியா, மியான்மர், பிரிட்டன், கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இதில் சுவாரசியம் என்னவென்றால் உக்ரைன், ரஷியா, கிர்கிஸ்தான், ஜார்ஜியா போன்ற நாடுகளை உயர் கல்வி பயில்வதற்காகத் தேர்வு செய்யும் இந்திய மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு அந்த நாடுகளில் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை என்றும் குறைந்த கல்வி கட்டணத்துக்காகவே அந்த நாடுகளை விரும்புவதும் தெரிய வந்துள்ளது.

குறைந்த மதிப்பெண் பெற்றாலும் சேர்க்கை

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதினாலும் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு சுமார் 88 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களே உள்ளன. இதனால் ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக மட்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

அத்துடன் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே பல வெளிநாட்டுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. சில நாடுகளிலோ பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்வதாலும் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படிப்பதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மருத்துவம் மட்டுமின்றி கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் பட்டம் பெறுவதற்காகவும் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை விரும்புகின்றனர்.

அதேபோல, வெளிநாடுகளுக்கு வேலை, படிப்புக்காகச் செல்வதில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களும், குஜராத், பஞ்சாப் போன்ற முன்னேறிய மாநிலங்களுமே முன்னணியில் இருந்த நிலை மாறி, தற்போது ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளிநாடு செல்லும் போட்டியில் வெகுவாக முன்னேறி வருவதாகவும்
புள்ளி - விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com