37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சி: தில்லி ஆளப்படும் வரலாறு

37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த தில்லி, 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில். ஷீலா தீட்சித்  முதல்வர். இப்போது மூன்றாவது முறையாக முதல்வராக அரவிந்த் கேஜரிவால்.
37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சி: தில்லி ஆளப்படும் வரலாறு


நாடு விடுதலை பெற்ற பின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவந்திருக்கிறது தலைநகர் தில்லி. விடுதலைக்கு முன் பல நகராட்சிகளைக் கொண்ட தில்லியை முதன்மை ஆணையர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.

1952 மார்ச் 17 ஆம் தேதி முதன்முதலாகத் தில்லி சட்டப்பேரவை தோன்றியது. இந்தப் பேரவையில் 48 உறுப்பினர்கள் இருந்தனர்.

 சட்டம் மட்டும் இயற்றும் அதிகாரம் கொண்டதாக இருந்தது சட்டப்பேரவை. தலைமை ஆணையருக்கு உதவவும்  ஆலோசனைகள் சொல்லவும் அமைச்சரவைக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

அமைச்சரவையில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தவர் பிரம்ம பிரகாஷ். பின்னர் 1955-ல் குர்முக் நிஹல் சிங் பொறுப்பேற்று 1956 வரை முதல்வராக இருந்தார்.

அமைச்சரவை எல்லாம் அகற்றப்பட்டு, 1956 நவம்பர் 1-ல் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரத்தின் கீழ் வரும்  யூனியன் பிரதேசமாகத் தில்லி அறிவிக்கப்பட்டது.  ஒட்டுமொத்த தில்லிக்குமாக நகராட்சியும் உருவாக்கப்பட்டது.

இதனிடையே, தில்லிக்கு ஜனநாயக ரீதியிலான நிர்வாக அமைப்பு வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வந்ததால், நிர்வாக சீரமைப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் பேரில், 1966 தில்லி நிர்வாக  சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் தில்லி வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களையும் கொண்ட ஜனநாயக அமைப்பாக மாநகர கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1987, டிசம்பர் 24-ல் தில்லி நிர்வாக அமைப்பை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பரிந்துரைகளைச் செய்வதற்காக சர்க்காரியா குழுவை (பின்னர் பாலகிருஷ்ணன் குழு) மத்திய அரசு நியமித்தது. யூனியன் பிரதேசங்களில் சிறப்புத் தகுதிநிலை உள்பட பல்வேறு பரிந்துரைகளைச் செய்தது குழு.

பாலகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைப்படி, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, 1992, பிப். 1-ல் தில்லிக்கெனத் (தற்போதுள்ளவாறு) தனி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையின் முதல் கூட்டம், 1993 டிசம்பர் 14-ல் நடைபெற்றது. பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 70. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள். இன்று வரை அதுவே தொடருகிறது, யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பது தொடர்பாகத் தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

1956 நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1993 டிசம்பர் 2 ஆம் தேதி வரையிலும் ஏறத்தாழ 37 ஆண்டுகள், தில்லிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்று யாருமில்லை. குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் கீழேதான் இருந்தது.

இதுவரை யார் யாரெல்லாம் முதல்வர்கள்?

17, மார்ச், 1952 - 12, பிப். 55 : பிரம்ம பிரகாஷ், காங்கிரஸ்;

12, பிப். 55 - 1, நவ. 1956 : குர்முக் நிஹல் சிங், காங்கிரஸ்;

1, நவ. 1956  - 2, டிச. 1993 : குடியரசுத் தலைவர் ஆட்சி;

2, டிச. 1993 - 26, பிப். 1996 : மதன்லால் குரானா, பாரதிய ஜனதா;

26, பிப். 1996 - 12, அக். 1998 : சாஹிப் சிங் வர்மா, பாரதிய ஜனதா;

12, அக். 1998 - 3, டிச. 1998 : சுஷ்மா சுவராஜ், பாரதிய ஜனதா;

3, டிச. 1998 - 28, டிச. 2013 : ஷீலா தீட்சித், காங்கிரஸ்;

28, டிச. 2013 - 14, பிப். 2014 : அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி;

14, பிப். 2014 - 14, பிப். 2015 : குடியரசுத் தலைவர் ஆட்சி;

14, பிப். 2015 - தொடருகிறார் : அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி.

37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த தில்லி, 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, ஷீலா தீட்சித்தான் தொடர்ந்து காங்கிரஸில் முதல்வராக இருந்தார். இப்போது மூன்றாவது முறையாக முதல்வராகிறார் அரவிந்த கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com