முதியோருக்கு உணவு விநியோகித்த இளவரசர் ஹாரிஸ் - மேகன் தம்பதி!

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவி மேகனும் வீட்டு வாசலுக்கு வந்து உணவு வழங்கிவிட்டுச் சென்றார்கள் என்றால் நம்ப முடியுமா?
முதியோருக்கு உணவு விநியோகித்த இளவரசர் ஹாரிஸ் - மேகன் தம்பதி!

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவி மேகனும் வீட்டு வாசலுக்கு வந்து உணவு வழங்கிவிட்டுச் சென்றார்கள் என்றால் நம்ப முடியுமா?

அரச குடும்பத்தைப் பிரிந்து பிரிட்டனிலிருந்து வெளியேறித் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேறியுள்ள இந்தத் தம்பதி, முதன்முதலாகப் புகைப்படங்களுக்குச் சிக்கியுள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக வீடுகளிலிருந்து வெளியே வர இயலாத நோயுற்றோருக்கும் முதியவர்களுக்கும் வீடுதேடிச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறது லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான பிராஜெக்ட் ஏஞ்சல் புட்.

இந்த அமைப்புக்காக ஹாரிஸும் மேகனும் மேற்கு ஹாலிவுட்டிலுள்ள சியெர்ரா போனிடா சமுதாய அடுக்ககத்தில் வசிப்போருக்கு உணவு வழங்கச் சென்றுள்ளனர். மிகவும் சாதாரணமாக ஜீன்ஸ், டி சர்ட், பேஸ்பால் தொப்பி அணிந்திருக்கும் இருவரும் இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளனர். இந்தப் படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

உணவைப் பெற்றுக்கொண்டவர்களிடம் அவர்களுக்கு உணவு வழங்க வரப் போவது யார் என்று முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஹாரிஸ்- மேகன் தம்பதி உணவு வழங்கிய இரு வீட்டுக்காரர்களில் ஒருவர் டேனியல் டைரெல், 53. நாலாவது மாடியிலிருந்து இறங்கிவந்து பிரதான வாயிலில் உணவைப் பெற்றுக்கொண்டார் இவர்.

எச்ஐவி மற்றும் ரத்த அழுத்த நோயாளியான டேனியல் சொல்கிறார்:

"என்னுடைய தொலைபேசி ஒலித்தது, ஒரு பெண் பேசினார், ஹை, பிராஜெக்ட் ஏஞ்சல் புட்டிலிருந்து மேகன் பேசுகிறேன் என்றார்.

"உங்களைச் சந்திக்கக் கீழே வர வேண்டுமா என்று நான் கேட்டேன்.

"அப்போது எனக்கு அந்த மேகன் என்று தோன்றவில்லை. கீழே இறங்கிச் சென்றபோது இரு பெரிய கறுப்பு நிற கார்கள் தென்பட்டன.

"அவர்களை அழைப்பதற்காக முன் கதவுக்குச் சென்றேன்.

"அவரைத்தான் எனக்கு முதலில் அடையாளம் தெரிந்தது, ஏனென்றால் அவருடைய சிவப்பு முடி. பிறகு மேகனைப் பார்த்தேன். எனக்குப் புரிந்துவிட்டது.

"ஹாரி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவுமில்லை, வேறெதுவும் கூறவுமில்லை.

"இருவரும், இதோ உங்கள் உணவு, நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்று மட்டும் தெரிவித்தார்கள்.

"அவர்கள் உணவுப் பொட்டலங்களைத் தந்தார்கள். நானும் நன்றி கூறினேன். நான் எதுவும் தெரிந்தாற்போல காட்டிக் கொள்ளவில்லை, ஏனெனில் ஒருவேளை அவர்களுக்குச் சங்கடமாகிவிடக் கூடும் அல்லவா.

"ஒரு காரில் அவர்களும் மற்றொரு காரில் அவருடைய பாதுகாவலர்களும் வந்தனர்.

"நாங்கள் இங்கே தனித்துக் கிடக்கிறோம். இரு ஆண்டுகளாக எங்களுக்கு ஏஞ்சல் புட் அமைப்பினர் உணவளிக்கிறார்கள். ஹாரி - மேகன் போன்றவர்கள் வந்து உணவளித்துச் செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்றார் டேனியல்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகுவதென கடந்த ஜனவரியில் அறிவித்த ஹாரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றனர். ஆனால், இப்போது லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குத் தங்கள் மகன் ஆர்ச்சீஸுடன் வந்துள்ளனர். இங்கேதான் குடியேற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

புதிதாக அறக்கட்டளையொன்றை நிறுவும் திட்டத்தில் இருவரும் இருக்கின்றனர். எனினும், காலம் கனியாமல் தொடங்க வேண்டாம் எனக் கருதியுள்ளனர்.பிரிட்டனைவிடச் சிறப்பாக அவர்கள் இங்கே, லாஸ் ஏஞ்சலீஸில் கொண்டாடப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார் டேனியல்.

உண்மையான இந்த நட்சத்திரத் தம்பதி வந்து சென்ற காட்சிகள் யாவும் இப்போது சிசிடிவி பதிவிலிருந்து எடுக்கப்பட்டு ஊடகங்களில் பரபரப்பாகப் பரவுகின்றன. ஊரே கரோனாவுக்கு அஞ்சி ஓய்ந்துகிடக்கும்போது இவர்கள் உணவளிக்க வந்ததை வியக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com