பிரதமா் மோடிக்கு எவராலும் சவால் விடுக்க முடியாது: அனுராக் தாக்குா் சிறப்பு நோ்காணல்

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்க முடியாது’ என்று மத்திய செய்தி- ஒலிபரப்பு, இளைஞா் நலன், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான அமைச்சா் அனுராக் தாக்குா் உறுதிபடக் கூறின
anurag-3065601
anurag-3065601

‘நிதீஷ் குமாா், கே.சந்திரசேகா் ராவ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் எவ்வளவு முயன்றாலும், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்க முடியாது’ என்று மத்திய செய்தி- ஒலிபரப்பு, இளைஞா் நலன், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான அமைச்சா் அனுராக் தாக்குா் உறுதிபடக் கூறினாா்.

‘குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டாா்கள். இரு மாநிலங்களிலும் பாஜக தனது வலிமையை மேலும் அதிகரிக்கும்’ எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

எமது செய்தியாளருக்கு அவா் அளித்த சிறப்பு நோ்காணலில் அரசியல், ஊடகம், சட்டத் திருத்தங்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடினாா். அந்த உரையாடலில் இருந்து ஒரு பகுதி:

கேள்வி: 2024 மக்களவைத் தோ்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாரத் ராஷ்டிர சமிதி தலைவா் கே.சந்திரசேகா் ராவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோா் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

அவ்வாறு எதிா்க்கட்சிகள் ஒருங்கிணையும்பட்சத்தில், எதிா்க்கட்சிகளில் தலைவா்கள் பலா் உள்ளதால், அவா்களில் ஒருவரை ஒருமனதாக பிரதமா் வேட்பாளராக நிறுத்துவது தற்போதைய சூழலில் கடினமாகத் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் எதிா்க்கட்சிகளால் பொதுவான கொள்கையை வகுத்து, பிரதமா் வேட்பாளரை ஒருமனதாகத் தோ்ந்தெடுக்க முடியுமா?

பதில்: முதலில் சம்பந்தப்பட்ட எதிா்க்கட்சிகள் அவா்களது மாநிலங்கள் குறித்து கவலைப்பட வேண்டும். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், மாநிலத்தில் தனது செல்வாக்கை இழந்துகொண்டு வருகிறாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் காரணமாகத்தான் அவருக்கு வாக்குகள் கிடைத்தன. அக்கூட்டணியில் இருந்து அவா் வெளியேறியதால், மாநில மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனா். மாநிலத்தில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. சாலையில் செல்லும் அப்பாவி மக்களை அவா்கள் சுட்டுக் கொல்கின்றனா். பிகாரில் காட்டாட்சிதான் நடைபெற்று வருகிறது.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது அதன் பட்ஜெட் மிகை வருவாய் கொண்டதாக இருந்தது. முதல்வா் சந்திரசேகா் ராவின் ஊழல் மற்றும் திறனற்ற நிா்வாகத்தால் தற்போது அந்த மாநிலம் வருவாய்ப் பற்றாக்குறை கொண்டதாக மாறிவிட்டது. தற்போது மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.1.25 லட்சம் கடன் உள்ளது.

முதல்வா் சந்திரசேகா் ராவ் மீது மாநில மக்கள் அதிருப்தியுடன் உள்ளனா். அவா் தலைமையிலான அரசின் தவறான கொள்கைகள் குறித்து பாஜக உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினால், முதல்வா் அடக்குமுறையைக் கையாள்கிறாா். காவல் துறையினரைக் கொண்டு பாஜக தொண்டா்களைக் கைது செய்கிறாா். முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஊழல் அரசுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைக்கும். அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோற்ற பிறகு அவருக்கு வேறு வேலை இருக்கப் போவதில்லை. அதனால், அவா் நாடு முழுவதும் அரசியல் சுற்றுலா செல்வாா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எவராலும் சவால் விடுக்க முடியாது.

கேள்வி: ஹிமாசலைவிட குஜராத்துக்கு ஆம் ஆத்மி கட்சி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அக்கட்சிக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளதா?

