வெள்ளம் கரை புரளும் ஆறுகளும் பச்சைப் பசேலென்ற அடர்காடுகளும் கொண்ட அமேசானில் வறட்சி என்றால் நம்ப முடிகிறதா?
அமேசான் நதியின் இரண்டாவது பெரிய துணை நதியான நெகரோ ஆற்றின் நீர்மட்டம் - 121 ஆண்டுகளுக்கு முன், மானவ்ஸ் என்ற இடத்திற்கு அருகே அதிகாரப்பூர்வமாக நீர்மட்டத்தை அளக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரையில் இல்லாத அளவுக்கு – மிக மோசமான தாழ்நிலையை எட்டியுள்ளது.
உலகின் ஆகப் பெரிய மழைக் காடான அமேசான் காடுகளின் ஒருபகுதியான இந்தப் பகுதி மிக மோசமான வறட்சியைக் கடந்துகொண்டிருக்கிறது; இதே பகுதிதான் இரண்டே ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
உலகின் ஆறாவது பெரிய தண்ணீர் சேகரப் பகுதியான அமேசான் பள்ளத்தாக்கிலிருந்து ஏறத்தாழ 10 சதவிகிதத் தண்ணீரை நெகரோ ஆறுதான் வடித்து வெளியேற்றுகிறது.
அமேசான் நதியின் இன்னொரு துணை நதியான மெதய்ராவிலும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், பிரேசிலின் நாலாவது பெரிதான சாந்தோ அந்தோனியோ அணை நீர் மின்னுற்பத்தி நிலையம் மின்னுற்பத்தியை நிறுத்திவிட்டது.
பிரேசில் பகுதியிலுள்ள அமேசான் ஆறுகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்துபோய்விட்டதால் ஆறுகளையொட்டி, ஆறுகளையே நம்பி வாழும் மக்கள் வாழ்க்கை ஆதாரங்களுக்கும் குடிதண்ணீருக்கும்கூட தவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆறுகள் வறண்டதால், தொழிற்பூங்காவுடன் இருபது லட்சம் மக்கள்தொகையும் கொண்ட மானவ்ஸ் நகருக்கான வர்த்தகரீதியிலான படகுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்டது.
வறட்சி காரணமாக இந்தப் பகுதியின் பெரிய நகரமும் அமேசானாஸ் மாகாணத் தலைநகருமான மானவ்ஸ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பரின் பிற்பகுதியில் 62 நகராட்சிகளில் 55 நகராட்சிகளில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கி, பற்றாக்குறை நிலையை எட்டிவிட்டது.
தண்ணீர் இல்லை, படகுப் போக்குவரத்து எல்லாமும் முடிந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்கள் இந்தப் பகுதி படகோட்டிகள். ஆறுகள் வறண்டுபோய்விடவே, சுற்றுலாவுக்காக மக்கள் வருவதும் அற்றுப்போய்விட்டது. ஆறுகள் வெறும் மண் திட்டுகளாகக் கிடக்கின்றன.
மானவ்ஸ் மற்றும் அருகிலுள்ள நகரங்களும், கடும் வெப்பத்தாலும் அருகே காடழிப்பு காரணமாக எழும் பெரும் புகை மண்டலங்களாலும் திணறுகின்றன. இந்த வறட்சி காரணமாக அமேசான் ஆற்றையொட்டியுள்ள செசே ஏரியில் இருக்கும் ஏராளமான நன்னீர் டால்பின்கள் உயிரிழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.
இன்றைய நிலைமைக்கு முற்றிலும் மாறாக, 2021 ஜூலை மாதத்தில் நெகரோ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மானவ்ஸ் புறநகர்ப் பகுதிகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கின. மூன்று மாதங்கள் வரை வடியாமல் நின்ற தண்ணீரால் பயிர்கள் எல்லாம் அழிந்தன. மக்கள் வாழ்வு குலைந்தது.
மானவ்ஸ் நகருக்கு அருகேதான் (பிரேசில் பகுதியில் சோலிமோஸ் என்றழைக்கப்படும்) அமேசான் ஆற்றுடன் இரண்டாவது பெரிய துணை நதியான இந்த நெகரோ ஆறு கலக்கிறது. பன்னாட்டு வரைபடங்களில் பெருவில் தொடங்குவதாகக் காட்டப்பட்டாலும் பிரேசிலிய வரைபடங்களில் இங்கேதான் அமேசான் ஆறு தொடங்குவதாகச் சுட்டப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக இப்போது மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் இத்தகைய அல்லது இதைவிட மோசமான நிலைமைகள் ஏற்படும் என்று அமேசான் ஆய்வுக்கான பிரேசிலிய தேசிய நிறுவனத்திலுள்ள அமெரிக்க ஆய்வாளர் பிலிப் பேர்ன்ஸைட் அச்சம் தெரிவித்துள்ளார்.
அமேசானில் தண்ணீர் இல்லை என்பதும் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன என்பதும் எத்தகைய அதிர்ச்சி!