Enable Javscript for better performance
சவப்பெட்டிகளின் நாடான இத்தாலி- Dinamani

சுடச்சுட

  

  கரோனா: சவப்பெட்டிகளின் நாடான இத்தாலி

  By ததாகத்  |   Published on : 25th March 2020 03:31 PM  |   அ+அ அ-   |  

  AP20083566835061

   

  நரகம் எனப்படுவது எப்படி இருக்கும்? இப்போது ஒரு முறை இத்தாலிக்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பிவர முடிந்தால் தெரிந்துவிடும்.

  கரோனா தொற்று தோன்றிய சீனாவில் இதுவரை இறந்தவர்களைவிடவும் மிக அதிக அளவில் இங்கே இறந்துகொண்டிருக்கின்றனர்.

  இத்தாலியின் மக்கள்தொகை 6 கோடியே 4 லட்சம். இதுவரையிலும்  (மார்ச் 25, பகல் 2.30 மணி) 6,820 பேர் உயிரிழந்துள்ளனர். 

  செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கும் இரவு 10.30 மணிக்கும் இடைப்பட்ட 6 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டதாக 6 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

  ஆள்களே இல்லாவிட்டாலும், நாட்டின் சின்னத்தைப் போல, எங்கேயும் இருப்பவை சவப்பெட்டிகள் மட்டும்தான்.

  உடல் அடக்கத்துக்காக ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு ஒரு முறை ஒலித்துக்கொண்டிருந்த தேவாலய மணிகள், இப்போது ஒரே நாளிலேயே பல முறை ஒலிக்க நேர்ந்திருக்கிறது. ஆனாலும் அந்தக் கடைசிப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்குத்தான் யாருமில்லை. 

  லம்பார்டி பிராந்தியத்தில் புதைக்க இடமின்றியும் எடுத்துச் செல்ல ஆள்கள் இன்றியும் ராணுவ வாகனத்தில் சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. 

  உலகின் மிக உற்சாகமான நகரங்களில் ஒன்றான மிலன் உள்பட இத்தாலியின் பெரும்பாலான நகரங்களும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன.

  வடக்கு இத்தாலியிலுள்ள பெரும்பாலான நகர்களைப் போலவே செர்ரவாலி நகரத்தின் கல்லறைத் தோட்டத்தில் அடுக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டிகளின் படங்கள் வெளியாகி உலகையே உலுக்கியிருக்கின்றன.

  உள்ளபடியே இப்படியெல்லாம் நடைபெறும் என்று இத்தாலியில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

  கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு விலகியிருக்குமாறு அறிவிப்புகள் வெளியிட்ட காலத்தில் அவற்றை யாரும் பொருள்படுத்தவில்லை (நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்). 

  நாட்டின் உயர் பொறுப்பிலுள்ள ஒருவரே ஒரு மதுக் கூடத்தில் மதுக் கோப்பையை ஏந்தியவாறு படமெடுத்து சுட்டுரையில் வெளியிட்டு,  என்னை என்ன செய்துவிடும் கரோனா? என்கிற அளவுக்குக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

  (இதேபோன்ற நிலைமைதான் சில நாள்கள் முன்வரையிலும் பிரிட்டனிலும். எத்தனையோ முறை அறிவுறுத்தியபோதிலும் மக்கள் அவர்கள் விருப்பத்துக்கு வெளியே அலைந்துகொண்டிருந்தனர். பூங்காக்களிலும் மதுக் கூடங்களிலும் திரண்டனர். இதனால் வெறுத்துப் போன பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இதே நிலை நீடித்தால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தடை விதித்துவிடுவேன் என்று எச்சரித்தார். இப்போது தடையும் விதித்துவிட்டனர். மூன்று முறைக்கு மேலே வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்படும்).

  இந்த நிலையில் யார் யாருக்கு  இருக்கிறதென்றே அறிய முடியாத அளவுக்கு மக்கள் சமுதாயத்துக்குள் தற்போது பரவிவிட்டிருக்கிறது கரோனா தொற்று. இத்தாலியில் முதியோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள் எளிதாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  இதனால் தொடர்ந்து ஏராளமானோர் மருத்துமனைக்கு மக்கள் வந்துகொண்டேயிருக்கின்றனர். ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை பேரை சமாளிக்கக் கூடிய, சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் எதுவும் இத்தாலியில் இல்லை. இத்தாலியில் மட்டுமல்ல, அமெரிக்கா, இந்தியா எந்த நாட்டிலும் இல்லை, இருக்கவும் இயலாது.

  மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், படுக்கைகளின் போதாமை, வென்டிலேட்டர் பற்றாக்குறை, ஆய்வகங்களின் பற்றாக்குறை, பரிசோதனைகளில் சிக்கல், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உருளை என அத்தனையிலும் சிக்கல், பற்றாக்குறை.

  காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் பலர் இறந்துகொண்டிருக்கின்றனர்.

  இறந்தோருக்கான சடங்குகளைச் செய்யக்கூட யாரும் வருவதில்லை. வரக்கூடிய நிலைமையில் அவர்களும் இல்லை. அடக்கத்துக்காகத் தேவாலயங்கள், கூடாரங்கள் எனப் பல இடங்களில் சவப்பெட்டிகள் காத்திருக்கின்றன - முகவரிகள் எழுதப்பட்டு. 

  சவப் பெட்டிகள் கிடைப்பதிலும் சிக்கல், கிடைத்த பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்வதிலும் சிக்கல். பெட்டிகளைத் தூக்கிச் செல்லக்கூட முடியாமல் வண்டிகளில் வைத்துத் தள்ளிச் செல்கின்றனர்.

  லம்பார்டியில் பெர்காமோவிலுள்ள தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அரை மணிக்கு ஒருவரின் சடலத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலைமை. சற்றே தாக்கம் குறைந்திருக்கும் தென் பகுதித் தீவான சிசிலியை நோக்கி ஏராளமானோர் செல்கின்றனர்.

  இந்தச் சவப்பெட்டிகளின் ஊர்வலங்களிலிருந்து இத்தாலி எப்போது விடுபடப் போகிறதென யாருக்கும் தெரியவில்லை. இத்தாலியின் பாதையில் இன்னும் எத்தனை நாடுகள் செல்லப் போகின்றன என்றும் தெரியவில்லை.

  சற்றும் அடங்காமல் இன்னமும் ஆள்களைப் பலி கொண்டிருக்கிறது கரோனா  தொற்று!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai