Enable Javscript for better performance
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்?  - பழ. நெடுமாறன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்? - பழ. நெடுமாறன் 

  By DIN  |   Published On : 02nd May 2022 01:33 PM  |   Last Updated : 02nd May 2022 01:33 PM  |  அ+அ அ-  |  

  pala_nedumaran_chandru

  பழ. நெடுமாறன் | நீதிபதி சந்துரு

   

  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீதிபதி சந்துரு விலக்கப்பட்டது ஏன்?  அமைச்சரவையின் பரிந்துரையின் பேரிலேயே கருணை மனுக்களின்  மீது  ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சட்டம் வகுத்த  நெறிமுறையிலிருந்து யாரும் விலக முடியாது என்ற தீர்ப்பை வழக்கறிஞராக எவ்வாறு பெற்றார்? தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது எவ்வாறு? என்று விரிவாகத் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

  நானும் நீதிபதியானேன் என்ற நீதிபதி சந்துருவின் நூலைப் பற்றித் தென் செய்தி இதழில் எழுதியுள்ள பழ. நெடுமாறன், ஈழப் போராட்டம் - வழக்கறிஞர் சந்துரு தொடர்பான மேலும் பல முக்கிய  தகவல்களை வெளியிட்டுள்ளார்.

  கட்டுரை விவரம்:

  30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வழக்குரைஞராகத் திகழ்ந்து அறத்தை நிலைநிறுத்த இடைவிடாது போராடியவர் பின்னர் உயர்நீதிமன்ற நீதிநாயகமாக உயர்ந்து “சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல்” அனைவருக்கும் குறிப்பாக, திக்கற்றுத் தவித்த அடித்தள மக்களுக்கு நீதி வழங்கிய பெருமைக்குரியவர் மேதகு கே. சந்துரு ஆவார்.

  “நானும் நீதிபதியானேன்” என்ற தலைப்பில் அவருடைய தன் வரலாற்றை ஏறத்தாழ 500 பக்கங்களில் எழுதியுள்ளார். எத்தகைய ஒளிவு மறைவு இல்லாமலும், மிகையோ, கற்பனையோ சிறிதும் கலக்காமலும், தங்களது வரலாற்றை எழுதியவர்கள் மிகக் குறைவு. காந்தியடிகள் தனது வரலாற்றில் நடந்ததை நடந்தவாறே சத்திய சோதனையாக எழுதியுள்ளாரோ, அதேபோல சந்துரு அவர்களும் எத்தகைய ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார்.

  நீதிமன்றத்தில் தான் எடுத்துக்கொண்ட வழக்குக்காக வாதாடுவது மட்டுமல்ல, நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் சட்டமீறல்களையும் துணிவுடன் நீதிபதிகளிடம் எடுத்துக்கூறி அவற்றைத் திருத்திய பெருமை அவருக்கு உண்டு. நீதிமன்ற வாயிலில் விலங்கிடப்பட்ட நிலையில் கைதி ஒருவர் அமர்ந்திருப்பதையும், அருகே காவலர்கள் காவல் காப்பதையும் கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். உடனடியாக நீதிபதியிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை எடுத்துக்காட்டி அந்தக் கைவிலங்கை அகற்றச் செய்தவர் சந்துரு அவர்களாவார்.

  அதுமட்டுமல்ல, 1994ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த போராளியான கவுதமி போரினால் பாதிக்கப்பட்டு இடுப்புக் கீழ் செயலற்ற நிலையில் தமிழகம் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் சிறிதுகூட இரக்கம் காட்டாமல் அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய தமிழக அரசு. அவருக்காகவும், அவரைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடி அவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் தீர்ப்பினைப் பெற்றுத் தந்தார்.

