தன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே காதல் வாழ்வு

மேலை நாடுகளில் பல்வேறு விழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவற்றில் ஒன்றுதான் காதலர் தினம். காதலர் தினம் எனறால் என்ன? காதல் என்றால் என்ன? இதன் பொருள் அறிந்துதான் இவர்கள் கொண்டாடுகிறார்களா?
தன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே காதல் வாழ்வு


மனித வாழ்வில் மாற்றங்கள் பல அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன? எங்கிருந்து தோன்றின? அதனால் மனிதகுலம் அடைந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

நம் நாட்டின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருப்பினும் அடிப்படையில் இந்திய மக்களின் குடும்ப உறவுகள் மொழிப்பற்று, பாரம்பரியம், நாட்டுப்பற்று இவற்றில் இந்திய மக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள்.

இவ்உயரிய பண்புகளே உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டைத் தனித்தன்மை வாய்ந்தாகக் காட்டுகிறது.

நாகரிகம் என்ற பெயரில் மனித வாழ்வைச் சீரழிக்கும் போக்கைத்தான் மேலை நாகரிகம் போதித்துள்ளது. போதைப் பொருள் உற்பத்தி, அதன் பயன்பாடு, வன்முறைக் கலாச்சாரம்; பாலியல் இச்சையைத் தூண்டும் நீலப்  பட வெளியீடு, இதன் மூலம் விளைந்த எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் இவைகள்தான் மேலை நாட்டின் மூளையில் உதித்த தீய சக்திகளாகும். இந்தத் தீய சக்திகளின் அழிவுப் பாதையில் இருந்து மக்களை மீட்கத் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டியது மனித நேயம் கொண்டவர்கள் கையில் உள்ளது.

மேலை நாடுகளில் பல்வேறு விழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவற்றில் ஒன்றுதான் காதலர் தினம். காதலர் தினம் எனறால் என்ன? காதல் என்றால் என்ன? இதன் பொருள் அறிந்துதான் இவர்கள் கொண்டாடுகிறார்களா?

ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ் ஆகியோரின் காதல் தெய்வீகமானது - புனிதமானது. இந்த வரலாற்றுக் காதல் நாயகர்களின் வாழ்க்கையைப் பின்பற்றுகிறதா இன்றைய காதல்?

முகநூலில் முகத்தைப் பார்க்காமல் காதல் கொண்டு, எதிர்கால வாழ்வைத் தொலைத்தவர்கள் நிலை கண்டு மனம் மிகவும் வருந்துகிறது.

நவீன தொழில்நுட்பம் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல் அப்பாவித்தனமாக இளைஞர்கள் அதிலும் படித்தவர்கள் ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு இன்னலுக்கு உள்ளாகிறார்கள். நம் இலக்கியங்களில் காதல் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காதலியைப் பிரிந்து காதலன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்கிறான். அவனது கால்கள் முன்னோக்கி நடைபோடுகின்றன. கண்களோ காதலியைத் திரும்பிப் பார்த்துகொண்டே செல்கின்றன.

காதலி எண்ணுகின்றாள். தினமும் காலுக்குத் தொண்டு செய்தேன், கொஞ்சமும் நன்றி உணர்வு இல்லாமல் விரைந்து முன்செல்கிறது. கண்களுக்கு எந்தவிதத் தொண்டும் செய்யவில்லை. ஆனால், என்னைப் பிரிந்து செல்வதை நினைத்துக் கவலையுடன் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது. என்ன உலகம் இது.

வள்ளுவர் குறிப்பிட்டது போல் கீழோர் மறப்பார், மேலோர் நினைப்பார் என்ற குறள் இதைத்தான் குறிப்பிடுகிறதோ என்று எண்ணுகிறாள். இதை உண்மையான காதலாக அடையாளம் காட்டுகிறது.

காதல் என்பது உள்ளார்ந்த அன்புடன் இருமனம் ஒருமனதாகி இன்ப, துன்பத்தில்  ஒருவருக்கு ஒருவர் கருத்தொற்றுமையுடன் காதல் கொண்டு திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து நின்று அன்னையை, தந்தையை, உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மீது அன்புடன் வாழ்ந்து பேறு பதினாறு பெற்று வாழ்கின்ற வாழ்வே காதல் ஆகும். அதுவே உண்மையான காதலுக்கான இலக்கணமாகும்.

புற அழகைக் கண்டு காதல் கொண்டு இணைகின்ற வாழ்வு காதலாகாது. ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளாமல் காதல் கொண்டால் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட நேரிடும். தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம், வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் அவசரப்பட்டு விட்டோம் என்று வருந்துவது காதலாகாது.

தான் தெரிவு செய்த காதலன்; காதலி தத்தமது பெற்றோர்களை அன்போடும், அரவணைப்புடன் பேணி இல்லறம் காண்பதுதான் ஒப்பற்ற காதலாகும்.

தாய் மொழியை, தாய் நாட்டைத் தனக்கு கிட்டிய வாழ்வை ரசித்து இன்புற்று வாழ்வதே இணையில்லா காதலாகும். அன்புக்கு இன்னும் ஒரு பெயர் காதல், காதல் வாழ்வு.

தன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com