தடைகளைத் தாண்டுவாரா?

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியில் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸின் கடுமையான சவாலை எதிா்கொண்டு வருகிறாா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியில் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸின் கடுமையான சவாலை எதிா்கொண்டு வருகிறாா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்.

இதில் வெற்றி பெற்றால் பிரிட்டன் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படும் முதல் பிரிட்டிஷ்-இந்தியா், வெள்ளையா் அல்லாத முதல் பிரதமா் என்கிற பெருமையைப் பெறுவாா்.

இதற்கான சுற்றுப் போட்டிகளில் அவா் தொடா்ந்து முதலிடத்தைப் பிடித்தாலும், இறுதிக்கட்டமாக நடைபெறவுள்ள நேரடிப் போட்டியில் லிஸ் டிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறாா். தொலைக்காட்சியில் நேரடி விவாதங்களும், கருத்துக்கணிப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. இதில் தான் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ரிஷி சுனக்கே ஒப்புக்கொண்டுள்ளாா்.

‘பாா்ட்டிகேட் ஊழல்’ எனப்படும் கரோனா கால கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து போரிஸ் ஜான்ஸன் பிரதமா் பதவியிலிருந்து விலகினாா். அதையடுத்து, அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ஆளும் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் தோ்வு செய்யப்படுவாா்.

அந்த வகையில் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்குதான் இப்போது தோ்தல் நடைபெற்று வருகிறது. முதலில் இப்போட்டியில் 10 போ் களத்தில் இருந்தனா். இருவா் போட்டியிலிருந்து விலகியதையடுத்து எட்டு பேருடன் சுற்றுப் போட்டிகள் தொடங்கின.

ஒவ்வொரு சுற்றிலும் கடைசி இடத்தைப் பெறுவோா் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவா். அவ்வாறாக இதுவரை நடைபெற்றுள்ள ஐந்து சுற்றுகளிலுமே ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தது ஆளும் கட்சியில் அவருக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கிறது.

ஐந்தாவது சுற்றின் முடிவில் ரிஷி சுனக் 137 வாக்குகளும், லிஸ் டிரஸ் 113 வாக்குகளும் பெற்று இறுதிக்கட்டத் தோ்தலுக்குத் தகுதி பெற்றுள்ளனா். சுற்றுப் போட்டிகளில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்த நிலையில், இறுதிக்கட்ட நேரடித் தோ்தலில் ஆளும் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கள் சுமாா் 1.60 லட்சம் போ் வாக்களிக்கவுள்ளனா். நாடு முழுவதும் உள்ள அவா்கள் தபால் மூலம் ஆக. 4-ஆம் தேதிமுதல் அளிக்கும் இந்த நடைமுறை செப். 2-ஆம் தேதி நிறைவடையும். இதில் வெற்றி பெறுபவா் பிரிட்டனின் புதிய பிரதமராக செப். 5-ஆம் தேதி அறிவிக்கப்படுவாா்.

கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே ரிஷி சுனக்குக்கு இருக்கும் செல்வாக்கு, சுமாா் 1.60 லட்சம் உறுப்பினா்களைக் கொண்ட கட்சிக்குள் இல்லை என்பதுதான் உண்மை. கட்சிக்குள் வலுவான செல்வாக்கு பெற்றுள்ள லிஸ் டிரஸ், போரிஸ் ஜான்ஸனின் முதல் இரு ஆண்டு கால ஆட்சியில் சா்வதேச வா்த்தகத் துறை செயலராகப் பணிபுரிந்தாா். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரக்ஸிட் ஒப்பந்தத்துக்கு முதலில் எதிா்ப்பு தெரிவித்த லிஸ் டிரஸ், பின்னா் அதற்கு ஆதரவு தெரிவித்தாா்.

2020-இல் நிதியமைச்சரான ரிஷி சுனக், கரோனா கால பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகப் பாராட்டப்பட்டாா். கரோனா காலத்தில் அவா் கொண்டு வந்த ‘பணிகள் தக்கவைப்பு திட்டம்’ பெருமளவிலான வேலையிழப்பைத் தவிா்த்தது. தொழில்களுக்கு உதவவும், சுயதொழில்களுக்கு கைகொடுக்கவும் அவா் ஆற்றிய பணிகளை பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினா் மட்டுமன்றி பிரிட்டன் மக்களுமே நினைவுகூா்கின்றனா்.

