கௌ​ரவ விரி​வு​ரை​யா​ள‌ர்​க​ளு‌க்கு அரசு உத​வுமா?

தகுதி, திறமை, பத்து ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் என அடுக்கடுக்காக பல தகுதிகள் இருந்தும் பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ள ஊதியத்தைக் கூட பெற முடியவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தகுதி, திறமை, பத்து ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் என அடுக்கடுக்காக பல தகுதிகள் இருந்தும் பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ள ஊதியத்தைக் கூட பெற முடியாமல் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான கௌரவ விரிவுரையாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

 சென்னைப் பல்கலை., திருச்சி பாரதிதாசன் பல்கலை., கோவை பாரதியார் பல்கலை., திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., வேலூர் திருவள்ளுவர் பல்கலை. உள்ளிட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரியாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

இந்த 41 கல்லூரிகளிலும், ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5,500 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் 2003-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளான செட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், யுஜிசி நிர்ணயித்துள்ள தகுதியைப் பூர்த்தி செய்தவர்கள், பிஹெச்டி முடித்தவர்கள், எம்பில் முடித்தவர்கள் எனப் பலரும் கௌரவ விரிவுரையாளர் நிலையில் பணியாற்றுகின்றனர். இதில், 17 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிபவர்களும் உள்ளனர்.

அரசுக் கல்லூரிகளில் நிரந்தரப் பணியிடங்களில் அதிக ஊதியத்தைப் பெறும் விரிவுரையாளர்களுக்கு நிகரான பணிகளையே கௌரவ விரிவுரையாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஊதியம் மட்டும் மாறுபடுகிறது. உயர் கல்வித் துறைக்கான செலவினங்களும், மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பதே நடைமுறை. கௌரவ விரிவுரையாளர் முறை என்பதே உயர் கல்வித் துறையின் கௌரவத்துக்கு இழுக்கு என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. 

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்த பிறகு, கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் அதிகபட்சம் ரூ.50,000-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பரிந்துரையானது 2019-ஆம் ஆண்டு ஜனவரியிலேயே பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிர்ணயித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், முந்தைய அதிமுக அரசு அவசர அவசரமாக அவர்களின் ஊதியத்தைக் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தியது.

மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் இந்த உயர்வை அமல்படுத்தி 14 மாத நிலுவையும் வழங்கப்பட்டது. ஆனால், பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக இருந்து அரசுக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட பெரும்பாலான கல்லூரிகளில் இந்த நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு முறையும் அமல்படுத்தப்படவில்லை. குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் 2019 பிப்ரவரியிலிருந்து ரூ.30 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அலுவலக உதவியாளரைக் காட்டிலும் கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைவாக ஊதியம் கொடுக்கும் முரண்பாட்டை நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி அறிவித்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படவில்லை. 

இதுவரை ரூ.20,000 மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர். ஆனால், தெலங்கானாவில் ரூ.30,000, கர்நாடகத்தில் ரூ.32,000, கேரளத்தில் ரூ.43,750, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் ரூ.57,700, மிúஸாரமில் ரூ.50,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.  இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே சொற்ப ஊதியமாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட அரசாணை பிறப்பித்தால் மட்டுமே சாத்தியம் என்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் அரசாணைக்காகக் காத்திருந்து தாமதமாகவே ஊதியம் பெறும் நிலை உள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டிலிருந்து அரசுக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை அரசு வழங்குமா, பல்கலைக்கழகம் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆசிரியர்களின் போராட்டங்களுக்குப் பிறகு, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தலையிட்டு பல்கலைக்கழகத்தின் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த ஊதியமும் 4 அல்லது 5 மாதங்கள் காத்திருந்துதான் பெறப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்க பரிந்துரைக்கும் கடிதம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தால் அண்மையில்தான் கல்லூரி முதல்வர்களுக்கும், கருவூல அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுல்லாது, 01.01.2022 முதல் 31.12.2026 வரை 5 ஆண்டுகளுக்கு பணியிட தொடர் நீடிப்பாணை கோரியும் அரசாணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திரிசங்கு நிலையில்தான் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி, யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெ. தங்கராஜ் கூறியது:

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 2010-இல் நடந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அப்போதைய அரசு, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் வழியாக எழுத்துபூர்வமாக உறுதிமொழியை வழங்கியது. 

நிபந்தனைகளுடன் பணி நிரந்தரம் செய்வதாக அளித்த அந்த உறுதிமொழியும் 12 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை ஏற்கப்படவில்லை. நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய பரிந்துரைகளையும் ஏற்கவில்லை. 

பணி நிரந்தரம் என்பது பகல் கனவாகவே போனது. கனவுகளை சுமந்தபடியே பலர் உயிரிழந்துவிட்டனர். இனியும் தாமதப்படுத்தக் கூடாது. உடனடியாகப் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும். யுஜிசி அறிவித்த ரூ.50 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும். அரசுக்கு நிதிச் சுமை இருப்பின், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com