கரோனா கரைத்துவிட்ட ஊர்ப்புற சித்திரை மாதத் திருவிழாக்கள்

சித்திரை மாதம் என்றாலே தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும்...
கரோனா கரைத்துவிட்ட ஊர்ப்புற சித்திரை மாதத் திருவிழாக்கள்

சித்திரை மாதம் என்றாலே தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும் என்பதை அனைவரும் அறிவர்.  நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த முறைப்படி தமிழ் மாதங்களில் சித்திரை முதல் மாதம். நமது தமிழ் மாதங்கள் சூரியனுடைய இயக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவது. கோடையின் வெப்பம் அதிகமாகி, நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு போய் விவசாயப் பணிகளுக்கு இடைவெளி கிடைத்திருக்கும் இந்த காலகட்டத்தைத் தங்கள் ஆலய வழிபாட்டுக்கும், திருவிழாக்களுக்கும் மக்கள் பயன்படுத்திக் கொள்வதென்பது பண்டைய நாளில் இருந்து நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும். கோள்களை ஆய்ந்து சொல்லும் நிபுணர்கள் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளை சித்திரை மாதப் பிறப்பாகக் கொண்டாடுவது என்று காலங்காலமாய் நம் முன்னோர்கள் கடைபிடிக்கும் வழக்கமாக இருந்திருக்கிறது.

கிராமப் புறங்களில் விவசாயமே மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக விளங்கி வந்த காலம் அது. விவசாய வேலைகள் இல்லாமல் இருப்பதால் ஆலயங்களில் தெய்வங்களுக்கும், கிராமங்களில் கிராம தேவதைகளுக்கும் பெரிய அளவில் திருவிழாக்களை நம் முன்னோர்கள் நடத்தி வந்திருக்கின்றனர். பொதுவாக மாரியம்மன், காளியம்மன், திரெளபதியம்மன் போன்ற கோயில்களில் இந்த சித்திரை மாதத்தில் தான் தீமிதி, கரகம், தேர்த் திருவிழா ஆகியவைகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

வருடப் பிறப்பு என்று நாம் கொண்டாடுவது இந்த சித்திரை முதல் நாளைத்தான். நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாட்கள் தேவியைக் கொண்டாடும் திருவிழாக்கள் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த நவராத்திரி என்பது புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்பார்கள். ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி என்றும், தை மாதம் சியாமளா நவராத்திரி என்றும், பங்குனி - சித்திரையில் வசந்த நவராத்திரி என்றும் கொண்டாடி வருகின்றனர்.

மாதந்தோறும் பெளர்ணமி எனும் முழு நிலவு காணமுடியுமென்றாலும், சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி சிறப்பாக ‘சித்திரா பெளர்ணமி’ என்று கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வானத்தில் தோன்றும் நிலவு பெரிதாகவும், ஒளிமிகுந்ததாகவும் இருப்பதால், பண்டைய நாட்களில் மக்கள் பொதுவிடங்களில் திருவிழாக்களைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் “இந்திர விழா” பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இந்த இந்திர விழா சித்திரா பெளர்ணமி அன்றுதான் கொண்டாடப் பட்டிருக்கிறது. பெளர்ணமி அன்று தொடங்கி இருபத்தேழு நாட்கள் இவ்விழா நடைபெற்று வந்திருக்கிறது. இருபத்தி யெட்டாம் நாள் மக்கள் கடலில் நீராடி விழாவை முடித்துக் கொள்வார்கள், இதைக் குறிக்கும் விதத்தில் தான் சிலப்பதிகாரத்தில் இந்த விழாவைக் குறிக்கும் பகுதிக்குக் “கடலாடு காதை” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த இந்திர விழாவின் போதுதான் கோவலனுக்கும் மாதவிக்கும் ஊடல் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது.

சித்திரை மாதத்தில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பொங்கலிடுவது, தேரோட்டம் போன்றவை இந்த காலகட்டத்தில்தான் நடைபெறுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் கம்பன் பிறந்த தேரிழந்தூருக்குத் தெற்கே கோமல் என்றொரு கிராமம். அங்குள்ள மாரியம்மன் ஆலயத்தில் முன்பெல்லாம் மிகச் சிறப்பாக கோடை காலத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தீமிதித் திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து வழிபடுவர். அப்போது சுற்றுப்புற பதினெட்டு கிராமங்களிலிருந்து பதினெட்டுத் தேர்கள் அவ்வூரின் நான்கு முக்கிய வீதிகளிலும் வரும் காட்சிகள் காணக் கிடைக்காத காட்சிகளாகத் திகழ்ந்தன.

சித்திரைத் திருவிழா என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாதான். பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிறப்பு மீனாட்சி கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுமாகும். இந்த விழாவுக்காக மதுரைக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிவார்கள். அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பது வைகையாறு முழுவதும் மனிதர்கள் தலைகளாகக் காணப்படும். சித்திரா பெளர்ணமியன்று நடைபெறும் இவ்விழாவுக்கு அழகரை வரவேற்கும் விதத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளும், மலர்ப் பல்லக்கும் சிறப்பானதாகும். பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி கல்யாணம் நடைபெற்று, அதற்கு மறுநாள் தேர்த்திருவிழா மதுரையின் வீதிகளில் தேரோட்டத்துடன் நடைபெறுவ தென்பது காலங்காலமாக நடைபெற்று வருவதாகும்.

மேலும் இந்தச் சித்திரை மாதத்தில்தான் சைவ நாயன்மார்களில் திருக்குறிப்புத் தொண்டர், இசைஞானியார், விரன்மிண்ட நாயனார், மங்கையர்க்கரசியார், சிறுத்தொண்டர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு குருபூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் இந்த சித்திரை மாதத்தில்தான் நடைபெறும். தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகளிலும் பல ஆலயங்களும் அவற்றுக்கான தேர்களும் பண்டைய நாட்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றுக்கான தேர்மூட்டிகளும் ஆங்காங்கே ராஜ வீதிகளில் உண்டு. ஆனால் காலப்போக்கில் இந்தத் தேர்த் திருவிழா ஒரு முறை பெருவுடையார் தேர் உடைந்து போனதை யடுத்து சுமார் நூறு ஆண்டுகள் நின்று போயிருந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் தீவிர முயற்சிகளையடுத்து,  புதிய தேர் பெருவுடையாருக்குச் செய்து அது முதலில் ஒரு வெள்ளோட்டம் விட்ட பிறகு 2015 முதல் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வந்து அருள்பாலிப்பது தொடந்து நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு விழா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவின் போது பல்லாண்டு காலமாக சின்ன மேளம் எனும் பரதநாட்டிய வழிபாடு நடந்து வந்திருக்கிறது. தஞ்சை நால்வர் எனப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு எனும் நான்கு நட்டுவனார்கள் காலத்தில்  இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சாவூர் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரக் கழகத்தின் சார்பில் இந்த சின்ன மேளம் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சையின் புகழ்பெற்ற நட்டுவனார் மகான் கிட்டப்பா பிள்ளை அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் மூத்த கலைஞர் ஒருவருக்கு விருதும் வழங்கப்படுகிறது. தஞ்சை கலைகளின் பிறப்பிடம் என்பதற்கேற்ப ஆலய விழாக்களிலும் அந்தக் கலைகளை அரங்கேற்றி கலைஞர்கள் மிகச் சிறப்பாக பங்கேற்கிறார்கள்.

கிராம தேவதைகள் ஆலயங்களில் சித்திரை மாதத்தில் தீமிதி விழா சிறப்பாக நடைபெறும். மக்கள் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு குடத்தில் அம்மனை ஆவாகனம் செய்து குடத்தைத் தலையில் சுமந்து கொண்டு அல்லது வேப்பிலையைக் கொத்தாக கையில் வைத்துக் கொண்டு தீக்குழியில் இறங்கி நடந்து அல்லது ஓடி வருவார்கள்.

‘தீமிதி’ என்றும் ‘தீக்குழி இறங்குதல்’ என்றும் சொல்லப்படும் இந்த வழிபாடு சற்று கடுமையானது. கிராமங்களில் கோடைக்காலத்தில் கிராம தேவதைகள் கோயில்களில் நடைபெறும் விழாக்களில், குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், திரெளபதியம்மன் போன்ற பெண் தெய்வங்கள் கோயில்களில் இது மிக விமரிசையாக நடைபெறும்.

கரகம் எடுப்பது என்பதும் கிராம வழிபாட்டு முறைகளில் ஒன்று. அம்மனுக்கு வேண்டுதல் செய்து கொண்டு நீராடி தலைமுழுகி, மஞ்சள் துணியுடுத்தி, ஒரு பித்தளைக் குடத்தில் நீர் நிரப்பி அதன் மீது வேப்பிலை வைத்து, மேள வாத்தியத்துடன் அந்த கரகத்தைத் தலையில் சுமந்து கொண்டு போய் அம்மன் சந்நிதியில் கொடுத்து அந்த நீரை அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பது கரகம் என்பதாகும். இதுதான் கரகம் எடுத்து வழிபடும் முறை. இதையே ஒரு கலையாக, கரகாட்டம் எனும் பெயரில் தலையில் ஒரு குடத்தைச் சுமந்து கொண்டு நையாண்டி மேளத்தின் தாளத்திற்கேற்ப ஆடி வருவதும் உண்டு. இது பக்தி மார்க்கத்தில் சேர்ந்தது அல்ல. திருவிழாவின் ஒரு அங்கமாக மக்கள் ரசனைக்காக நடத்தப்படும் ஒரு கலைஒ நிகழ்ச்சி அவ்வளவே.

காவடி என்பதும் இதைப் போலத்தான். காவடி எடுப்பது என்பது பொதுவாக முருகன் கோயில்களுக்கு வேண்டுதல் செய்து கொண்டு எடுப்பதாகும். காவடி என்பது தோளில் சுமக்கும் ஒரு உருளையான மரக்கட்டையின் மீது வில்போன்ற அமைப்பில் பூக்களாலும், தென்னங்குறுத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அதன் குறுக்குக் கட்டையில் பால், பன்னீர், அபிஷேக நீர், இவற்றை நிரப்பி கட்டிக்கொண்டு தோளில் சுமந்து சென்று, ஆலயத்தில் கொடுத்து, அதில் கொண்டு வந்தவற்றை அபிஷேகம் பூஜை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தச் செய்வது. இது பெரும்பாலும் முருகன் கோயில்களுக்குச் சிறப்பாக ஆடிக் கிருத்திகை போன்ற நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் காவடி எடுத்துச் சென்று வழிபாடு நடத்துவார்கள். பழனி முருகனுக்குக் காவடி, திருத்தணி வேலனுக்கு ஆடிக்கிருத்திகையில் ஆயிரக்கணக்கில் மக்கள் காவடி எடுத்து வருவதைக் காணலாம். அப்படி அவர்கள் காவடி எடுத்து வரும்போது அலகு குத்துவது என்ற வழக்கமுண்டு. கூரான முனையுடைய வேல் போன்ற சிறிய அலகு எனப்படும் ஊசியை உடலிலும், நாக்கிலும் குத்திக் கொண்டு வருவார்கள். காவடிகளில் பால் காவடி, பன்னீர் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. காவடி எடுத்துச் செல்பவர்கள் கூட்டமாகச் செல்லும் போது உடன் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு வருவார்கள். காவடிச் சிந்து என்ற ஒருவகைப் பாடலும் உண்டு. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து பிரபலமானது. அது தாளக்கட்டுடன் அமைந்த பாடல் என்பதால், அந்தக் காவடிச் சிந்தின் ராக, தாள இலக்கணங்களுக் கேற்ப காவடி எடுப்பவர்கள் ஆடுவதும் உண்டு.

கிராம அம்மன் கோவில்களில் பெண்கள் மாவிளக்கு போடுவது என்பது ஒரு வழக்கம். பெண்கள் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு வெள்ளிக் கிழமைகளில், குறிப்பாக ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவது என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம்.

இந்த மாவிளக்கு என்பது என்ன? பச்சரிசி மாவோடு வெல்லம் அல்லது வெல்லச் சர்க்கரை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து, அதில் நெய்விட்டு நன்கு பிசைந்து பசையுள்ளதாக உருவாக்கி, அதை ஒரு தாம்பாளம் அல்லது இலையில் பரப்பி வைத்து, நடுவில் குழி செய்து அதில் நெய் ஊற்றி திரிபோட்டு அம்மன் சந்நிதியில் கொண்டு போய் வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு நெய்விட்ட திரியைக் கொளுத்தி தீபமேற்றி அம்மனை வழிபடுவதுதான் மாவிளக்கேற்றுதல்.

மனிதன் ஓயாமல் உழைத்துக் கொண்டு, வயிற்றுப்பாட்டுக்காக சம்பாதித்துக் கொண்டு தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதோடு, சித்திரை போன்ற விவசாயம் நடக்காத கோடை காலத்தில் இறைவனுக்கு விழா கொண்டாடுவது வழக்கத்தில் இருந்தது.  அந்தந்தப் பகுதியில் வழக்கத்திலுள்ள முறைகளைக் கடைபிடித்து விழாக்களை நடத்துவது, பொது இடங்களில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்தத் திருவிழாவை சிறப்பித்து இறை வழிபாட்டினை நடத்திக் கொள்வது என்பவை போன்ற பழைய பழக்க வழக்கங்கள் பண்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. இப்போது போல அந்தக் காலத்தில் மக்களின் கவனம் சிதறாமல் ஒருமுகப்பட்டு, தான் வசிக்கும் கிராமம், அல்லது சிற்றூரில் இந்தத் திருவிழா நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடி வந்தது புத்துணர்ச்சியையும், அதனோடு அது பக்தி நெறியாகவும் விளங்கி வந்திருக்கிறது. எந்தவொரு நாடும், அல்லது மக்களும் தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்களை விட்டுவிடுவதோ, அது பழமையானது என்று ஒதுக்குவதோ இல்லாமல் அதனைப் பின்பற்றினால் வாழ்வு இன்பமயமாக இருக்கும் என்பது திண்ணம். நமது பாரம்பரியமும் பண்பாடும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் இந்தச் சித்திரைத் திருவிழாக்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதாக இப்போதைக்குள் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், எதிர்பாராத விதத்தில்  வந்து சூழ்ந்துள்ள கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டிய சூழ்நிலையில் இத்தனையும் இந்த ஆண்டில் இல்லாமலாகிவிட்டன. அடுத்த சித்திரைக்குக் காத்திருக்க வேண்டியதுதான்!

[கட்டுரையாசிரியர் - இயக்குநர்,

  பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com