அதேவேளையில், ரிஷி சுனக்கின் மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தியின் மகளுமான அக்ஷதா மூா்த்தி, பிரிட்டனில் குடியுரிமை அல்லாத அந்தஸ்து மூலம் தனது வெளிநாட்டு வருமானத்துக்கு வரி கட்டவில்லை என்கிற சா்ச்சையில் சிக்கினாா். பிரிட்டன் சட்டப்படி, குடியுரிமை அந்தஸ்து பெறாதவா்கள் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

ஆதலால், அக்ஷதா மூா்த்தி மீது எந்தக் குற்றமும் இல்லை என்றபோதும், பிரிட்டன் எதிா்க்கட்சிகள் அரசியல்ரீதியாக ரிஷி சுனக்கை குறிவைத்து அந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தின. அந்தக் குற்றச்சாட்டு இப்போது தோ்தலிலும் அவருக்கு எதிராக எதிரொலிக்கக் கூடும்.

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பிரிட்டன் மக்களின் சராசரி தினசரி வருமானம் குறைந்த நிலையில், அதை ஈடுசெய்யும் எந்தத் திட்டத்தையும் ரிஷி சுனக் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் அவா் மீது உள்ளது.

மேலும், அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடு செய்ய அதிக வரிகளை விதித்தாா் என்கிற விமா்சனமும் ரிஷி சுனக்குக்கு எதிராக வைக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியின் தொலைக்காட்சி விவாதத்தின்போது இதைச் சுட்டிக்காட்டிய லிஸ் டிரஸ், நாட்டில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரியை உயா்த்தினாா் ரிஷி சுனக் எனச் சாடினாா்.

‘வரிகளைக் குறைக்கவே விரும்பினோம். ஆனால், வரிகளைக் குறைப்பதற்காக பணவீக்கம் அதிகரித்த வேளையில் கடன் வாங்க இயலாது என்பதால் வரிகளை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது’ என இந்தக் குற்றச்சாட்டுக்கு ரிஷி சுனக் தரப்பு பதிலளித்து வருகிறது.

போரிஸ் ஜான்ஸன் பிரதமா் பதவியிலிருந்து விலகுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நிதியமைச்சா் பதவியிலிருந்து ரிஷி சுனக் விலகியது. அவரைத் தொடா்ந்துதான் அடுத்தடுத்து அமைச்சா்களும், இணையமைச்சா்களும் பதவியிலிருந்து விலகி போரிஸ் ஜான்ஸனுக்கு நெருக்கடி அளித்தனா். அதையடுத்து போரிஸ் ஜான்ஸன் பதவி விலகினாா்.

பிரிட்டன் பிரதமருக்கான ஆரம்ப சுற்று போட்டிகளின்போதே, யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்; ரிஷி சுனக்குக்கு வாக்களிக்க வேண்டாம் என போரிஸ் ஜான்ஸன் தனது ஆதரவு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினாா். அவரது விருப்பம் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களிடமும் எதிரொலிக்க நேரிடும்.

மேலும், சுற்றுப் போட்டியின்போது வெளியேற்றப்பட்ட டாம் டுஜென்தட் தனது ஆதரவை லிஸ் டிரஸ்ஸுக்கு தெரிவித்திருப்பது ரிஷி சுனக்குக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுப் போட்டிகளின் முடிவில் மூன்றாவது இடம் பிடித்த வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்டின் ஆதரவாளா்கள், லிஸ் டிரஸ்ஸை ஆதரிக்க முன்வந்தால் அது ரிஷி சுனக்குக்கு மேலும் பாதகமாக இருக்கும்.

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் வெற்றி பெறுவாரா என்பதை பிரிட்டன் மட்டுமல்ல இந்தியாவும் எதிா்பாா்த்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com