அண்ணாமலை - ஊடகவியலாளர்கள் மோதல் ஏன்? செய்தியாளர் சந்திப்பில் நடந்தவை என்ன?
By ததாகத் | Published On : 28th May 2022 01:07 PM | Last Updated : 28th May 2022 01:37 PM | அ+அ அ- |

பேட்டியின்போது அண்ணாமலை
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பேட்டியளிப்பவருக்கும் பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களுக்கும் இடையிலொரு மோதல் அரங்கேறியிருக்கிறது.
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் - ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய விதம் மற்றும் விஷயங்கள் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த சந்திப்பின்போது நடந்தவை என்ன? பத்திரிகையாளர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சில அறிக்கைகளிலிருந்து (பெருமெடுப்பில் இவை வாட்ஸ்ஆப்களில் பகிரப்படுகின்றன):
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் அறிக்கை:
"ஊடகங்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் நாவடக்கம் அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது.
27-5-2022 மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை அவர்கள், கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளைச் செய்ய அறிவாலயத்தில் கையூட்டுப் பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை.
இதுபோன்ற பேச்சுகளை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை, உணர்வுகளை உரசிப் பார்க்கும் போக்கு. இந்தப் போக்கைக் கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரிக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – என்ற திருக்குறளைத் தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம். தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிதமிழன்.
மாற்றத்துக்கான ஊடகவியாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் (27.05.22) கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், நேற்று (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்தபோது, அதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவரைப் பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்தபோது, "சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று எந்தவித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார்.
கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அவர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும். கடந்த காலங்களிலும் அண்ணாமலை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்ணாமலை செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை மற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகியின் மீது பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜகவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்துகிறது.
தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
"பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமை இடமான கமலாலயத்தில் 27 மே 2022 பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஊடக நண்பர்கள் சிலர் தொடர்ந்து கேள்விகள் கேட்ட விதம் அவர்கள் அரசியல் சார்புடையவர்களோ என சந்தேகிக்க வைத்தது. பாஜக மாநிலத் தலைவரின் விளக்கத்திற்குப் பிறகும் அந்த ஊடக நண்பர் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகள் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் நடுநிலையைக் கேள்விக்குறி ஆக்கியது.
பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பில் யார் கேள்வி கேட்கிறார்கள் என்பது கேட்டவருக்கும், உடன் இருக்கும் ஊடக நண்பர்களுக்கும், பதில் அளிக்க வேண்டிய அரசியல் பிரமுகருக்கும் மட்டுமே தெரியும்.
சமீப காலமாக தேசியவாத எண்ணம் கொண்ட அரசியல் பிரமுகர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் சில ஊடக நண்பர்கள் குழப்பம் விளைவிக்கும் விதமாக, தேசியவாதிகளை வெறுப்பேற்றும் விதமாகவே கேள்வி கேட்கிறார்கள். அந்த நேரங்களில் தேசியவாத அரசியல் பிரமுகர்களது பதில் ஒட்டுமொத்த ஊடகத்தையும் குறிக்கும் விதமாக அமைந்து விடுவது நமக்கு வருத்தம் தருகிறது. அதற்கு நமது சக ஊடகவியலாளர்களே காரணமாக அமைவது துரதிஷ்டவசமானது.
மிகவும் பொறுப்பு மிக்க ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் எந்தக் கட்சியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும், அரசியல் பிரமுகர் இடதுசாரி, வலதுசாரியாக இருந்தாலும் நடுநிலை தவறாமல் பாரபட்சமின்றி அதேநேரத்தில் நாகரிகமாகவும் நடந்து இருக்கிறோம், அப்படியே தொடர்ந்து நடந்திட வேண்டும் என்பதை சக ஊடகவியலாளர்களுக்கு நமது தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் பணிவுடன் அறிவுறுத்த விரும்புகிறது".
இதுபற்றிப் பதிவொன்றில் ஊடகவியலாளர் கே.எம். விஸ்வநாத் தெரிவித்திருப்பது:
"அண்ணாமலை அவர்களின் செயல் தர்மம் அல்ல, அவலம் ! பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தங்களிடம் கேள்வி கேட்டவரை நீங்கள் கையாண்ட விதம் அசிங்கமானது.
கேட்டவரின் கேள்விக்குப் பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று கூறி கடந்து போயிருக்கலாம். அல்லது உங்கள் கேள்வி ஒருபக்கச்சார்பாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கலாம். அல்லது யூடியூபர்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். கேள்வி கேட்டவர் யூடியூபர் என்று வெளியே தெரியாதபோது அனைத்துப் பத்திரிகை ஊடகவியலாளர்களையும் பொத்தாம் பொதுவாக அவமதிப்பதாகவே இருந்தது உங்கள் வாதம்.
அன்பளிப்பும், கையூட்டும் வாங்கும் பத்திரிகை, ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால், அவர்கள் என்ன வாங்கினாலும் அந்தச் செய்தியை வெளியிடும் முடிவு ஆசிரியர் குழுவினுடையது. அதில் Check point இருக்கிறது. மேலும், அவர் மீதான நம்பகத்தன்மை என்பதும் அந்தப் பத்திரிகை, ஊடகவியலாளருக்கான முக்கியமான மற்றுமொரு Check point.
இதற்காக நீங்கள் இருநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என்று ஏலம் போட்டிருக்க வேண்டியதில்லை. தாங்கள் பணியாற்றிய துறையினர் "சிலர் " சாலையோர நடைபாதைக் கடை, வண்டிக்கடை, கீரைக்காரர் கடை என ரூ.20 மாமூல் வாங்குகின்றனரே, வண்டியை மடக்கினால் 100 முதல் 3000 வரை கூட கறக்கின்றனரே. இட்லி விற்கும் ஆயாவைக்கூட விட்டுவைப்பதில்லையே. கஞ்சா முதல் டாஸ்மாக் பிளாக்கில் சரக்கோட்டுவதிலும் மாமூல் பெறுகிறார்களே. அதற்காக ஒட்டுமொத்தத் துறையினரும் அப்படித்தான் என்று நாங்கள் எண்ணுவதில்லையே.
அந்த அடிப்படை நாகரிகம்கூட ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டுமா இல்லையா?! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியாதீர்கள். அடக்கம் அமரருள் உய்க்கும். நாவடக்கம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். வருத்தம் தெரிவியுங்கள். அது நல்லது."
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா, இன்னும் பலர் என யாரோ ஒருவர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடந்துகொள்வதென்பது தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
யாகாவா ராயினும் நாகாக்க!