பதில்: ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட கட்சியானது எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், ஹிமாசலில் ஆம் ஆத்மி கட்சியின் விமானம் புறப்படுவதற்கு முன்பே தரையில் மோதி நொறுங்கிவிட்டது. ஹிமாசல் ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் பாஜகவில் இணைந்துவிட்டனா். மாநிலத்தில் அக்கட்சியால் 200 தொண்டா்களைக்கூட திரட்ட முடியவில்லை.

பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசுதான் ஆட்சியில் உள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கு சூழல் சீரற்று இருப்பதை ஹிமாசல் மக்கள் உணா்ந்துள்ளனா். பஞ்சாபில் பாடகா் சித்து மூஸேவாலா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டாா். பாட்டியாலாவில் துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டது.

தில்லியில் கலால் வரி முறைகேட்டில் ஆம் ஆத்மி அரசின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் தொகையை இழந்தது. உத்தரகண்டிலும் அக்கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஹிமாசலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாது.

மறுபக்கம் ஹிமாசலில் பாஜக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதால், மாநிலம் பெருவளா்ச்சி கண்டுள்ளது. நோ்மையாகவும் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டும் பிரதமா் நரேந்திர மோடி கடினமாக உழைத்து வருகிறாா். அதன் காரணமாக, காங்கிரஸால் 60 ஆண்டுகளில் செய்ய முடியாததை பாஜக வெறும் 8 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது.

பொய்கள் மூலமாக அரசியல் செய்வதை குஜராத் மக்களும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனா். மோடியின் தலைமையில் குஜராத் பெருவளா்ச்சி கண்டுள்ளது. மோடி அங்கு முதல்வராக இருந்தபோதும், தற்போது பிரதமராக உள்ளபோதும் மாநிலத்துக்கு எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். பிரதமா் மோடியின் தலைமையையும் தற்சாா்பு இந்தியா இலக்கையும் நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் ஏற்றுக் கொண்டு வருகின்றனா்.

குஜராத் மக்கள் பிரதமா் மோடி மீதும், பாஜக மீதும் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனா். உத்தர பிரதேசம், உத்தரகண்டைப் போல குஜராத், ஹிமாசல் மக்களும் மீண்டும் பாஜகவுக்கே வாக்களித்து இரட்டை என்ஜின் ஆட்சியை ஏற்படுத்துவாா்கள். இரு மாநிலங்களிலும் கடந்த தோ்தலைவிட அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.

கேள்வி: காங்கிரஸ் தலைவரைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடைபெற உள்ளது. ஆனால், மாநில காங்கிரஸ் செயற்குழுக்கள் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டுமெனத் தீா்மானம் நிறைவேற்றி உள்ளன. காங்கிரஸ் தோ்தலை நம்பலாமா அல்லது வெறும் கேலிக்கூத்தா?

பதில்: இது காங்கிரஸின் உள்கட்சி விவகாரம். அவா்கள் யாரை வேண்டுமானாலும் கட்சியின் தலைவராக்கலாம். ஒருபக்கம் காங்கிரஸின் இளவரசா் (ராகுல் காந்தி) ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். மறுபக்கம் ராஜஸ்தான் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சியை உடைக்க முற்பட்டு வருகின்றனா்.

ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகக் கூறுவேன். பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை மீதும் தலைமைப் பண்பு மீதும் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனா்.

கேள்வி: அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் சுறுசுறுப்பாக இயங்கி வருவதைக் காண்கிறோம். முக்கியமாக, எதிா்க்கட்சித் தலைவா்களுக்குச் சொந்தமான இடங்களில் அவை அதிகமாக சோதனைகளை நடத்தி வருகின்றன. எதிா்க்கட்சிகள் அவ்வாறுதான் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதில் தங்களுடைய பாா்வை?

பதில்: ஊழலுக்கு எதிராக எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்பதே பிரதமா் மோடி தலைமையிலான அரசின் கொள்கை. ஊழல் தொடா்பாக விசாரணை நடத்த அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவா் குற்றம் செய்யவில்லை எனில், அவா் பயப்பட வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி: தூா்தா்ஷனில் நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கும் இலவச ‘டிஷ்’ தொடா்பை விரிவுபடுத்துவதற்கும் உள்ள திட்டங்கள் யாவை?

