பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள்: தமிழக அரசு

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் வந்துள்ளதாகவும், இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட தாய்வீடு கட்செவி குழு உருவாக்கப்
பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள்: தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தின் போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதா ராமலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் நிவாரணம் தேடி குற்றவியல் நடுவர்களை அணுக முடியவில்லை. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் பெண்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் வெளிவந்தன.  

எனவே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கான பாதுகாப்பு அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை காவல் துறையினர் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது அரசு தரப்பில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலாளர் எஸ்.மதுமதி பதில்மனு தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், "தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் வந்துள்ளன. மேலும் தற்காலிக அடிப்படையில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட 111 பாதுகாப்பு அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகார்கள் வந்தவுடன் உடனடியாக அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட அளவிலான குறைதீர்வு அதிகாரிகளின் தொலைபேசி விவரங்கள் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர சமூகநலத்துறை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் உதவி தொலைப்பேசி எண் 181 மற்றும் காவல்துறை, பேரிடர் மேலாண்மை மையம், மாநில பெண்கள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களை பொருத்தவரை, குடும்ப வன்முறை சம்பவத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடியாக உதவும் வகையில் தாய்வீடு என்ற கட்செவி குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்,  சமூகநலத்துறை செயலாளர், ஆணையர், அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குடும்ப வன்முறை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ளனர். 

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து உதவிகளும் உடனுக்குடன் செய்யப்படுவதாக" அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com