யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது ஆறுமுகசுவாமி ஆணையம்?

ஜெயலலிதா மரணத்தில், யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது நீதியரசர் ஆறுமுகசுவாமி ஆணையம்?
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜெயலலிதா மறைவு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் இறுதியில், சேற்றில் யானை சிக்கிக் கொண்டால் நரிகள் கொன்றுவிடும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் நீதியரசர் அ. ஆறுமுகசுவாமி!

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட  நீதியரசர் அ. ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தின்  அறிக்கை இன்று, செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது.

செப்டம்பர் 22-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும் அதனைத் தொடர்ந்து, 2016 டிசம்பர் 5-ல் அவரது எதிர்பாராத மரணம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்  விசாரிப்பதற்காக நீதியரசர் அ. ஆறுமுகசுவாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை 561 பக்கங்களுடன் இரு திருக்குறளை மேற்கோள் காட்டி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இடம் பெற்றுள்ள பிற்சேர்க்கைகளுடன்  சேர்த்து மொத்தம் 608 பக்கங்கள்!

நிறைவில் இரு திருக்குறள்களை நீதியரசர் ஆறுமுகசுவாமி மேற்கோள் காட்டியுள்ளார். முதலில், 95-வது அதிகாரமான மருந்திலிருந்து 948-வது குறளை  எடுத்துரைத்துள்ளார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் 

கலைஞர் உரை -  நோய் என்ன? நோய்க்கான காரணம்  என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).

இரண்டாவதாக, முடிவாக சுட்டியுள்ள 50-வது அதிகாரமான இடனறிதலில் இடம் பெற்றுள்ள 500-வது குறள்!

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு

மு. வரதராசனார் உரை - வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.

முதல் குறள் நோய் பற்றிப் பேசினாலும் நிறைவாக நீதியரசர் ஆறுமுகசுவாமி குறிப்பிட்டுள்ள குறள் பல்வேறு பேச்சுகளை - யானை, சேறு, நரிகள் - ஒப்பிட்டு ஏற்படுத்தியுள்ளது; அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com