பிகாரில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை: அமித் ஷா நம்பிக்கை

பிகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
இணையவழிப் பொதுக்கூட்ட மேடையில் அமித் ஷா
இணையவழிப் பொதுக்கூட்ட மேடையில் அமித் ஷா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறிப்பிட்டார்.

தில்லியிலிருந்தவாறு பிகார் மக்களிடையே இணைய - ஊடகங்களின்வழி நடத்தப்பெற்ற "பொதுக்கூட்டத்தில்" அமித் ஷா உரையாற்றினார். இவ்வாறு ஒரு கூட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத் தொடக்கத்தைப் போல நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில்தான் இந்த மாநிலம் காட்டாட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கரோனா நோய்த் தொற்றால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை பாரதிய ஜனதா நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்ட அவர், மோடி ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டித் திட்டமிடப்பட்ட 75 இணையவழிக் கூட்டங்களில் இதுவுமொன்று என்றார்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களைப் பங்கேற்கச் செய்யவும் தற்சார்பு இந்தியா இயக்கத்தைப் பரப்பவுதுமே கூட்டத்தின் நோக்கம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

14 லட்சம் பேர் பார்த்தனர்

அமித் ஷாவின் இணையவழிக் கூட்டத்தை 14 லட்சம் பேர் பார்த்ததாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

யூ டியூபில் 5 லட்சம் பேரும் ட்விட்டரில் 66 ஆயிரம் பேரும் அமித் ஷாவின் பேச்சைக் கேட்டதாக பா.ஜ.க.வின் ஊடகப் பொறுப்பாளர் சஞ்சய் மயூக் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com