நாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பேருந்துகள்

பொது முடக்கம் தளர்வைத் தொடர்ந்து இயக்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 450 பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன.
நாமக்கல்–பரமத்தி சாலையில் உள்ள பணிமனையில் தயார் நிலையிலுள்ள அரசு பேருந்துகள்
நாமக்கல்–பரமத்தி சாலையில் உள்ள பணிமனையில் தயார் நிலையிலுள்ள அரசு பேருந்துகள்

நாமக்கல்: பொது முடக்கம் தளர்வைத் தொடர்ந்து இயக்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 450 பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன.

கரோனா தொற்று பரவலால், தமிழகத்தில் மார்ச் 24–ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல்  பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 15, மே 4 ஆகிய இரு கட்டங்களாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால் இதர வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோதும், பேருந்து, ரயில், விமானங்கள் உள்ளிட்டவற்றின் சேவைகளுக்கு தொடர்ந்து தடை உள்ளது.

மே 17–ஆம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ளது. மறுநாள் 18–ஆம் தேதி முதல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களிலும், ஒரே இடத்தில் பேருந்துகள் 40 நாள்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவற்றைப்  பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 5 பணிமனைகள் உள்ளன. நாமக்கல்லில் 2, ராசிபுரத்தில் 1, திருச்செங்கோட்டில் 1, தம்மம்பட்டியில் 1. சேலம் மாவட்டத்தில் இருந்தபோதும் நாமக்கல் மாவட்டத்தின் கீழே அந்தப் பணிமனை செயல்படுகிறது.    
இந்த 5 பணிமனைகளிலும் 450 பேருந்துகள் உள்ளன. ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1,800 பேர் வரை பணியாற்றுகின்றனர்.
பொது முடக்கம் காரணமாக வீட்டிலேயே  முடங்கியுள்ள அவர்கள் தங்களை எப்போது பணிக்கு அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மே 18–ஆம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதால் தொழில்நுட்ப பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்து பேருந்துகளைத்  தடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து நாமக்கல் பணிமனை அதிகாரி ஒருவர் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளிலும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் 450–க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.  மே 18–இல் ஐம்பது சதவீத பேருந்துகளை இயக்கலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இருப்பினும் எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரையில் என்பது தொடர்பாகவோ, பயணிகளை எவ்வளவு எண்ணிக்கையில் அனுமதிப்பது போன்ற  முழுமையான தகவல்கள் வரவில்லை. பேருந்துகள் பழுதாகி விடக்கூடாது, அதன் இயக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதால் பழுதுகளை நீக்கித் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

மார்ச், ஏப்ரல் மாத ஊதியத்தை அனைத்து பணியாளர்களுக்கும் முழுமையாக வழங்கி விட்டோம். கட்டண உயர்வு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. மேலும், பேருந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை. அவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதித்தால் கட்டணத்தில் மாறுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எப்போது பணிக்கு வரவேண்டும் என்று  கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்கு பேருந்துகளை அனுப்பத் தேவையில்லை. அறிவித்து விட்டால் இரு சக்கர வாகனத்திலேயே வந்து விடுவர். நாமக்கல் பணிமனைகளில் பேருந்தை தூய்மைப்படுத்துமாறோ, கட்டாயம் பணிக்கு வருமாறோ தொழிலாளர்கள் யாரையும் நிர்வாகம் அழைக்கவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com