  தனியார் மருத்துவமனை எதுவும் அவரை அனுமதிக்க மறுத்தன. அருட்சகோதரி ஹெர்மினா அவர்கள் தனது மருத்துவமனையில் அனுமதிக்க முன்வந்தார். ஆனாலும், கவுதமியின் படுக்கையருகே காவலர்கள் நிறுத்தப்பட்டனர். இயற்கைக் கடன்களைக் கழிக்கும் வேளையில்கூட அவர்கள் வெளியேற மறுத்தனர். உடனடியாக சந்துரு அவர்களுக்கு இதை நான் தெரிவித்தபோது, அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், நீதிபதியோ “அந்தப் பெண் ஓடிவிட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா?” எனக் கேட்டபோது, சர்வதேச பிரகடனங்களையும், அகதிகளின் உரிமைகளையும் விளக்கிச் சொல்லி கவுதமிக்கு விடுதலைப் பெற்றுத் தந்து, அவர் பத்திரமாக நாடு திரும்ப உதவியவர் சந்துரு அவர்கள்.

  தமிழ்நாட்டில் அரசு அமைத்த அகதிகளின் முகாம்களில் வாழ்ந்த ஈழத் தமிழ் அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி இலங்கை அனுப்புவதற்கு முற்படும் அரசின் செயலை தடுக்கவேண்டும் என நானும், மரு. இராமதாசு அவர்களும் தொடுத்த வழக்கில் வாதாடி ஐ.நா. அகதிகள் ஆணையப் பிரதிநிதிகளின் முன் தாமாக விரும்பி நாடு திரும்பும் அகதிகளை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற தீர்ப்பினைப் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் சந்துரு ஆவார். இதன் விளைவாகத்தான் இன்றுவரையிலும் ஈழத் தமிழ் அகதிகளைக் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப அரசினால் முடியவில்லை. இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் கொடுமைகளும், சாவுகளும் நிகழும் என்ற நிலையில் தங்களின் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த ஈழத் தமிழ் அகதிகளுக்குப் பாதுகாப்பு அளித்து நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்த பெருமைக்குரியவர் சந்துரு அவர்கள்.

  தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநாடுகளையும், போராட்டங்களையும் நாங்கள் நடத்த முற்பட்டபோதெல்லாம் தமிழக காவல்துறை அவற்றுக்குத் தடை விதித்தது. அப்போதெல்லாம் எங்களது வழக்குகளை எடுத்துக்கொண்டு வாதாடி அனுமதியைப் பெற்றுத்தந்த பெருமை அவரை மட்டுமே சாரும். ஈழத் தமிழருக்கு ஆதரவான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிப்பதற்கு வழிவகுத்துத் துணை நின்ற பெருமை அவருக்கே உரியது.

  2002ஆம் ஆண்டில் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களை ஒன்று திரட்டி உலகத் தமிழர் பேரமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கினோம். அதன் தொடக்கவிழா மாநாடு நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையைத் தகர்த்து மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் இன்றுவரையிலும், இனியும் நீடித்து உலகத் தமிழர்களுக்கு அந்த அமைப்பு தொண்டாற்றுகிறது என்றால், அதற்கு அடிப்படை காரணர் சந்துரு அவர்களேயாவார்.

  இராசீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு கொலை வழக்கில் இவ்வளவு அதிகமான பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது உலகில் இதுவே முதன்முறையாகும். “ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பு உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து 26 தமிழர்கள் “உயிர்க் காப்புக் குழு” என்ற பெயரால் எனது தலைமையில் ஓர் அமைப்பை நிறுவி இத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் இந்த வழக்கில் வாதாடி 19பேருக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்தார். எஞ்சிய நால்வருக்குத் தூக்குத் தண்டனையும், மூவருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. இந்த நால்வர் சார்பில் தமிழக ஆளுநராக அப்போதிருந்த பாத்திமா பீவி அவர்களுக்குக் கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அவற்றை ஏற்காமல் தள்ளுபடி செய்தார். அவரது ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் இந்த நால்வருக்காக வாதாடி ஆளுநரின் ஆணை தவறானது என்ற தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார். அமைச்சரவையின் பரிந்துரையின் பேரிலேயே கருணை மனுக்களை ஆளுநர் முடிவெடுக்கவேண்டும் என அரசியல் சட்டம் வகுத்த நெறிமுறையிலிருந்து யாரும் விலக முடியாது என அத்தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து 25.11.1999 அன்று இந்தத் தீர்ப்பு அளிக்கப்படும் வரை அனைத்து மாநில ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் அரசியல் சட்டம் வகுத்துத்தந்த நெறிமுறையைப் பின்பற்றத் தவறினார்கள் என்பது அம்பலமானது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகே இந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் மாபெரும் திருப்பத்தினை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்பை பெற்றுக்கொடுத்தப் பெருமைக்குரியவர் மேதகு சந்துரு அவர்களே.

  கொடிய பொடாச் சட்டத்தின் கீழ் நானும் மற்றும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் 18 மாதங்களுக்கு மேலாக வாடினோம்.

  ஆரம்பக் கட்டத்தில் எங்கள் மீது 1967ஆம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் வழக்குக் குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின்படி நாங்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் மூன்றாண்டுக்கு மேல் சிறை தண்டனை விதித்திருக்க முடியாது. ஆனால், பின்னர் திட்டமிட்டுக் காவல்துறை பொடாச் சட்டப் பிரிவுகளின்கீழ் எங்கள் வழக்கை கொண்டுவந்ததுடன் அக்குற்றத்தை விசாரிப்பதற்கு பொடாச் சட்டப் பிரிவு 50-ன் கீழ் தமிழக அரசு அனுமதி அளித்தது.

  ஓராண்டுக் காலம் கடந்த நிலையில் எங்களுக்குப் பிணை அளிப்பதற்கான முறையீட்டை உயர்நீதிமன்றத்தில் திரு. சந்துரு அவர்கள் தாக்கல் செய்தார். அத்துடன் அவர் தன்னிலும் மூத்த வழக்கறிஞர் திரு. என். நடராசன் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்த வழக்கில் வாதாட வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். சிறையில் இருந்த எனக்கு இச்செய்தி கிடைத்தபோது, மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன். திரு. சந்துரு அவர்கள் மூத்த வழக்கறிஞர், அவரே இந்த வழக்கில் வாதாடி இருக்கலாம். ஆனாலும் மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்களுடன் இணைந்து இருவருமாக உயர்நீதிமன்றத்தில் எங்களுக்காக வாதாடினார்கள். 17 மாத சிறைவாசத்திற்குப் பின் 18.12.2003 அன்று எங்களுக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்துப் பேசியதைத் தவிர அவர்கள் மீது வேறு குற்றம் எதுவுமில்லை என்றும், அதற்காக அவர்களை பொடாச் சட்டத்தில் கைது செய்ய முடியாது என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

  எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பரந்தாமன் அவர்கள் மீது வெடி மருந்து வழக்குப் பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டதால் அவருக்குப் பிணை மறுக்கப்படும் என்பது தெரிந்தவுடன், அவரது பிணை மனு திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், என்மீது வேறொரு குற்றத்திற்காக வழக்கு இருந்ததால், உடனடியாக நான் பிணையில் வெளிவர இயலவில்லை. உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவராகத் திகழ்ந்த திரு. சந்துரு அவர்கள், கீழ்மை நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாட முன்வருவதில்லை என்றாலும் எனக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்து வாதாடினார். அங்கு பிணை மறுக்கப்பட்டவுடன் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்கிலும் பிணை பெற்றப் பிறகே நான் வெளிவர முடிந்தது. ஆனாலும், எனக்கு அளிக்கப்பட்ட பிணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு அளித்தது. இதை தெரிந்துகொண்ட திரு. சந்துரு அவர்கள் உடனடியாக என்மகள் உமாவை அழைத்து உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை விடுதலை ஆணையை உடனடியாக கடலூர் சிறை அதிகாரியிடம் அளித்து அன்று காலை 10மணிக்குள் விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார். அதன்படி என்மகளும் கடலூருக்கு விரைந்துவந்து சிறை அதிகாரியைப் பார்த்து விவரத்தைச் சொல்லி அவரின் ஒத்துழைப்போடு காலை மணிக்கு முன்பாகவே நான் விடுதலையானேன். உச்சநீதிமன்றத்தில் எனது பிணையை எதிர்த்து அரசு செய்திருந்த முறையீடு 10 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே நான் விடுதலையான செய்தி நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அரசின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். தொலைநோக்குடன் திரு. சந்துரு அவர்கள் செயல்பட்டதால் நான் விடுதலையானேன்;இல்லாவிட்டால் மேலும் சில மாதங்கள் சிறையிலிருந்திருக்க நேரிட்டிருந்திருக்கும்.

  கடலூர் சிறையிலிருந்து நான் விடுதலையாகி வரும் வழியில் உள்ள பல ஊர்களில் அனைத்துக் கட்சித் தோழர்களும் கூடி நான் வந்த காரை நிறுத்தி வரவேற்புக் கொடுத்த காரணத்தினால் சென்னைக்கு நான் வந்து சேர்வதற்கு நெடுநேரம் ஆகி மாலையில்தான் வந்து சேர்ந்தேன். சைதாப்பேட்டை அருகில் பெரும் கூட்டமாக தோழர்கள் கூடி வரவேற்பு அளித்தனர். கூட்டத்தினர் அளித்த அன்பு நெருக்கடியின் காரணமாக அந்தக் காரின்மீது ஏறி நின்று அனைவருக்கும் வணக்கம் செலுத்தினேன். அப்போது கூட்டத்திற்கு வெளியில் மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் நின்று கையை ஆட்டுவதைப் பார்த்தபோது, நன்றியுணர்வால் எனது விழிகள் கசிந்தன. உடனடியாக கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்குச் செல்ல முயன்றபோது எனது நோக்கம் புரியாமல் தோழர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். அந்த ஆரவாரத்தில் நான் கூறியது எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. மிக நெருக்கமான தோழர்கள் என்னைத் தள்ளிக்கொண்டு வந்து எனது காருக்குள் ஏற்றி கதவைச் சாத்திவிட்டார்கள். கூட்டத்தைப் பிளந்துகொண்டு எனது கார் சந்துரு அவர்கள் நின்ற இடத்திற்குச் செல்வதற்கே பெரும்பாடாக இருந்தது. அவற்றையெல்லாம் கடந்து அங்குவந்து பார்த்தபோது, அந்த இடத்தில் அவர் இல்லை. விடுதலைக்காற்றை நான் உயிர்ப்பதற்கு யார் காரணரோ அவரே என்னை வரவேற்க சைதாப்பேட்டை வந்து நீண்டநேரமாகக் காத்திருந்ததை இன்று நினைத்தாலும் என் உள்ளம் கசிகிறது.

  பொடாச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளின்மீது ஏவியதோடு, முதல்வர் செயலலிதா நிற்கவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்து கிரிமினல் சட்டங்களை தூசித்தட்டி எடுத்து எங்களது தமிழர் தேசிய இயக்கத்தை தடை செய்தார். சென்னையிலும், மதுரையிலுமிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டன. இன்றுவரையிலும் அந்தத் தடை நீடிக்கிறது.

  தோழர் வைகோ அவர்கள் மீதும், அவரது தோழர்கள் ஒன்பது பேர் மீதும் பொடாச்சட்டம் ஏவப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பிணை கிடைக்கவும் திரு. சந்துரு அவர்கள் வாதாடி பிணைப் பெற்றுக்கொடுத்தார்.

  நான்கு ஆண்டுகாலம் பொடா வழக்குகளை திரு. சந்துரு அவர்கள் ஏற்று நடத்தியதின் விளைவாக தொழில்ரீதியான நண்பர்களும், சில உறவினர்களும் அவருடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதையே தவிர்த்தனர். நீதிமன்ற வராண்டாக்களில் அவர் செல்லும்போது எதிரில் வருபவர்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். ஊத்தங்கரையில் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொடா வழக்கை விசாரிக்காமலேயே இரு நீதிபதிகள் விலகிக் கொண்டதை விமர்சித்து ஊடகங்களுக்கு திரு. சந்துரு அவர்கள் பேட்டி அளித்ததையே காரணமாகக் காட்டி அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டது.

  “தமிழீழம் சிவக்கிறது”, “காவிய நாயகன் கிட்டு” என்ற தலைப்புகளில் நான் எழுதிய இரு நூல்கள் 1967ஆம் வருடத்திய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டன. என் மீதும், நூலை வெளியிட்ட பதிப்பகத்தின் உரிமையாளர் என்ற முறையில் எனது துணைவியார் திருமதி. பார்வதி மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆலந்தூர் குற்றவியல் நடுவர் மன்றத்திலிருந்து இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஏழு சாட்சிகளை விசாரித்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட மாவட்ட அமர்வு மன்ற நீதிபதி எங்களை நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தார். ஆனால், என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட நூல்களை திருப்பித் தரவில்லை. எனவே, உயர்நீதிமன்றத்தில் என் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உலகில் இதுவரை எந்த நீதிமன்றமும் அளிக்காத ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்தது. அந்த நூல்களை அழித்துவிடும்படி காவல்துறைக்கு ஆணைப் பிறப்பித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நான் எழுதிய நூல்கள் மட்டும் குற்றவாளியாக்கப்பட்டு அதற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வேடிக்கையை திரு. சந்துரு அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

  ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர்களுக்குமிடையே நடுவராக செயல்பட்டு அப்பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டிய இந்திய அரசு தானே ஒரு தரப்பாக மாறி சிங்கள அரசுடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டது. இராசீவ் – செயவர்த்தனா உடன்பாட்டினை ஈழத் தமிழர்களும், விடுதலைப்புலிகளும் ஏற்கவில்லை. ஆனால், இந்த உடன்பாட்டை திணிக்கும் முயற்சியில் இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி இந்த உடன்பாட்டிற்கு ஆதரவுத் தெரிவித்தது. கட்சித் தோழர்கள் பலரும் அதை விரும்பவில்லை. வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்த பெரும்பான்மையினரான உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் இந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த உடன்பாட்டை கண்டிக்கும் வகையில் திரு. சந்துரு அவர்களும் பேரா. மோசஸ் அவர்களும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் சிறப்புரையாற்ற மேனாள் வங்க நிதியமைச்சர் அசோக்மித்ரா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் கட்சித் தலைமையின் அழுத்தத்தால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக நீதிநாயகம் சந்துரு அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். 20 வருடங்களுக்கு மேலாக அக்கட்சியுடன் அவருக்கு இருந்த பிணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆனாலும், அக்கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது. பலரும் திரு. சந்துரு அவர்களுக்கு ஆதரவுக் கடிதங்களை அனுப்பினார்கள்.

  அதற்குப் பிறகு பல்வேறு கட்சிகளிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்தபோதிலும், அவர் அதை இன்றுவரை ஏற்கவில்லை. 1988ஆம் ஆண்டு தலைமையமைச்சர் இராசீவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங் விலகி சென்னை வந்தபோது, அனைத்து அரசியல் கட்சி வழக்கறிஞர்களும் அவருக்கு அளித்த வரவேற்புக் கூட்டத்திற்கு திரு. சந்துரு அவர்களை தலைமை தாங்கவேண்டுமென அனைவரும் விரும்பினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டு மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார். இதன்விளைவாக அடுத்த இரு நாட்களில் வருமான வரித்துறையிலிருந்து அவருக்கு அறிவிக்கைக் கொடுக்கப்பட்டது. ஆனால், எல்லாவிதமான கணக்குகளையும் அவர் ஒழுங்காக வைத்திருந்ததால், அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

  மூத்த வழக்கறிஞர்களான விஜயன், ஆர். சண்முகசுந்தரம் ஆகியோர் அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டபோது மருத்துவமனையில் அவர்களைச் சந்தித்து விவரங்களை அறிந்து வழக்கறிஞர்களைத் திரட்டி கடற்கரை காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி திரு. சந்துரு நடத்தினார். திரு. சண்முகசுந்தரத்தின் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், அவரது மருத்துவமனை செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றார்.

  மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற கோரிக்கை தென் மாவட்ட மக்களால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து விசாரிக்க ஒன்றிய அரசு நீதிபதி விசாரிக்க ஜஷ்வந்த் சிங் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தின் முன் நேரில் தோன்றி மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை அமைப்பதை திரு. சந்துரு வலியுறுத்தினார். ஜஷ்வந்த் சிங் ஆணையம் மதுரை கிளை அமைப்பதை பரிந்துரைத்தது. ஒன்றிய அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆணையிட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர். ஆக இத்திட்டம் 10 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்தது. பிறகு தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவி ஏற்றவுடன் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் இதற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக மதுரையில் உயர்நீதிமன்றக் கிளைக்கான அடிக்கல் 13.04.2000 அன்று நடத்தப்பட்டது. இந்தக் கிளை வருவதற்கு அரும்பாடுபட்ட திரு. சந்துரு அவர்களை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி தலைமை நீதிபதி அழைப்பு அனுப்பினார். மதுரை வழக்கறிஞர் சங்கமும் அவர் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பியது. ஆனால் சென்னையில் உள்ள வழக்கறிஞர்கள் இதற்கு எதிராக இருந்தார்கள்; போராடினார்கள்; வழக்குகள் தொடுத்தார்கள். ஆனால், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் திறப்புவிழா 24.07.2004இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏனெனில், 1980களில் நான் சட்டமன்றத்தில் அங்கம் வகித்தபோது, மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கவேண்டும் என வலியுறுத்தும் வகையில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். தொடர்ந்து இக்கருத்தை வலியுறுத்தி வந்தவன் என்கிற முறையில் இதற்காக அரும்பாடுபட்ட நீதிநாயகம் சந்துரு அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

  2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் நிற்கவில்லை. ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பகுதிகளில் போரில் உயிர்த்தியாகம் செய்த விடுதலைப்புலி வீரர்களுக்கு மாவீரர் நினைவகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் இடித்துத் தகர்த்து எலும்புகளைக்கூட தோண்டி எடுத்து அழித்தனர். என் போன்றவர்கள் உள்ளங்களில் ஆறாத துயரமாக இது பதிந்தது. எனவே, தமிழ்நாட்டிலாவது ஈழப்போரில் மடிந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்படவேண்டுமென விரும்பினோம். நண்பர் நடராசன் அவருடைய விளார் கிராமத்தில் நிலம் தருவதற்கு முன்வந்தார். அதை ஏற்று உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்” என்ற பெயரில் நினைவகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் அளித்த நிதியுதவியினால் இது நிறுவப்பட்டது. ஒன்றிய, மாநில ஆட்சியினர் இதற்கு எதிராக எந்த நேரத்திலும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. 8.11.2013 அன்று தொடங்கி திறப்பு விழா மாநாட்டினை மூன்று நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்தோம். ஆனால், இறுதி நேரத்தில் அரசு தடை விதித்தால் என்ன செய்வது? என்பது குறித்து மேனாள் நீதிநாயகம் சந்துரு அவர்களிடம் ஆலோசனைக் கேட்டேன். அவர் கூறிய ஆலோசனைகளின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். 05.11.2013ஆம் தேதியன்று நினைவு முற்றத் திறப்பு விழாவுக்குத் தடை எதுவுமில்லை என்பதோடு, விழாவை நடத்துவதற்கான அனுமதியையும் உயர்நீதிமன்றமே வழங்கியது. உடனடியாக இத்தீர்ப்புக்குத் தடை வாங்குவதற்கு அரசு முயற்சி செய்தது. இதை அறிந்த திரு. சந்துரு அவர்கள் முற்றத்தின் திறப்பு விழாவை 06.11.2013 அன்று காலையிலேயே நண்பர்கள் முன்னிலையில் நடத்தும்படி ஆலோசனை கூறினார். அவ்வாறே நாங்களும் திறப்புவிழாவை நடத்தி முடித்தோம். அரசு செய்த மேல் முறையீடு விசாரணைக்கு வந்தபோது, திறப்பு விழா நடந்து முடிந்துவிட்டதால் அரசு மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்று அவரின் ஆலோசனைப்படி நாங்கள் திறக்காமல் போயிருந்தால் இன்றுவரை அந்த முற்றம் திறக்கப்படாமலேயே கிடந்திருக்கும்.

  திறப்புவிழா மாநாட்டில் உலகத் தமிழர் கருத்தரங்கிற்கு நீதிநாயகம் சந்துரு அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில், “இலங்கையில் இறந்த தமிழர்களுக்கு இந்தியாவில் நினைவிடமா? என்று சிலர் வினவலாம். இரண்டு உலகப் போர்களில் உயிர் துறந்த பிரிட்டன் படை வீரர்களுக்கு சென்னையில் இராணுவக் கல்லறைகளும், நினைவு மண்டபங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இறந்தபோனவர்களின் வாரிசுகள் ஆண்டுதோறும் இங்கிலாந்திலிருந்து வந்து அவற்றுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். எனவே போரில் மாண்ட ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் நினைவகம் அமைப்பது சரியானது” என்று கூறினார்.

  நினைவு முற்றத்தின் திறப்பு விழாவை வெற்றிகரமாக நாங்கள் நடத்திவிட்டதால், எரிச்சலும், சினமும் அடைந்த ஆட்சியாளர்கள் திறப்புவிழா முடிந்த மறுநாளே முற்றத்தின் முன்புறத்தில் சாலை புறம்போக்கில் அரசின் அனுமதியுடன் அமைத்திருந்தப் பூங்காவை இடித்துச் சிதைத்தனர். எங்களுக்கு எத்தகைய முன்னறிவிப்பும் கொடுக்காமல் அதிகாலைப் பொழுதில் பூங்காவை சிதைத்த அரசுக்கு எதிராக நாங்கள் தொடுத்த வழக்கு இன்னமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

  வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகள்

  மூத்த வழக்கறிஞராக இருந்த சந்துரு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்றப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் இருக்கும் வரை மட்டுமே அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படும். பிற மதங்களுக்கு மாறினால் இடஒதுக்கீடு பெற முடியாது. இந்த வேறுபாட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

  தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களில் புத்த மதத்தைத் தழுவிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதியுடன் அமர்ந்து நீதிநாயகம் சந்துரு அவர்களும், இணைந்து அளித்தத் தீர்ப்பில் புத்த மதத்தைத் தழுவிய பட்டியலின மக்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை உண்டு என்று கூறியதோடு, புதிய விளம்பரத்தை வெளியிடும்படி தேர்வாணையத்திற்கு ஆணைப் பிறப்பித்தனர்.

  தமிழக அரசு பிறப்பித்த மதமாற்றத் தடைச் சட்டத்திற்கான அவசரச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் போராட்டம் அறிவித்தன. இப்போராட்டத்திற்கு எதிராக பா.ச.க.வின் சார்பில் ஒருவர் தொடுத்த வழக்கில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் போராடுவதற்கான உரிமை உண்டு என்ற தீர்ப்பை தலைமை நீதிபதியும், நீதிநாயகம் சந்துரு அவர்களும் இணைந்து அளித்தனர்.

  தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என அறநிலையத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை எதிர்த்து சமற்கிருதத்தின் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழ் அர்ச்சனை எந்த வகையிலும் சட்டத்திற்கு எதிரானது அல்ல எனத் தீர்ப்பளித்த நீதிநாயகம் சந்துரு தனது தீர்ப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டினார்.

  வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் சிவலிங்கத்தை வைத்து ஆகம விதிப்படி வழிபாடு நடத்த உரிமை கேட்டு ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிநாயகம் சந்துரு அவர்கள் அளித்தத் தீர்ப்பில், வள்ளலாரின் தத்துவப் பின்புலத்தை விரிவாகச் சுட்டிக்காட்டி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, அங்கு வைக்கப்பட்ட சிவலிங்கம் போன்றவற்றை அப்புறப்படுத்தும்படியும் ஆணைப் பிறப்பித்தார். வள்ளலாரின் தீவிரப் பற்றாளரான பொள்ளாச்சி என். மகாலிங்கம் அவர்கள் “இந்தத் தீர்ப்பு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு அல்ல, அவரது உடலுக்குள் புகுந்து வள்ளலாரே வழங்கிய தீர்ப்பு” என்று குறிப்பிட்டார். நாடெங்கிலும் உள்ள வள்ளலார் அன்பர்கள் இத்தீர்ப்பைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

  தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து பழமையும், மதிப்பும் மிக்க சிலைகள் களவாடப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு இச்சிலைகள் கடத்தப்பட்டுப் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய கடத்தல் தொழில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர கபூர் என்பவரை உடனடியாகக் கைது செய்ய செயங்கொண்டம் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது செல்லாது என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் கபூர் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிநாயகம் சந்துரு அவர்கள் “செர்மனியில் இருக்கும் கபூரை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும்” என்ற ஆணைப் பிறப்பித்தார். அதன்படி 2012ஆம் ஆண்டில் அவர் கைதாகி இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். இந்தத் தீர்ப்புக்குப் பிறகே சிலைகள் திருடப்படும் விவகாரம் பெரிய அளவில் அனைவருக்கும் தெரியவந்தது. அது குறித்த வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு அமர்வு ஒன்றினை உயர்நீதிமன்றம் நியமித்தது.

  இவற்றைப் போல மேலும் பல கோவில்கள் குறித்த வழக்குகளில் நீதிநாயகம் சந்துரு அவர்கள் அளித்தத் தீர்ப்புகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுப் பாராட்டப்பட்டன.

  மூத்த வழக்கறிஞராக மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த திரு. சந்துரு அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வரலாற்றினை விரிவாக எழுதியிருக்கிறார். நீதி, நேர்மை, சத்தியம் போன்ற உயர் குணங்கள் நிரம்பப் பெற்ற அவர் நீதிபதியான பிறகு ஏறத்தாழ 90,000 வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கினார். ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடந்தப் பல வழக்குகள் அவரால் முடிவுக்கு வந்தன. அவர் அளித்தத் தீர்ப்புகள் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றன.

  ஆனால், அவரை நீதிபதியாக நியமிப்பதற்கு எத்தனை தடைகள்? எத்தனைப் பேர் வரிந்துக் கட்டிக்கொண்டு அவருக்கு எதிராகச் செயல்பட்டனர்? என்பதையெல்லாம் இந்நூலில் படிக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது. மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்கள் அவர் நீதிபதியாக வரவேண்டும் என மனமாற விரும்பினார்கள் என்பதை அறியும்போது முட்டுக்கட்டைப் போட்டவர்களை மன்னித்துவிட தோன்றுகிறது.

  நீதிநாயகம் சந்துரு அவர்கள் ஓய்வு பெறும் வேளையில் வழக்கமாக உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் பிரிவு உபச்சார விழாவைத் தனக்கு நடத்தவேண்டியதில்லை என தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். இறுதியாக 08.02.2013 அன்று அவர் ஓய்வுப்பெற்ற போது தனது குடும்பச் சொத்து எவ்வளவு? என்பதை தலைமை நீதிபதியிடம் அளித்தார். பின்னர் தன்னைச் சந்தித்த வழக்கறிஞர்கள், நண்பர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். பிறகு நீதிமன்ற வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறைக்குச் சென்று நன்றி தெரிவித்தார். தான் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் அரசு அளித்தக் காரை ஒப்படைத்துவிட்டு, சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்திலிருந்து மின்சார தொடர்வண்டி மூலம் புறப்பட்டுத் தனது இல்லம் சென்றார். இச்செய்திகளெல்லாம் மக்கள் நடுவே பரவியபோது அவர்களின் உள்ளங்களில் திரு. சந்துரு அவர்கள் வானளாவ உயர்ந்தார்.

  அவரோடு நெருங்கிப் பழக எனக்கு அவர் அளித்த வாய்ப்பினை இன்றளவும் பெருமையாகவே கருதுகிறேன். மனித உரிமைகளுக்காக நான் கொடுத்தப் பல வழக்குகளை அவர் எவ்விதக் கட்டணமும் பெறாமலேயே நடத்தி வெற்றி தேடித் தந்தார். எனவே அந்த வழக்குத் தீர்ப்புகளையெல்லாம் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டதோடு, அந்த நூலை அவருக்கே காணிக்கையாகப் படைத்தேன்.

  மேனாள் நீதிநாயகம் சந்துரு அவர்களின் தன் வரலாற்று நூல் இளம் வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, இளைய சமுதாயத்தினர் அனைவரும் படிக்கவேண்டிய நூல் மட்டுமல்ல, அவர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் திகழ்கிறது.''

  என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பழ. நெடுமாறன்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp