கரோனா வைரஸுக்குக் களப் பலி ஹூபெ மாகாணம்?

கரோனா வைரஸுக்குக் களப் பலியாகும் நிலைமையில் திணறிக் கொண்டிருக்கிறது சீனாவின் ஹூபெ மாகாணம்.
கரோனா வைரஸுக்குக் களப் பலி ஹூபெ மாகாணம்?

தொடர்ந்து திரும்பிய பக்கமெல்லாம் சாவுச் செய்திகள்தான். மருத்துவமனையில் உரிய சிகிச்சையைப் பெற முடியவில்லை, கோமாவில் விழுந்துவிட்ட இசைக் கலைஞர் ஷாங் யாருவின் பாட்டி இறந்துவிட்டார்.

தொடர்ந்து தன்னுடைய தாய்க்காக மருத்துவ உதவி வேண்டிக் கொண்டிருக்கும் ஜான் சென்னுக்கு இன்னமும் கிட்டவில்லை. கடும் காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்புதானா என்பதை அறிந்துகொள்ளவே வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் நிலைமையும்கூட மோசம்தான். இளம் மருத்துவர் ஒருவர், கடந்த இரு வாரங்களில் தூங்கியதே சில மணி நேரங்கள்தான்.

கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட, 6 கோடி மக்கள்தொகை கொண்ட, சீனாவின் ஹூபெ மாகாணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை, குழப்பம், நம்பிக்கையின்மை, விரக்தி எனச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பரவத் தொடங்கினாலும் ஹூபெயில்தான் வைரஸின் தாக்கம் உச்சம். இதுவரையிலான மரணங்களில் 97 சதவிகிதம் கரோனா வைரஸ் காரணமாக. நோயாளிகளில் 67 சதவிகிதம் பேர் கரோனா பாதிக்கப்பட்டவர்கள்.

மரணத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இனி வரப் போகும் நாள்கள் மேலும் துயரங்களைச் சுமந்துகொண்டு வரும் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவும் வேகத்துக்கும் தீவிரத்துக்கும் உள்ளூர் மருத்துவத் துறையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பயங்கரமான கரோனா வைரஸ், சீனா முழுவதும், அப்படியே உலகம் முழுவதும் பரவி மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டுவந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில், பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல்  ஒட்டுமொத்தமாக ஹூபெ மாகாணத்தையே தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது சீனா.

கார் தொழிற்சாலைகளுக்குப் புகழ்பெற்ற ஹூபெயின் தலைநகரான வூஹான், மரணத்தின் நெருக்குதலில் திணறிக் கொண்டிருக்கிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 3.1 பேர் இறந்துகொண்டிருக்கின்றனர். மற்ற பகுதிகளில் நூற்றுக்கு 0.16 பேர் மட்டுமே.

இந்த மாகாணத்தைத் தனிமைப்படுத்தாவிட்டால், மருத்துவ உதவி பெறுவதற்கான முயற்சியில் மக்கள், நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கிவிடுவார்கள், இதன் மூலம் ஒட்டுமொத்த நாடுமே தொற்றுநோய் பாதிக்கப்பட்டதாக மாறிவிடக் கூடும் என்கிறார் சீன நோய்த் தடுப்பு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் கோங்குவான்.

தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் ஹூபெவும் வூஹானும் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன, ஆனால், நோய்ப் பரவலைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிறார் அவர்.

"ஒரு சண்டையில் போரிடுவதைப் போல, சில விஷயங்கள் கடினமாகத்தான் இருக்கும், வேறு வழியே இல்லை, செய்துதான் தீர வேண்டும்." என்கிறார் அவர்.

ஒரு கோடிக்குச் சற்று அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட - ஏறத்தாழ புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகரைப் போன்ற - சீனாவின் இரண்டாம் நிலை நகரான வூஹான், ஓரளவு வளர்ச்சி பெற்ற நகரம்தான். ஆனாலும் ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சௌ போன்ற நகரங்களுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறது. நல்ல மருத்துவமனைகள் இருக்கின்றன, ஆனால், அவையெல்லாம் எந்த மட்டில்?

முதன்முதலில் கரோனா  வைரஸ் பரவத் தொடங்கியபோது உள்ளூர் அலுவலர்கள் காட்டிய தாமதம்கூட அதிகளவில் கிருமி பரவக் காரணமாகிவிட்டதெனக் கூறுவோரும் இருக்கின்றனர்.

ஹூபெயிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. மேலும் மேலும் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்படும் பரப்பு கொஞ்சம்கொஞ்சமாக  அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாரும் உள்ளே நுழையவோ வெளியே வரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

முழுநேரமும் முகக் கவசம் அணியவும் பாதுகாப்பு உறைகள், உடைகள் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் உடை மாற்ற வேண்டி வரலாம் என்பதால் தண்ணீர் குடிப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டியுள்ளதாகவும் முன்னரங்க மருத்துவமனையொன்றில் பணியாற்றும் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான மரணங்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இவை கணக்கில் வந்தவை மட்டுமே. மருத்துவமனைக்கே வராதவர்கள், கரோனா வைரஸ் என்றே கண்டறியப்படாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எனத் தெரியவில்லை.

இசைக் கலைஞர் ஷாங் யாருவின் பாட்டி, நோய்க் குறி மிதமாக இருப்பதாக நினைத்துதான் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவந்தார். ஆனால், கோமாவில் விழுந்து இறந்துவிட்டார். இதுதான் பல இடங்களில் நிலைமை.

மக்கள்தொகை பெருகியுள்ள நாட்டில், இந்தத் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்கவே முடியாது. ஹூபெயைத் தியாகம் செய்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம், ஆனால், வைரஸ் பரவாமல் தடுக்க வேறு வழியேயில்லை.

2014 ஆம் ஆண்டில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக லைபீரியாவில் சுமார் 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர், இதனால் மக்கள் வெறுத்துப் போய் பெரும் வன்முறைகள் எல்லாம் நேர்ந்தன. ஹூபெயின் தனிமையும் முடிவற்றுத் தொடர்ந்தால் எத்தகைய விளைவுகள் நேரிடும் எனச் சொல்ல முடியாது.

நாடு முழுவதுமிருந்து 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் தற்போது ஹூபெக்குச் சென்று சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். வூஹானிலுள்ள  27 மருத்துவமனைகளில் பெரும்பாலானவை முற்றிலும் கரோனா பாதித்தவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் அருகிலுள்ள சிறு நகர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பத்து நாள்களில் 2600 படுக்கைகளைக் கொண்ட இரு புதிய மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து முடித்தனர். அரங்கங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் எல்லாமும்கூட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவக் கூடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

எனினும், மருத்துவமனைகளுக்குத் தேவையானவை கிடைப்பது சிரமமாகவும் குறைவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனாலும் நிலைமை முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையைச் செய்துகொள்வதற்காகவே எட்டு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கல்லூரி மாணவர் ஜான் சென் குறிப்பிடுகிறார். இன்னமும் இவருடைய தாய்க்குப் பரிசோதனை செய்து முடியவில்லை.  நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. யாரையும் குறை கூற முடியாது என்றும் அவரே குறிப்பிடுகிறார்.

சீனா போராடிக் கொண்டிருக்கிறது, ஹூபெ திணறித் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த மக்களைச் சுற்றி மரணத்தின் பிடி தொடர்ந்து இறுகிக் கொண்டேயிருக்கிறது. விரைவில் ஏதேனும் விடிவு பிறக்க  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com