சென்னை புறநகர் ரயில் பயணிகள் கேட்டதும் தெற்கு ரயில்வே செய்ததும்!

சில ரயில் சேவைகளை முற்றிலும் ரத்து செய்திருப்பதுதான் புதிய அட்டவணைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏமாற்று வேலை என்கிறார்கள் ரயில் பயணிகள்.
சென்னை புறநகர் ரயில் பயணிகள் கேட்டதும் தெற்கு ரயில்வே செய்ததும்!


சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கான புதிய அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், அதனைப் பார்த்த பல பயணிகள் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள்.

நள்ளிரவு நேர ரயிலை ரத்து செய்திருப்பது, ரயில்களின் நேரங்களை முன்பின் மாற்றி, ஒரு சில ரயில் சேவைகளை முற்றிலும் ரத்து செய்திருப்பது போன்றவைதான் புதிய அட்டவணைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏமாற்று வேலை என்கிறார்கள் ரயில் பயணிகள்.

கரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதற்கு நேர் மாறாக இயங்கிக் கொண்டிருந்த ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே மாற்றி, ஒரு சில ரயில் சேவைகளை ரத்து செய்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை புறநகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையின் புதிய அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்டிரலிலிருந்து ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் 5 முதல் 15 நிமிஷங்கள் இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மின்சார ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ரயில் அட்டவணை மாற்றி அமைக்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான புதிய அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

இதில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போதைய அட்டவணையில் 124-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே 124 ரயில் சேவை இயக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 8 ரயில்கள் குறைக்கப்பட்டு 116 ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் 8 ரயில்கள் நீக்கப்பட்டு சில ரயில்களின் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு தினமும் 70 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. இது, திருத்தப்பட்ட ரயில் அட்டவணைப் படி 61 ரயில்களாக குறைக்கப்பட்டன. முன்னதாக, 80 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 70 ரயில்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 61 பறக்கும் ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியது: சென்னை புறநகர் மின்சார ரயில் அட்டவணை தற்போதைய பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே இயங்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், நள்ளிரவு 1.20 மணிக்கு சென்னை சென்டிரலிலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரப் பணி முடிந்து இரவே வீட்டுக்குச் சென்று வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒன்று அவர்கள் வேறு வழிகளில் வீடு திரும்ப வேண்டும். இல்லையென்றால் காலையில் ரயில் சேவை தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் ரயில் பயணிகள்.

இது மட்டுமல்ல, சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு கடைசி ரயில் 11.40 வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது கடைசி ரயில் புறப்படுவது இரவு 11.15 மணி வரைதான். இதனால் ஏராளமான தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ரயில்களுக்கு இடையேயான இடைவெளியும் 30 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கூட்ட நெரிசலுக்கே வித்திடும் என்கிறார்கள் ஏற்கனவே கூட்டத்தில் முட்டி மோதிக்கொண்டு பயணிக்கும் பயணிகள்.

அட்டவணையை புதுப்பிக்கும்முன் பயணிகளிடம் கருத்துக் கேட்டிருக்கலாம் என்று கூறும் பயணிகள், கட்டாயம் தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை அறிவிக்க வேண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மாலை 6 மணி முதல் சுமார் அரை மணி நேரம் சென்னை சென்டிரலில் இருந்து  ரயில் புறப்படாமல் இருந்தால், அங்கு காணப்படும் கூட்டத்தை அளவிட முடியாமல் போய்விடும். இதனால் வயதானவர்களும் கடுமையான பணியை செய்துவிட்டுத் திரும்புவோரும், நீண்ட தொலைவுக்கு நின்று கொண்டே பயணிக்கும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

வழியில் நின்று செல்லும் ரயில்நிலையங்களில் கூட, கூட்டமாக வரும் ரயில்களில் ஏற முடியாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, ஏற்கனவே கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப ரயில்களை இயக்க வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com