சென்னை: ஆண்டுதோறும் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 83 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 6 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்களில் மாணவர்களை நிரப்ப முடியாமல் தேசிய மருத்துவக் கவுன்சில் கைவிட்டது. இதில் சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இந்த இடங்கள் ஐந்தரை ஆண்டுகளும் காலியாகவே இருந்து வீணாகிப்போனது.
இதையும் படிக்க.. ‘வந்தே பாரத்’களும் விரிசல் தண்டவாளங்களும்!
இந்த நிலை, இந்த ஆண்டு இன்னும் மோசமாகியிருக்கிறது. செப்டம்பர் 30ஆம் தேதி, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தற்போது 83 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளன. இதில், 16 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளும், 3 எய்ம்ஸ், மதுரை மருத்துவக் கல்லூரியிலும் உள்ளது.
மருத்துவக் கல்விக்கு மாணவர்கள் இடையே கடுமையான போட்டியிருக்கும் நிலையில், காலியாக இருக்கும் இடங்களை நான்காம் சுற்று முடிவுக்குப் பிறகும் தேசிய மருத்துவக் கவுன்சில் மாநில அரசுகளிடம் ஒப்படைக்காமல் இருந்து வருகிறது.
ஒருவேளை, தேசிய மருத்துவ ஆணையமோ அல்லது அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கால நீட்டிப்பைக் கோரினால் மட்டுமே இவ்விடங்களை நிரப்ப முடியும். இல்லாவிட்டால். இந்த 83 இடங்களும் வீணாகத்தான் போகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலியான இடங்களில் மாநில அரசுக்கோ, பல்கலைக்கழகங்களுக்கோ திருப்பி அளிக்க முடியாது என்று மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சிலர், கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரி சேர்க்கை பெற்று பிறகு கல்லூரிகளில் சேராமல் இருந்து விடுவதாலும் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
அனைத்திந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் 16 இடங்களும், மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்களும், ஸ்டான்லி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் தலா இரண்டு இடங்களும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் தலா ஓரிடம் என 83 இடங்கள் காலியாகவே உள்ளன.
இது மட்டுமல்லாமல், பல மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.26 லட்சத்துக்கும் மேல் கல்விக் கட்டணம் என்பதால், இதுவரை 50 இருக்கைகள் காலியாகவே உள்ளன. சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 13 சேர்க்கை இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் காலியாகவே உள்ளன. இதுபோலவே, பல் மருத்துவ மாணவர் சேர்க்கையும் உள்ளது.
தமிழக அரசு அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் 800 மாணவர் சேர்க்கை இடங்களை அளிக்கிறது. இதில் 15 சதவீதம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்.
இது குறித்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 83 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்ப வழி வகுக்க வேண்டும் என்று, நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் படிக்க இயலாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.