ஒலிப்பதிவு மேதை கே. சம்பத் மறைந்தார்

'ஏவி எம் சம்பத்' என்றும் 'ஆர் ஆர் தியேட்டர் சம்பத்' என்றும் திரையுலகினரால் குறிப்பிடப்படும் திரைப்பட ஒலிப்பதிவு மேதை கே. சம்பத் மறைந்தார்...
ஒலிப்பதிவு மேதை கே. சம்பத் மறைந்தார்


'ஏவி எம் சம்பத்' என்றும் 'ஆர் ஆர் தியேட்டர் சம்பத்' என்றும் திரையுலகினரால் குறிப்பிடப்படும் திரைப்பட ஒலிப்பதிவு மேதை கே. சம்பத்தின் மறைவுச் செய்தி மிகவும் துயர் தருகிறது (வயது 87, வெள்ளிக்கிழமை காலமானார்).

திரைப்பட உதவி இயக்குநராக எனக்கு அவரோடு ஏராளமான அனுபவங்கள். எத்தனையோ படங்களுக்கான பாடல் பதிவுகள், பின்னணி இசைக் கோப்புகள்.

மிகுந்த திறமையாளர்; எளிமையானவர்; சிறந்த பண்பாளர்; கண்டிப்பு மிக்கவர்.

திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இன்டர்மீடியட் படித்து முடித்து, சென்னை வந்து அடையாறு மத்திய பாலிடெக்னிக்கில் ஒலிப்பதிவு பிரிவில் சேர்ந்து பயின்று டிப்ளமோ பெற்றார்.

பின்னர் ஏவி எம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு, இந்தியாவின் தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களான ராபின் சாட்டர்ஜி, பி.எல். மிஸ்ரா, முகுல் போஸ். ஜே.ஜே. மாணிக்கம் போன்றோரின் கீழ் பணிபுரிந்து, பின், தனித்து ஒலிப்பதிவாளராக உயர்ந்தார்.

அரை நூற்றாண்டு காலம் ஏவி எம் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்களைப் பதிவு செய்திருக்கிறார். இவர் அதிகமாகப் பணியாற்றிய இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.

இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களுக்கெல்லாம் (சற்றொப்ப நூறு படங்கள்) இவர்தான் ஒலிப்பதிவாளர் (பிறகு இளையராஜா ஏவி எம்-மிலிருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு இடம் பெயர்ந்து விட்டார்.)

சிறந்த திரைப்பட ஒலிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் சம்பத்.

தேசிய விருது ஒருமுறை ('எந்நு ஸொந்தம் ஜானகிக்குட்டி' என்ற மலையாளப் படத்திற்காக) பெற்றுள்ளார்.

சம்பத் மறைந்திருக்கலாம்; அவர் பதிவு செய்த பாடல்கள் ஒலிக்காமல் ஒருநாளும் கழியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com