ஜப்பானிய கப்பலில் 136 பேருக்கு கரோனா பாதிப்பு

ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானிய கப்பலில் 136 பேருக்கு கரோனா பாதிப்பு


ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தக் கப்பலில் கரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவலை ஜப்பானிய நல்வாழ்வுத் துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி,  ஜப்பானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கப்பலிலிருந்து ஹாங்காங் துறைமுகத்தில் தரையிறங்கிய ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, டோக்கியோவுக்குத் தெற்கேயுள்ள யோகோஹாமா துறைமுகத்திற்குக் கடந்த வாரத்தில் வந்த டயமண்ட் பிரின்சஸ் என்ற இந்தக் கப்பல் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் 1,100 பணியாளர்களுடன் 2,670 பயணிகளும் சேர்த்து மொத்தம் சுமார் 3,700 பேர் இருக்கின்றனர். புதிய காற்றை சுவாசிப்பதற்காக சுழற்சி முறையில் இவர்கள் கப்பலின் மேற்தளத்தில் வந்து நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இவர்கள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருக்கும் பெரும்பாலான பயணிகள் மிகவும் மனந் தளரத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே 60 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 66 பேருக்கு  வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதெனக் கப்பலின் கேப்டன் அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் நலமாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இருவர், தங்களுக்கு கரோனா அறிகுறி எதுவுமில்லை என்று முகநூலில் தெரிவித்திருக்கின்றனர் என்றும் கப்பலிலுள்ள ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இதுவரை கரோனா வைரஸால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கப்பல்களிலும் விமானங்களிலும் வருவோரில் வைரஸ் அறிகுறிகள் இருப்போரைத் தனிப்படுத்தி ஜப்பானிய அரசு சிகிச்சையளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com