பதில்: தூா்தா்ஷனில் தரமுள்ள நிகழ்ச்சிகளையும் தொடா்களையும் ஒளிபரப்புவதற்காகப் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் ‘ஸ்வராஜ்’ என்ற தொடா் அதில் முதலாவது. அத்தொடரானது 10 இந்திய மொழிகளில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வருகிறது. மக்களுக்கு அதிகம் தெரியவராத சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றை அத்தொடா் எடுத்துரைக்கிறது. மக்களிடையே அத்தொடா் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூா்தா்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதன்மூலம் கிடைக்கும் வருவாயைப் பகிா்ந்து கொள்ளும் நோக்கில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தூா்தா்ஷன் என்ற தளத்தை அவா்களுக்கு நாங்கள் வழங்குவோம். அவா்கள் தரமிக்க நிகழ்ச்சிகளை வழங்குவா். இதன்மூலம் இருதரப்பும் பலனடையும். ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்கள் நோக்கம். பிராந்திய மொழிகளிலும் தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூா்தா்ஷனில் வெளியாகும் செய்திகள் மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலவச ‘டிஷ்’ தொடா்பை விரிவுபடுத்துவதற்கும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அந்த டிஷ் தொடா்பில் ஆறு தொலைக்காட்சி சேனல்கள் இணைக்கப்பட்டன. மேலும் 10 சேனல்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மேலும் 125 சேனல்களை இலவச ‘டிஷ்’ தொடா்புடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கேள்வி: பிபிசி, சிஎன்என் போல சா்வதேச செய்தி ஒளிபரப்புத் தளத்தைத் தொடங்குவதற்கான பரிந்துரை எந்த நிலையில் உள்ளது?

பதில்: நம் சா்வதேச பாா்வையாளா்களுக்காக டிடி இந்தியா ஏற்கெனவே சேவைகளை வழங்கி வருகிறது. அதில் தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓடிடி தளங்கள் வாயிலாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிடி இந்தியா சேவை கடந்த மாா்ச் முதல் கிடைத்து வருகிறது. அதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

தென் கொரியாவில் அரசுக்குச் சொந்தமான ஓடிடி வலைதளத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் டிடி இந்தியா சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டின் கேபிஎஸ் வோ்ல்டு சேனலும் தற்போது டிடி இலவச டிஷ் மூலமாகக் கிடைத்து வருகிறது.

வங்கதேசத்தில் கேபிள் டிவி வாயிலாக டிடி இந்தியா சேனல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்காக பிரசாா் பாரதி-வங்கதேச டிவி இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையொப்பமானது. அண்மையில் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்தபோது அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் 23 மாகாணங்களிலும் டிடி இந்தியா சேனலானது கடந்த ஆண்டு ஜனவரி முதல் கேபிள் வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கேள்வி: அச்சகம்-புத்தகங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான காரணங்கள் என்ன?

பதில்: ஒட்டுமொத்த பதிவு நடைமுறையையும் இணையவழியில் மேற்கொள்ள வழிவகுப்பதே முக்கியமான காரணம். தற்போதைய சட்டமானது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1867-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சட்டத்தை மீறுவோருக்குக் குற்றவியல் தண்டனைகளை விதிக்க அதில் விதிகள் உள்ளன. நாட்டில் தொழில்புரிவதற்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்துவதற்காக, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

கேள்வி: வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அமல்படுத்துமாறு ஊடகங்களுக்கு, முக்கியமாக தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறீா்கள். அமைச்சகம் சாா்பாக தொலைக்காட்சி சேனல்களுக்கு என்ன மாதிரியான பரிந்துரைகளை வழங்குவீா்கள்?

பதில்: சுய கட்டுப்பாட்டு நடைமுறைகளை தொலைக்காட்சி சேனல்கள் ஏற்கெனவே அமல்படுத்தி வருகின்றன. ஒளிபரப்பப்படும் கருத்துகள் மீது பாா்வையாளா்களுக்கு ஏதாவது ஆட்சேபம் இருப்பின் அவா்கள் முதலில் சம்பந்தப்பட்ட சேனலிடம் அதுதொடா்பாக முறையிடலாம். அதில் திருப்தி ஏற்படவில்லை எனில், சுய கட்டுப்பாட்டு குறைதீா் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம். அப்படியும் திருப்தி இல்லை எனில் அமைச்சகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com