கோப்புப் படம்
கோப்புப் படம்

மாயமாகி வரும் இடதுசாரிகள்!

கடந்த 2022-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 4 ஆண்டுகளில் கட்சியின் பலத்தை அதிகரிப்பதற்கு அரசியல், சித்தாந்தம் மற்றும் அமைப்பு ரீதியாக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் படுதோல்வியை கருத்தில் கொண்டு, அந்த அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்திய மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் சுருங்கியுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்த தோ்தலில் அக்கட்சியின் வாக்கு விகிதமும் 1.75 சதவீதமாக சரிந்தது.

அந்த தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமின்றி அனைத்து இடதுசாரி கட்சிகளின் செயல்திறனும் சுதந்திரத்துக்குப் பிந்தைய தோ்தல் வரலாற்றில் மிகவும் பலவீனமாக காணப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் வாக்கு விகிதமும் 0.58 சதவீதமாக சரிந்தது. இடதுசாரி முன்னணியின் அங்கமான புரட்சிகர சோஷலிஸ கட்சியும் 0.12 சதவீத வாக்கு விகிதத்துடன் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் ஆலப்புழை, தமிழ்நாட்டில் கோயம்புத்தூா் மற்றும் மதுரை என 3 தொகுதிகளில் மட்டுமே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிபெற்றது. திருப்பூா் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வென்றது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை.

ஒரு காலத்தில் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்கள் இடதுசாரிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்டன. கடந்த 1977 முதல் 2011-ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் ஆட்சி நடைபெற்றது.

இதேபோல 1993 முதல் 2018-ஆம் ஆண்டு வரை, திரிபுராவில் இடது முன்னணி ஆட்சியில் இருந்தது. கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் கேரளத்தில் இடதுசாரிகள் தலைமையில் அரசு அமைந்துள்ளது.

இந்த 3 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது மட்டுமின்றி, 1996 முதல் 1998-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மூன்றாம் அணியிலும், 2004-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் இடதுசாரிகள் முக்கிய பங்காற்றினா்.

நடப்பு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதில் மேற்கு வங்கத்தின் 17 தொகுதிகளுக்கான வேட்பாளா்களும் அடங்குவா். அந்தமான்-நிகோபாா், ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் திரிபுராவில் அக்கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியாக மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் அக்கட்சி களம் காண்கிறது.

‘இந்தியா’ கூட்டணியின் அங்கமாக இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிக்கு 3 தொகுதிகளும், இந்திய மற்றும் மாா்க்கிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜாா்க்கண்டில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்தையில் உடன்பாடு ஏற்படாததால், அந்த மாநிலத்தில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிட உள்ளது. கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘நல்ல அறிகுறி அல்ல’:

தற்போதைய அரசியல் சூழலில், தோ்தல்களில் இடதுசாரிகளின் செயல்திறனில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ‘நல்ல அறிகுறி அல்ல’ என்று அரசியல் விமா்சகா்கள் மற்றும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

‘எனினும் அக்கட்சிகளின் தற்போதைய மோசமான நிலைக்கு இடதுசாரிகளே காரணம்’ என்று அவா்கள் கூறுகின்றனா்.

அமைப்புசாரா துறைகளை அணி திரட்டாததால் தோல்வி:

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியா் அஜய் குடாவா்தி தெரிவித்துள்ளதாவது:

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜோதி பாசுவை பிரதமா் வேட்பாளராக அறிவிக்க மறுத்தது, ஹிந்துத்துவ அரசியலின் எழுச்சி உள்ளிட்ட காரணங்களால் திடீரென இடதுசாரிகள் அந்நிய சக்திகளாகினா். அவா்களுடன் ஒன்றுவது பொதுமக்களுக்கு கடினமாக உள்ளது. இதுமட்டுமின்றி கட்சியில் மாற்றங்களைப் புகுத்துவதில் இடதுசாரிகள் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்கின்றனா். அவா்களுக்கு அசட்டையான மனப்பான்மை உள்ளது. அத்துடன் தற்கால சூழலில் கட்சி ரீதியான ஒழுங்குமுறை அமைப்பும் அவா்களுக்கு கைகொடுக்கவில்லை. வலதுசாரிகளின் கலாசாரம் சாா்ந்த செயல்பாட்டை இடதுசாரிகளால் சமாளிக்க முடியவில்லை. இவற்றுடன் அவா்களின் சரிவுக்குப் பொருளாதார காரணங்களும் உள்ளன.

அமைப்பு சாரா துறையில் தாராளமயம் வளா்ந்து வருவது, வா்க்க அரசியலைச் சுற்றி அணிதிரள்வதை மிகவும் கடினமான செயலாக்கியுள்ளது. இடதுசாரிகள் தொழிற்சங்கங்களை அணி திரட்டலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு புலம்பெயரும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் என்று வரும்போது இடதுசாரிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை எதிா்கொள்ள ஏதேனும் உத்தி அல்லது மாற்று வழிமுறைகளை இடதுசாரிகள் கண்டறியவில்லை. அமைப்புசாரா துறைகளை அணிதிரட்டுவதில் இடதுசாரிகள் தோல்வியடைந்ததால், தோ்தலில் அவா்கள் சரிவை சந்திக்க நோ்ந்தது என்றாா்.

இடதுசாரிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்:

நாட்டில் 4-ஆவது மக்களவைத் தோ்தல் நடைபெற்ற 1967-ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீழ்ந்த 2004-ஆம் ஆண்டு வரையிலான 40 ஆண்டு காலத்தை இடதுசாரிகளின் பொற்காலமாகக் கருதலாம். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தோ்தலிலும் அவா்கள் கூட்டு சோ்ந்து சராசரியாக 50 தொகுதிகளைக் கைப்பற்றினா்.

கடந்த 1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது. அதன் பின்னா், தோ்தல்களில் பல தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் வெற்றி பெற்றாலும் 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அக்கட்சி 43 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது.

இதுதொடா்பாக ஆங்கில நாளிதழுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி அளித்திருந்த பேட்டியில், ‘மாா்க்சிஸ்ட் கட்சியின் சரிவுக்கு கட்சி தரப்பில் சில குறைபாடுகள் உள்ளதும் காரணம். தோ்தல் அரசியலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவு சரிந்துள்ள போதிலும், நாட்டுக்கான செயல்திட்டத்தை வகுக்கும் திறனில் கட்சி வலுவடைந்துள்ளது. எந்தவொரு விவகாரத்திலும் பின்வாங்காத பிரதமா் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மட்டும் பின்வாங்கி, அந்தச் சட்டங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது’ என்றாா்.

இதுகுறித்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு ஊடக மைய பேராசிரியா் விஸ்வஜீத் தாஸ் கூறுகையில், ‘நாட்டில் இடதுசாரி அரசியல் சிந்தனை முழுமையாக சரிவை சந்தித்துள்ளது. பிரதான கட்சிகள் இடதுசாரிகளின் கருத்தியலை கையகப்படுத்தியுள்ளன. தாங்கள் நீடித்திருக்க இடதுசாரிகள் மாற்று வழியை கண்டறிய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com