நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிகபட்ச செலவுத் தொகை சாத்தியமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கி களம் காணும் வேட்பாளர்களின் வெளிப்படையான செலவினங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் தேவையாக உள்ள நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிகபட்ச செலவுத் தொகை சாத்தியமா?


திண்டுக்கல்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கி களம் காணும் வேட்பாளர்களின் வெளிப்படையான செலவினங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் தேவையாக உள்ள நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச செலவுத் தொகை பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளுக்குட்பட்ட 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளுக்குட்பட்ட 7,621 வார்டுகள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் 1.37 கோடி ஆண்கள், 1.42 கோடி பெண்கள், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2.79 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக, 31ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதிகபட்ச செலவுத் தொகை:  தேர்தல் அறிவிக்கையை ஜனவரி 26-ஆம் தேதி வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள், பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை  உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், முக்கிய அம்சமாக தேர்தல் செலவினத் தொகையாக பேரூராட்சி முதல் மாநகராட்சி வார்டுகள் வரை குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்துள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம்.
அதன்படி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.17ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு (முதல் மற்றும் 2-ஆம் நிலை) போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.34 ஆயிரம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி உறுப்பினர் பதவிகள், மாநகராட்சி உறுப்பினர் (சென்னை நீங்கலாக) பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம், பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை மட்டுமே செலவிடலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
வேட்பாளர் தகுதியாக மாறிய செலவுத் தொகை: ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலின்போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் எவ்வளவு தொகை செலவிட முடியும் என்ற கேள்வி பிரதானமாக இடம்பெறுகிறது. மக்கள் பிரச்னைகளுக்கு என்னென்ன தீர்வு காண்பார், கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு உள்ளிட்ட தகுதிகளை பின்தள்ளிவிட்டு, தேர்தல் வெற்றிக்கு எவ்வளவு செலவிடுவார் என்பதே வேட்பாளர் தேர்வின்  பிரதான தகுதியாக மாறிவிட்டது.
இதுபோன்ற சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு அதிகபட்ச செலவினத் தொகையாக ரூ.17ஆயிரம் முதல் ரூ.90ஆயிரம் வரை தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருப்பது சாமானிய மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகவர்கள், துண்டுப்பிரசுரச் செலவுக்குக்கூட காணாது:  இது தொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் அரசியல் கட்சியினர் கூறியது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை சின்னம் வரையக்கூடாது. அதேபோல், மைக் மற்றும் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம்  செய்யக்கூடாது. வாக்கு  சேகரிக்கும்போது 3 பேருக்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுத் தொகை என்பது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது, வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களை நியமிப்பது, துண்டுப்பிரசுரங்கள் அச்சிடுவது, வைப்புத் தொகை செலுத்துவது உள்ளிட்ட வெளிப்படையான செலவினங்களுக்குக்கூட போதுமானதாக இருக்காது. 
வைப்புத் தொகை ரூ.4 ஆயிரம், வேட்பு மனுவுக்கான சான்றிதழ்களை நகல் எடுக்கும் பணிக்கு ரூ.1,000, வேட்பாளருக்கான தேர்தல் பணிக் குழு அலுவலகம் அமைத்தால் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், துண்டுப்பிரசுரம் அச்சடிக்க ரூ.15 ஆயிரம், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் செலவுக்கு சுமார் ரூ.10 ஆயிரம், வாக்குப் பதிவு நாளில் மேஜை அமைத்தல், இறுதிக்கட்ட பிரசாரம் போன்றவற்றுக்கு ரூ.20 ஆயிரம், பிரசாரத்துக்கு உடன் வரும் நபர்களுக்கான செலவுத் தொகை என கணக்கிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்காவிட்டாலும்கூட குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் செலவு ஏற்படும். வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கும் சுயேச்சைகளுக்கும் இந்த செலவுத் தொகை பொருந்தும்.
இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச செலவுத் தொகை, பேரூராட்சிகளுக்குக்கூட பொருந்துவதாக இல்லை. இந்தச் செலவினங்களில் உண்மைக்கு மாறாக, குறைவான தொகையைக் குறிப்பிட்டால் மட்டுமே, தேர்தல் ஆணைய உத்தரவின்படி செலவுக் கணக்கு தாக்கல் செய்யமுடியும். 
பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலின்போதுகூட, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவிட முடியும் எனத் தெரிவித்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. இது வெளிப்படையாகத் தெரிந்தும்கூட, செலவு நடைமுறைகளில் காலத்துக்கேற்ப மாற்றம் கொண்டு வருவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு பணம் முதல் பரிசுப் பொருள்கள் வரை வெளிப்படையாக வழங்கப்படும் நிலையில், அதை வேடிக்கை பார்க்கும் எதார்த்த நிலை வந்துவிட்ட பிறகு, அதிகபட்ச செலவுத் தொகை நிர்ணயித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற கேள்வி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com