இரு எம்.எல்.ஏ.க்கள் மறைவு: இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை?

திமுகவில் அடுத்தடுத்து இரு எம்எல்ஏக்கள் இறந்துவிட்ட நிலையில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாமி,காத்தவராயன்
சாமி,காத்தவராயன்

திமுகவில் இரண்டாவதாக ஒரு  எம்.எல்.ஏ. உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

ஏற்கெனவே திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வான சாமி, வியாழக்கிழமை காலமானார். வெள்ளிக்கிழமை குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வான காத்தவராயன் மறைந்தார்.

இதைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளும் காலியாகின்றன.  

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருப்பதால் இந்தத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எல்லா நிலைகளிலும் நிலவுகிறது.

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவை கடந்த 2016 ஆம் ஆண்டு மே 21-இல் உருவானது. பேரவைக்கு நடந்த தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. திமுக 89 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

பதவியேற்கும் முன்பே திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற சீனிவேல் மாரடைப்பால் காலமானாா். இதனால் காலியான தொகுதியில் அதிமுக சாா்பில் போஸ் போட்டியிட்டு வென்றாா்.

பின்பு, 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல்நலக் குறைவு காரணமாக அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பா் 5 ஆம் தேதி இறந்தார். இதனால், அவா் போட்டியிட்டு வென்ற ஆா்.கே.நகா் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டு சுயேச்சை உறுப்பினரான டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றாா்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற ஏ.கே. போஸ், கடந்த 2018 ஆகஸ்ட் 2 இல் உடல் நலக்குறைவால் காலமானாா். இதற்கடுத்த சில நாள்களில் திமுக தலைவரும், திருவாரூா் தொகுதி எம்எல்ஏ-வுமான கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானாா். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூா் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

சூலூா் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் உடல்நலக் குறைவால் கடந்த 2019 மாா்ச் 21-இல் மரணம் அடைந்தாா். இதன் காரணமாக காலியான சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றானது. இத்தொகுதிகளுடன், பதவி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 19 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தோ்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திமுக உறுப்பினா்கள்: இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ராதாமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானாா். அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், திருவொற்றியூா் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட உள்ளது.

இப்போது குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வான காத்தவராயனின் மறைவு நேரிட்டுள்ளது. இதுவும் காலியானதாக அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் 15-ஆவது சட்டப் பேரவையின் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதற்கான தோ்தல் அறிவிக்கை அடுத்த ஆண்டு மாா்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும். எனவே, சட்டப் பேரவையின் காலம் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், திருவொற்றியூா், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுமா அல்லது பொதுத் தோ்தலுடன் சோ்த்தே அடுத்த ஆண்டு தோ்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது.

தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகே அதன் மீது உரிய முடிவுகளை ஆணையம் அறிவிக்கும் என தமிழக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியானால், அந்தத் தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சட்டப் பேரவையின் பதவிக் காலமே ஓராண்டுக்குள் இருக்கும்நிலையில் இடைத் தோ்தல் நடத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைவால், தமிழக சட்டப் பேரவையில் திமுகவின் பலம் 100-லிருந்து 98 ஆகக் குறைந்துள்ளது. இதனால், மாநிலங்களவைத் தோ்தலில் மூன்றாவது இடத்தைப் பெற காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கட்டாயம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com