Enable Javscript for better performance
கரோனாவும் ஊரடங்கும் கற்றுத்தரும் பாடங்கள்- Dinamani

சுடச்சுட

  

  கரோனாவும் ஊரடங்கும் கற்றுத்தரும் சமத்துவப் பாடங்கள்

  By டாக்டர் வெ.ஜீவானந்தம்  |   Published on : 23rd May 2020 03:22 PM  |   அ+அ அ-   |    |  

  PTI12-04-2020_000146B

  ஊரடங்கு தொடர்கிறது. 21 நாள்களுடன் முடிந்து போகுமென எதிர்பார்த்தது மேலும் தொடர்கிறது. சலிப்பூட்டினாலும் சகித்துக்கொள்ள வேண்டியதுதான். மக்களின் நலன் கருதிக் குறைந்தபட்ச சுய கட்டுப்பாட்டை ஏற்பது தவிர்க்க முடியாதது. கசப்பு மருத்தைக் குழந்தைக்குக் கட்டாயப்படுத்திப் புகட்டும் செயலே இந்த ஊரடங்கு.

  இந்தக் கட்டுப்பாட்டை கடிதோச்சி மெல்ல எறிதல் என்கிறார் வள்ளுவர். மக்கள் நலன் கருதி விதிக்கப்படும் கட்டுப்பாட்டைக் கருணையுள்ள சர்வாதிகாரி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனப் பல வகையாக அழைக்கிறோம்.

  ஊரடங்கு தேவையா?

  கோவிட் 19 வைரஸ் ஒரு மனிதரிலிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவுவது. நோய் சுமக்கும் மனிதனை  ஊர் சுற்றாமல் தடுப்பது நோய்ப் பரவலைத் தடுக்கும் எளிய வழி. சும்மா இருந்து சுகம் பெறும் யுக்தியே சுய கட்டுப்பாடு. சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகள் மலிந்த சமூகத்தில் ஊரடங்கு எனும் நோய்த்தடுப்பு முயற்சி இரு வேறுபட்ட தாக்கத்தை உருவாக்குகிறது.

  வசதிமிக்கோர், பாதுகாப்பான வருமானப் பின்னணிகொண்ட அரசுப் பணியாளர்களுக்கு இது சம்பளத்துடன் தரப்படும் ஓய்வு நாளே. ஊர் சுற்றும் சுதந்திரம் பறிக்கப்பபட்டது என்ற சலிப்பைத் தவிர வேறு இழப்பேதும் இல்லை. நாட்டில் இவர்கள் மிக மிகச் சிறு கூட்டமே.

  ஆனால் தினசரி உழைப்பால் வாழும் உடைமையற்ற வர்க்கமாகிய தினக் கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு வியாபாரிகளுக்கு இந்த ஊரடங்கு உடல்நலம் சார்ந்ததல்ல, உயிர் வாழ்தல் சார்ந்த சவாலே. அவர்களின் வருமானத்தை, உணவை, உயிர் வாழ்தலைக் கேள்விக்குறியாக்குவதாகும். அவர்களை நோயின்றிக் காப்பது மட்டுமல்ல,  உயிருடன் வாழச் செய்வதும் அரசின் கடமை. இதை அரசு செய்யத் தவறினால் நோயால் சாகிறவர்களைவிடப் பட்டினியால் சாகிறவர்கள் தொகை அதிகமாகி விடும். சமூகக் குற்றங்களும், வன்முறைகளும்கூட அதிகரிக்க வாய்ப்பாகி விடும்.

  மேலைநாடுகளில் வேலையின்றி வாழ்வோருக்கு அரசு உதவித் தொகை தருகிறது. வாடும் பயிருக்கு உயிர் நீர் தருவது போல், இந்த வேலையற்ற காலத்தில் அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுத் தேவைகளுக்கான ஆதரவுத் தொகை தருவது அவசியம். கரோனாவை விஞ்சிய பொருளாதாரப் பேராபத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென்பதையே நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உணர்த்துகிறது. சமூக ஒற்றுமையையும் அமைதியையும் காக்க புதிய யுத்திகளைக் கையாள்வது தவிர்க்க முடியாத தேவை.

  சமத்துவ ஊரடங்கு சாத்தியமா?

  கரோனா இரு கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தியுள்ளது. ராணுவத்தையும், ஆயுதங்களையும் குவித்த வல்லரசு  நாடுகளால் அனைத்தையும் வெல்ல முடியும் என்பதை கண்ணுக்குத் தெரியாத வைரஸ்  பொய்யாக்கி உள்ளது. அறிவியலிலும் பணத்திலும் முன்னணியிலுள்ள நாடுகள் பாதுகாப்பானவை என்பதும் பொய்யாகி உள்ளது.

  உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம் என வாழ்வின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதாகவே இந்த ஊரடங்கு அமைய வேண்டும், இந்தியாவின் 70 ஆண்டு கால ஜனநாயக, சோசலிச அரசு இதற்கான வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கும் உயிர் காக்கும் மருந்துகள் தரும் நல்லரசாக இந்தியா உயர்ந்து நிற்கிறது.

  ஊரடங்கு காலத்தில் உயிர் வாழ்வுக்கான இந்த அடிப்படைத் தேவைகளைத்  தந்து விட்டால், மக்களின் ஒத்துழைப்பை அரசு பெறுவது எளிதாகிவிடும். யார் யாருக்கு, எது எது தேவை என்பதைத் துல்லியமாக அறிய உதவும் புள்ளிவிவரங்கள் அரசிடம் இருக்கத்தான் செய்யும். அவற்றை வழங்குவதற்கான வளமும் வலிமையும் நம்மிடம் உள்ளது. மடை மாற்றம் செய்வதே இன்றைய தேவை. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, “மனிதர்களின் தேவைக்கான அனைத்தையும் பூமித்தாய் தருவாள். ஆனால் மனிதனின் பேராசையை ஈடு செய்ய அவளிடம் எதுவுமில்லை” என்று கூறியிருப்பதை உணர்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

  சிலரின் பேராசை வெறியை அரசு சட்டம் கொண்டு அடக்கினால் சமத்துவ ஊரடங்கு நமக்குப் புதிய வாழ்வுமுறையைப் போதிக்கும் பாடமாகி விடும்.

  எப்படிச் செய்வது?

  சமத்துவ ஊரடங்கு ஒரு நல்ல வாய்ப்பு. மக்களும் பிறர் துன்பத்தை உணரும் மனநிலையைப் பெற்றுள்ளனர். இதைச் சுடுகாட்டு வைராக்கியமாக்கி விடாமல் நிரந்தர வாழ்வு முறையாக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வாக்கு பொய்யல்ல.

  அனைத்து மக்களுக்கும் உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம் தரும் வளமும், நலமும் கொண்டது நம் நாடு. கரோனா எனும் மருத்துவப் பேரிடர் தரும் பாடத்தைக் கற்றுக் கொண்டால் மானுடம் கனவு கண்டு வரும் பொன்னுலகம் மண்ணில் தோன்றி விடும்.

  உணவு சமத்துவம்

  மணிமேகலை தொடங்கி வள்ளல் பெருமான் வரை பசிப்பிணி போக்குதலை நல்லறம் என்று கருதியது நம் நாடு. உணவு பற்றாக்குறையை வென்று உணவு ஏற்றுமதி நாடாக வளர்ந்துள்ளோம். இல்லை என்பதற்கில்லை.  பகிர்வு என்பதன் குறையே நமது வறுமையும் பட்டினியும். இதனை மாற்றுவதற்குரிய அனைத்து வழியும் அரசிடம் உள்ளது.

  வசதி வாய்ந்தவர் எத்தனை, வறுமைப்பட்ட ஏழைகள் எத்தனை என்கிற புள்ளிவிவரங்களை விரலசைவில் அரசு பெற்று விடும் கணிணி யுகம் இது. நாட்டு மக்கள் அனைவரையும் எளிதில் எட்டும் நியாயவிலைக் கடை இணையதள வசதி நாடு முழுவதும் உள்ளது. மக்களின் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளை இதன் மூலம் விலையுடனும் விலையின்றியும் தகுதிக்கேற்ப தந்துவிட முடியும். நகர்மய மோகம் வாழ்வளிக்காது என்பது உணர்த்தப்பட்டு விட்டது. வாழ்வு தரும் என்று நம்பி ஓடிய கிராமத்து மக்களை நகரம் அகதிகளாக விரட்டிக் கொண்டிருக்கிறது. காந்தியும், குமரப்பாவும் கனவு கண்ட கிராமத் தன்னிறைவு சுயராஜ்யமே தீர்வு என்பது தெளிவாகியுள்ளது. கிராமங்கள் நவீன வசதிகள் யாவும் பெற்றுத் தன்னிறைவு பெற வேண்டுமென்கிற கலாமின் “ புறா” சிறகடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அரசு நகர்மைய வளர்ச்சியை ஒதுக்கித் தன்னிறைவு கிராம கம்யூன்களை உருவாக்க வேண்டும். நிலப் பகிர்வு, எந்திரம், ரசாயனம் ஒதுக்கிய இயற்கை வேளாண்மை, புன்செய்ப் பயிர், வீட்டுக் காய்கறித் தோட்டம் என்பனவற்றை அரசு ஊக்குவித்தால் இந்தியா உலகுக்கே சோறு போடும் பெரிய கியூபாவாகி விடும்.

