கொண்டாட்டமின்றிக் கழிகிறது சித்திரை முழுநிலவு நாள் விழா

சூரியன் மேஷ ராசியில் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு விழா எடுத்தனர்.
கொண்டாட்டமின்றிக் கழிகிறது சித்திரை முழுநிலவு நாள் விழா

உலகின் மூத்த குடியைச் சார்ந்த தமிழர்கள் ஆண்டு முழுவதுமே நாள்களின் சிறப்பு அடிப்படையில் விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அத்தகைய விழாக்களைத் தெய்வங்களோடு தொடர்புபடுத்தி ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்தனர்.

இயற்கையாக அமைந்த கோள் நிலைகளின் சுழற்சியினைக் கணக்கில்கொண்டு விழாக்கள் நடத்தினர். சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் முடிய உள்ள தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே சிறப்புக்குரியதாக அமைந்தன. இராசி சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைப் பகுத்தனர். அவற்றைக் கோயில் சிற்பங்களில்கூட வடித்துக்காட்டியுள்ளனர். சூரியன் மேஷ ராசியில் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு விழா எடுத்தனர். இதனை, சங்க நூலான நெடுநல்வாடை,

            திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு

            திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து

எனக் குறிப்பிடுகின்றது. இது மேஷ ராசியில் முதல் பாகையில் சூரியன் பிரவேசிக்கின்ற காலமே சித்திரை முதல் நாள் என்பது பொருளாகும். இருந்தாலும் தமிழறிஞர்களிடையே இதில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு.

மாதந்தோறும் அமாவாசையும் பௌர்ணமியும் வருவது கோள் நிலைகளின் அடிப்படையில் அமைகிறது. அதிலும் குறிப்பாக சித்திரை மாதத்து பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரம் கூடி வருவதால் சித்திரா பௌர்ணமியாகத் திகழ்கிறது.

இந்த நாள் அம்மனை வழிபட உகந்த நாளாகக் கருதப்படுகிறது. சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு பூசனைகள், வீதி ஊர்வலங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. மேலும், சித்திரகுப்தன் எனும் சித்திரபுத்திரன் அவதரித்த நாளாகவும் கருதப்படுவதால் சித்திரபுத்திரனார் விரதம் மேற்கொள்ளப்படுவதையும் புராண இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. சைவர்கள் சித்திரா பௌர்ணமி விழாவை சித்திரபுத்திர நாயனாருக்காகக் கொண்டாடுகின்றனர். இந்நாள் சித்திரபுத்திரனின் பிறந்த நாள் என்றும், திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன.

சித்திரா பௌர்ணமி விழா தமிழர்களிடையே தொன்றுதொட்டு வருவதைக்  கல்வெட்டுகள் காட்டுகின்றன. திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு ராஜராஜ சோழனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். இதில் சித்திரா பௌர்ணமி விழாவுக்காக மன்னன் நிவந்தம் அளித்த குறிப்பு காணப்படுகிறது. இதேபோல துவாக்குடி அருகேயுள்ள நெடுங்களநாதர் கோயிலிலும் இவ்விழா குறித்த கல்வெட்டு காணப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இவ்விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தலபுராணத்தில் விருத்திராசுரன், விஸ்வரூபன் என்பவர்களை இந்திரன் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கியதாக இப்புராணம் கூறுகிறது. லட்சக்கணக்கானோர் திரண்டிருக்க வைகை ஆற்றில் அழகர் இறங்குவது கண்கொள்ளாக் காட்சி.

பௌர்ணமி தினத்தில் நிலவு தன் முழு ஔியையும் பூமிக்கு வழங்குகிறது. எனவே, மக்கள் நிலவொளியில் ஒன்றுகூடி மலையடிவாரங்களிலோ, நீர்நிலைகளின் கரைகளிலோ, ஆலயங்களிலோ கூடி வழிபாடு செய்து கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை நிலாச்சோறு என்பர்.

இந்திர விழா சித்திரை மாத பௌர்ணமியன்று நிகழ்ந்ததை சிலப்பதிகாரம் கூறுகின்றது. புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதனை,

            சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

          வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கஎனத்

          தேவர் கோமான் ஏவலிற் போந்த

          காவற்பூதத்துக் கடைகெழு பீடிகைப்

          புழுக்கலும் நோலையும் விழுக்கு உடைமடையும்

          பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

மூதிற் பெண்டிர் வழிபட்டனர் என இந்திர விழவோர் எடுத்த காதையில் (64–69) குறிப்பிடுகிறது. பருவங்களில் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமான இந்திரனையும் அந்நிலத்துக்குரியதான பெரும் பொழுதாக இளவேனிற் பருவத்தினையும் குறிப்பிடுகிறது.

சித்திரா பௌர்ணமி தினத்தன்று மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா அனைத்து சமூக மக்களும் கொண்டாடக்கூடிய சிறப்பான விழாவாகத் திகழ்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவக் கோயில்களில் அன்றைய நாளில் சித்திரபுத்திர நயினார் நோன்பு தொடங்குகிறது. சித்திரபுத்திரனுக்காக இந்த மக்கள் கடைப்பிடிக்கின்ற நோன்பாகும். சைவம் சார்ந்தவர்களும் இந்நோன்பினைக் கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வருடத்தில் ஒருநாள் சூரியன் மறையும்போது சந்திரன் முழுநிலவாக வெளிப்படும் சித்திரா பௌர்ணமியைக் காண கன்னியாகுமரி கடற்கரையில் பல்லாயிரம் மக்கள் திரளுவர். அனேக கடற்கரைகளிலும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சித்திர புத்திரனார் கதையின்படி சித்திரையில் கஞ்சி வார்த்து தருமம் செய்ய வேண்டும் என உணர்த்தப்படுகிறது. புண்ணியம் செய் புனிதனாவாய் என்று அம்மன் ஆலயங்களில் அம்மனின் கோபத்தை (வெப்பத்தை) தணிக்க விழா எடுப்பதால் கோடை காலத்து நோய்கள் நம்மை அண்டாது என்று மக்கள் நம்புகின்றனர்.

இதனையே பௌத்தர்கள் புத்த பூர்ணிமா நாளாகக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் புத்தபூர்ணிமா அரசு விடுமுறையுடன் மூன்றுநாள் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதத்து சித்திரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தருக்கு விழா நடக்கிறது. இவருக்கான கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயில் அரிய கோயிலாகும். சித்திரகுப்தர் எமன் பிரம்மாவுடன் இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் உள்ளது. மேலும், தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் சித்திரபுத்திர நாயனார் என்ற பெயரில் கோயில் உள்ளது.

தஞ்சைப் பெருங்கோயில் சித்திரா பௌர்ணமி நாளன்று இரவு முழுவதும் மக்கள் கூடியிருந்து இந்த பௌர்ணமி பூஜையினை சிறப்பாகச் செய்வர். குறிப்பாகத் தஞ்சை வாழ் செளராஷ்டிர மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து தங்கள் பல்வேறு குடும்ப நிகழ்வுகளை அங்கேயே அன்றைய தினத்திலேயே நிச்சயித்துக் கொள்வர்.

சித்தர்கள் முக்கிய நாளாகக் கருதியது சித்திரா பௌர்ணமியாகிய இன்றைய நாளே ஆகும். சிவகங்கை மாவட்டம், கோவலன் பொட்டல் என்ற இடத்தில் சித்த மருத்துவத்திற்கு அதிக வீரியம் தரக்கூடிய அண்டக்கல் அதாவது சித்த மருத்துவத்தில் முப்பு எனப்படும். அதனை எடுக்கும் நாளாக இந்நாளைத் தேர்வு செய்துள்ளனர். இன்றைய நாளில் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கிரிவலம் சுற்றுதல், பல்வேறு ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல் போன்ற பல்வேறு விழாக்கள் மற்றும் சடங்குகள் மூலமாக மகிழ்வெய்துகின்றனர்.

ஆனால், கரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி இந்த ஆண்டுச் சித்திரை பௌர்ணமித் திருநாள் எவ்விதக் கொண்டாட்டமுமின்றிக் கழிகிறது.

[கட்டுரையாளர் - தமிழ்ப் பண்டிதர்,

 சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com