பெருஞ்சுறாவையே வேட்டையாடக் கூடிய மாபெரும் கடல்உயிர்

பெருஞ்சுறாவையே வேட்டையாடக் கூடிய மாபெரும் கடல் உயிர் - ஓங்கல் இனத்தின் மிகப் பெரிய வகையான ‘கில்லர் வேல்‘ (Killer Whale) ஓங்கல்கள்.
கருங்குழவி ஓங்கல்
கருங்குழவி ஓங்கல்

கடலில் மிகப் பெரிய கடல் ஆளுமையான பெருஞ்சுறாவுக்கு எதிரிக் கூட்டமான பெருஞ்சுறாவைக் கொன்று தின்னவும் கூடிய, பெருஞ்சுறாவையே வேட்டையாடக் கூடிய மாபெரும் கடல் உயிர் - ஓங்கல் இனத்தின் மிகப் பெரிய வகையான ‘கில்லர் வேல்‘ (Killer Whale) ஓங்கல்கள்.

சென்னை உள்பட வடதமிழக கடலோரங்களில் டால்பின் எனப்படும் ஓங்கலுக்கு, குழவி வேடன் என்றொரு பெயர் உண்டு. ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கப் பயன்படும் குழவியைப் போலவே உருண்டு திரண்ட உடலமைப்புடன் இருப்பதால் குழவி வேடன் என்ற பெயர் ஓங்கலுக்குப் பொருத்தமான பெயர்தான்.

ஓங்கல்களில் மொத்தமுள்ள 35 இனங்களில் மிகப் பெரிய ஓங்கல் இனம் என்று பார்த்தால் அது கில்லர் வேல்தான். தமிழில் இதை கருங்குழவி ஓங்கல் எனச் சொல்லலாம்.

பெருங்கடல்களின் மிகப்பெரிய வேட்டைக்கார பாலூட்டி இதுதான். உலகில் தற்போது உயிர்வாழும் கடல் பாலூட்டிகளில் மிகப்பெரிய அளவு மூளையுள்ள இரண்டாவது உயிரும் கருங்குழவி ஓங்கல்தான்.

ஓங்கல் இனத்தைச் சேர்ந்த பற்கள் இருக்கும் பெரிய வகைப் பாலூட்டியான கருங்குழவி ஓங்கல், திமிங்கிலம் போல பெரிதாக இருப்பதால் இதற்கு ‘கொல்லும் திமிங்கிலம்‘ எனப் பெயர் வந்துவிட்டது.

அது மட்டுமல்ல. கருங்குழவி ஓங்கல், பலீன் வகையைச் சேர்ந்த திமிங்கிலங்களை வேட்டையாடக்கூடியது. ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் (Basque) இன திமிங்கில வேட்டைக்காரர்கள், இது திமிங்கில வேட்டையாடுவதைப் பார்த்து, அவர்கள் மொழியில் ‘அசசின் பாலனோ‘ (Asesin balleno - திமிங்கிலக் கொல்லி) என்று பெயரிட, ‘வேல் கில்லர்‘ என பொருள்படும் இந்தப் பெயர் நாளடைவில் தலைகீழாக மாறி ‘கில்லர் வேல்‘ என்றாகி விட்டது.

கருங்குழவி ஓங்கலின் இன்னொரு பெயர் ஓர்கா (Orca). இந்தப் பெயரும் ஒரு வியப்பூட்டும் பெயர்தான். இது தீமை செய்பவர்களைத் தண்டிக்கும், பாதாள உலகத்தில் வாழும் ரோமானியக் கடவுள் ஒருவரின் பெயர்‘! பீப்பாய் வடிவத்தில் இருப்பதால் ஓர்கா என்ற பெயர் வந்ததாகவும்கூட சொல்வார்கள்.