  வாழ்விட சமத்துவம்

  பறவைக்குக் கூடுண்டு மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்கிற புலம்பல் விவிலியப் பழமையானது. ஓடாத ரயில் பெட்டிகளை சில நாள்களில் மருத்துமனைகளாக்கி சாதனை புரிந்துள்ளோம். வீடின்றித் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மூடப்பட்ட பள்ளி, கல்லூரி, புகைவண்டி, விமான நிலையங்களைத் தற்காலிகக் குடியிருப்பாக்கி விட்டால் மூன்றே மாதங்களில் லாரி பேக்கரின் மலிவு மனைகளை ராணுவ உதவியுடன் கட்டி விடலாம்.

  மருத்துவ சமத்துவம்

  கரோனாவுக்கு மருந்தில்லையென்று கைவிரித்து விட்டது நவீன மருத்துவம். தூய வாழ்வுச் சூழல், சத்தான உணவு, நோய்த்தடுப்பு ஆற்றல் வளர்ப்பு, வாழ்வியல் மாற்றம் என்பனவே நிரந்தரத் தீர்வு. மதங்கள் பல உண்மை இறைவன் ஒன்று என்பது போல. மருத்துவ முறைகள் பலவாயினும், எல்லார்க்கும் நல வாழ்வு என்பதே அனைவரின் லட்சியமும். அமெரிக்காவும், நம்மிடம் மிரட்டி வாங்கும் ஹைட்ராக்சிக்ளோரேக்குயின், சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து வடிக்கப்பட்ட கொய்னாவின் ரசாயன மாத்திரை வடிவமே. ஆங்கில  மருத்துவ மருந்துகள்  யாவும் மூலிகைகளின், கனிமங்களின் அடர்த்தியான சிறிய வடிவங்களே. சிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு மருந்தானது. நாகதாளி ரிசர்பின் ரசாயனம் ரத்த அழுத்த மருந்தானது. கீழாநெல்லி ஈரல் நோய்க்கு மருந்தானது. கபசுர கசாயம் கரோனா மருந்தாகிறது. இவற்றை ஆய்வு செய்து ஏற்கும் மனவளம் கொண்டதே அறிவியல் மருத்துவம். எனவே, அரசு தனது ஆயுஷ் எனும் மாற்று மருத்துவ முறைகளுடன் அலோபதியையும் இணைத்து புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மாற்று மருத்துவ முறையை உருவாக்க இதுவே தருணம். பூனை எந்த நிறமானால் என்ன, எலியைப் பிடித்தால் சரி.

  நாடே மருத்துவப் பேரழிவில் சிக்கித் தவிக்கும் இக்கால கட்டத்தில் உன்னத அர்ப்பணிப்புடன் மக்களைக் காப்பது அரசு மருத்துவமனைகளும், மருத்துவத் துறையினருமேயன்றி, ஆடம்பரமான தனியார் மருத்துவமனைகளல்ல. எனவே அரசுத் துறைகளை வலிமைப்படுத்துவதன் மூலமே நாட்டின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்ய முடியும் என்பதை கரோனா தெளிவாக உணர்த்தியுள்ளது.

  எப்படிச் செயல்படுத்துவது?

  இனி உலகம் இயற்கை மற்றும் மருத்துவப் பேரிடர்களுடன் வாழக் கற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. பூமி சூடாகிறது. பனிமலை உருகும், கடல் மட்டம் உயரும் என்கிற எச்சரிக்கைகள் பொய்யல்ல. சில நாள் ஊரடங்கில் காற்று கரிச்சுமை குறைந்து தூய்மையாகியுள்ளது. ஆறுகளின் நீர் தூய்மையாகியுள்ளன. பறவைகளும் விலங்குகளும் இந்த உலகம் எமக்கானது எனச் சுதந்திரமாக உலவத் தொடங்கிவிட்டன. வல்லரசுகளின் ராணுவத்தை, ஆயுதக் குவியலைக் கண்டு கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஏளனமாகச் சிரிக்கிறது.

  இத்தனை நாள் ராணுவத்திற்கு 40 விழுக்காடு செலவு செய்ததைக் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவிடாமல் போனோமேயென வல்லரசுகளும் வருந்துகின்றன. ராணுவச் செலவைக் குறைப்பது, ராணுவ வீரர்களை சமூக சேவைக்கான படையாக மாற்றுவது, ஒவ்வோர் இளையோரையும் நாட்டையும், மக்களையும் காக்கும் சமூக வீரர்களாக்குவது என்று அரசு முடிவெடுக்க வேண்டிய தருணமிது.

  ஊரடங்கு என்பது தண்டனையல்ல என்று ஏற்று புதிய இயற்கைநேய, மனிதநேய வாழ்முறையைக் கற்கும் அகத்தாய்வைத் தொடங்குவோம்.

  அழிக்கும் ஆயுதங்களல்ல, நம்மைக் காக்கும் இயற்கையைக் காப்பதே நமது முதன்மைக் கடமை என்று உணர்வோம். கரோனா எனும் அழிவுச் சிதையிலிருந்து அக்கினிப் பறவையாய் புத்துயிர் பெற்று எழுவோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai