திருச்சியில் குடும்ப விழாக்கள் மூலம் பரவும் கரோனா தொற்று

திருமண நிச்சயதார்த்தம், பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்கள் மூலம் திருச்சியில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருமண நிச்சயதார்த்தம், பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்கள் மூலம் திருச்சியில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. புது மாப்பிள்ளை, பிறந்த நாள் கொண்டாடிய குழந்தை உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் கூட்டம் கூடுவது தடுக்கவே அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் 50 பேர் வரையிலும், இறுதி ஊர்வலத்தில் 20 பேர் வரையிலும் உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கலந்துகொள்ள அரசு அனுமதித்து வருகிறது.

ஆனால், பெரும்பாலான இடங்களில் இக்கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை. திருமணங்கள், இறுதி ஊர்வலங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூடுவது தொடர்கதையாகி வருகிறது. அதேபோல, பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமண நிச்சயதார்த்தம் போன்றவற்றிலும் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். 

இதுபோன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் வாயிலாக திருச்சியில் அடுத்தடுத்து கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "திருவானைக்கா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சில தினங்களுக்கு முன் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். இதற்கு வந்து சென்றவர்கள் மூலமாக அந்தக் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல கோட்டை பகுதியில் ஒரு இளைஞருக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கும் பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்து சென்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கூட்டத்தின் வாயிலாகவே கரோனா வைரஸ் எளிதில் பரவும் என எவ்வளவு எடுத்துக் கூறினாலும், பொதுமக்கள் புரிந்துகொள்வதே இல்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெயரளவுக்குக்கூட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்லை. பாதிப்பு வந்தவுடன் கதறி அழுகின்றனர். முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி" என்றார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் முடிந்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. மாநகரில் ஊரடங்கு விதிகளைக் கடைப்பிடிக்காமலோ அல்லது அதிக அளவில் கூட்டத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டோ நிகழ்ச்சிகளை நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ இதுபோன்று யாரேனும் நிகழ்ச்சிகளை நடத்தினால், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.

இதுவரையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 189 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 138 பேர் குணமடைந்துள்ள நிலையில், 50 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com