கருங்குழவி ஓங்கல்களில் சில, சிறிய பள்ளிப் பேருந்து அளவுக்குப் பெரியவை. கருங்குழவி ஓங்கல்களில் ஆண் ஓங்கல், 6 முதல் 8 மீட்டர் நீளம் வரை இருக்கும். (20 முதல் 26 அடி). ஏன் 32 அடி நீள ஓங்கல்கூட உண்டு. ஆண் கருங்குழவி ஓங்கல்களின் எடை 3,600 முதல் 5,400 கிலோ எடை. பிறந்த குட்டிகள் பிறக்கும் போதே மூன்று மனிதர்களின் மொத்த எடையைக் கொண்டவை.

கருங்குழவி ஓங்கல் கூட்டத்தை பாட் (Pod) என்பார்கள். இதில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான உணவுப்பழக்கம் உண்டு. கருங்குழவி ஓங்கல் கூட்டம், தாய்வழி சமூகமாகச் செயல்படும். ஒரு கூட்டத்தில் ஐம்பது ஓங்கல்கள் வரை இருக்கும். தனது வாழ்நாள் முழுவதையும் ஒரே கூட்டத்திலேயே இவை கழிக்கும். கட்சி மாறாது.

நாளை நமதே படத்தில் வரும் அன்பு மலர்களே குடும்பப் பாடல் போல, ஒவ்வொரு கருங்குழவி ஓங்கல் கூட்டத்துக்கும் என்று குறிப்பிட்ட தனித்தனி குரலொலி உண்டு. கடலில் பிரிந்து திரியும் கூட்டம் ஒன்று இந்தக் குரலொலி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்ளும்.

இந்த குறிப்பிட்ட குரலொலி, தலைமுறை தலைமுறையாக, பாரம்பரியமாகத் தொடரும். புதிதாகப் பிறந்த குட்டி, தாயிடம் இருந்து இந்த தனித்துவமான குரலொலியைக் கற்றுக் கொள்ளும். தன் கூட்டத்துடன் தகவல் பரிமாற கருங்குழவி ஓங்கல், சீழ்க்கை (விசில்) உள்பட பல்வேறு ஒலிகளைக் கையாளும். தாடைகளை ஒன்றுடன் ஒன்று தட்டியும் ஓசை எழுப்பும்.

கருங்குழவி ஓங்கல்களின் ஆண்கள், வளர்ந்து பெரிதான பிறகும்கூட ‘அம்மா பிள்ளைகளாக‘ தாயுடன் நெருக்கமாக வாழும். கூட்டமாகத் திட்டமிட்டு இவை இரையை வேட்டையாடும். காயமடைந்த, நோயுற்ற, முதிர்ந்த ஓங்கல்களை கூட்டத்தின் மற்ற ஓங்கல்கள் உணவூட்டி காப்பாற்றும்.

கருங்குழவி ஓங்கல்களின் முதுகுத் தூவி ஆறடி உயரம் (!) கொண்டது. செங்குத்தாக நேர் எழுந்து நிமிர்ந்து நிற்கும் இந்த முதுகுத்தூவி மூலம் மணிக்கு 29 முதல் 30 மைல் வேகத்தில் கருங்குழவி ஓங்கலால் நீந்த முடியும். இந்த வேகம் காரணமாக கடலில் எந்த ஓர் உயிரையும் கருங்குழவி ஓங்கலால் விரட்டிப் பிடிக்க முடியும்.

துள்ளிப் பாயவும், பாய்ந்த நிலையில் அப்படியே திரும்பவும் இந்த வகை ஓங்கலால் முடியும். கூம்பு வடிவிலான 50 கூர்ப்பற்களால், பெரிய சுறாவைக் கூட ஒரே கடியில் இரண்டாக்க கருங்குழவி ஓங்கலால் முடியும். கடலில், பாலூட்டிகளை வேட்டையாடி உண்ணும், ஒரே ஓங்கல் இனம் இதுதான். பிற இன ஓங்கல்களையும் கருங்குழவி ஓங்கல் கொன்று தின்னக் கூடியது.

கருங்குழவி ஓங்கலுக்கு நுகர்திறன் இல்லை. கண்பார்வை மற்றும் ஒலிமூலம் பார்க்கும் எக்கோ லொக்கேஷன் திறமை மூலம் இது இயங்குகிறது. இதன் கண்பார்வை நாயின் பார்வையைவிடக் கூர்மையானது. இதன் எக்கோ லொக்கேஷன் திறமை வவ்வாலைவிட அதிகமானது.

முன்பே கூறியது போல, கருங்குழவி ஓங்கல் கூட்டம், கடலில் பெருஞ்சுறாவைக் (Great White Shark) கூட பிரித்து மேய்ந்து, உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.
திமிங்கிலங்களும் கூட, கருங்குழவி ஓங்கல்களிடம் இருந்து தப்ப முடியாது. அவ்வளவு ஏன்? திமிங்கிலங்களில் சூராதிசூரனான பற்களுள்ள ஸ்பெர்ம் திமிங்கிலம் கூட, கருங்குழவி ஓங்கல்களிடம் சிக்கினால் கைமாதான். இத்தனைக்கும் ஸ்பெர்ம் திமிங்கிலம் கருங்குழவி ஓங்கலைவிட மூன்று மடங்கு பெரியது.

திமிங்கிலங்கள் மட்டுமல்ல, ஆவுளியா, திருக்கை, ஆமை, கணவாய், கடற்சிங்கம், கடற்பறவைகள் என 140 வகை கடல் உயிர்களை கருங்குழவி ஓங்கல் இரையாக்கக் கூடியது. என்றாலும்கூட கருங்குழவி ஓங்கல்களின் விருப்பத் தேர்வு பெருஞ்சுறாக்களும், திமிங்கிலக் குட்டிகளும்தான்.

ஒரு கூட்டமாக வரும் இந்த வகை ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து நுட்பத்துடன் தாக்கக் கூடியவை. பெருஞ்சுறா மட்டுமல்ல, எந்த வகை சுறாவாலும் பின்பக்கமாக நீந்த முடியாது. திடீரென நிற்கவும் முடியாது. அதுபோல நீந்தாவிட்டால் சுறாவால் மூச்சுவிடவும் முடியாது. அது மட்டுமல்ல, பெருஞ்சுறாவைப் பொறுத்தவரை அது தலைகீழாகப் புரட்டப்பட்டால் அதனால் மூச்சுவிட முடியாது. ஒருவித அசைவற்ற நிலைக்கு (Tonic Immoblity) பெருஞ்சுறா அப்போது ஆளாகிவிடும்.

எதிரியின் இந்த குறைபாடுகளை அழகாக அறிந்து வைத்திருக்கும் கருங்குழவி ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து அதை முன்புறம் முன்னேற விடாமல் நிலைநிறுத்தும். அதை நீந்தவிடாமல் செய்து, பின்னர் முட்டி மோதி பெருஞ்சுறாவை தலைகீழாகப்புரட்டி அதை மூச்சுவிடமுடியாத நிலைக்கு கொண்டு செல்லும். அதன்பின் பெருஞ்சுறாவின் ஈரலை அவை குறிவைக்கும்.

கருங்குழவி ஓங்கல்களின் உணவுப்பழக்கம் அலாதியானது. திமிங்கிலக் குட்டிகளை வேட்டையாடினால் திமிங்கிலக் குட்டியின் நாக்கை அவை விரும்பி உண்ணும். அதுபோல பெருஞ்சுறாவை வேட்டையாடினால் இரும்புச் சத்து நிறைந்த அதன் ஈரலே ஓங்கல்களின் விருப்ப உணவு. 21 அடி நீள பெருஞ்சுறா ஒன்றில் 453 கிலோ எடை கொண்ட ஈரல் இருக்க வாய்ப்புள்ளது. அப்புறம் என்ன விருந்து கொண்டாட்டம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com