ஏழு பேர் விடுதலை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரு வார அவகாசம்

ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு  தமிழக அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
ஏழு பேர் விடுதலை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரு வார அவகாசம்


ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு  தமிழக அரசை உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) அறிவுறுத்தியது.

இதற்காக இரு வாரங்கள் கால அவகாசம் தருவதாகவும் அமைச்சரவையின் தீர்மானம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேரறிவாளன் மனுவின் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம்; அதற்கு மேலாக  ஆளுநருக்குத் தங்களால் அழுத்தம் கொடுக்க இயலாது என்று தெரிவித்தார்.

இதுபற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர், அமைச்சரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை; கைகழுவும் விதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாகத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள இரு வாரங்கள் கால அவகாசம் தருவதாகவும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தொடர்ச்சியாக, 2018 செப்டம்பர் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து, 2018 செப்டம்பர் 9 ஆம் தேதி, பேரறிவாளன் உள்பட  இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையிலுள்ள  ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.

இந்த நிலையில் அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளதாகவும் விரைவில் ஏழு பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, இந்த மனுவைக் கருத்துக் கேட்டு மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் சரியல்ல என்று, 2018 செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில்  ஆளுநர் மாளிகை தெரிவித்தது. பின்னர், இதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com