குமரி அருகே 308 பானைகளில் சமத்துவப் பொங்கல்: திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் பங்கேற்பு

கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் 308 பானைகளில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பி.டி.செல்வகுமார், ஹெச்.வசந்தகுமார் பங்கேற்றனர். 
குமரி அருகே 308 பானைகளில் சமத்துவப் பொங்கல்: திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் 308 பானைகளில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பி.டி.செல்வகுமார், ஹெச்.வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு 308 மண் பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்தனர். முன்னதாக மாணவ, மாணவியர் பங்கேற்ற கிராமியக் கலைநிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், குதிரை, ஒட்டகம், வில்வண்டிகள் ஆகியவை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் சவாரி செய்து மகிழ்ந்தனர். 

இவ்விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியது: தமிழகத்தின் தென்கோடி கடற்கரையில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பங்குப்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மும்மதத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் இங்கு இவ்விழா நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த பொங்கல் விழா மூலம் நாட்டில் சமாதானம், அமைதி, ஒற்றுமை வளர வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையில் விடியல் ஏற்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்றார் அவர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை டி.ராஜேந்தர், ஹெச்.வசந்தகுமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com