80 வயது தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகன்கள்: காரணம் கரோனாவாம்!

தெலங்கானாவில் கரோனா பாதித்திருக்கலாம் என்ற அச்சத்தில், 80 வயதான பெற்ற தாயையே வீட்டுக்குள் விட மறுத்திருக்கிறார் ஒருவர். 
80 வயது தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகன்கள்: காரணம் கரோனாவாம்!

தெலங்கானாவில் கரோனா பாதித்திருக்கலாம் என்ற அச்சத்தில், 80 வயதான, பெற்ற தாயையே வீட்டுக்குள்விட மறுத்திருக்கிறார் ஒருவர் (இனிமேல் இவரை மகன் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கப் போகிறது?).

இதயத்தை நொறுங்கச் செய்யும் இந்தக் கொடுமை, தெலங்கானா மாநிலம் கரீம் நகரிலுள்ள கிசான் நகரில்தான் நடந்திருக்கிறது.

பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன் ஷோலாபூரிலுள்ள உறவினர் ஒருவர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார் கட்டா சியாமளா, 80.

முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் உடனடியாக ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டார். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  ஹைதராபாத் வரை காரில் வந்த சியாமளா, அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து வெள்ளிக்கிழமை ஊருக்குவந்து சேர்ந்தார்.

மாநில எல்லைக்குள் நுழையும்போது வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும்  என்று அறிவுறுத்தி அவருக்கு அரசு அலுவலர்களால் முத்திரையிடப்பட்டது.

தன்னுடைய தாய் கரீம்நகருக்கு வந்துவிட்டார் என்பதை அறிந்த மகன் நரசிம்மாச்சாரி, அவருடைய வீட்டின் வாசலிலுள்ள பிரதான கதவை மூடிவிட்டார். இதனால், தான் கொண்டுவந்த பொருள்களுடன் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் தெருவிலேயே அமர்ந்திருந்தார் சியாமளா.

கருவுற்றுள்ள தன்னுடைய மகள் வீட்டில் இருப்பதால் தாயை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்தார் நரசிம்மாச்சாரி.

சியாமளாவின் இளைய மகன் ஈஸ்வராச்சாரியும் தாயைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்க  மறுத்துவிட்டார். தான் வாடகை வீட்டில் குடியிருப்பதாகவும் தன்னுடைய வீடு மிகவும் சிறியது என்றும் அதனால் தாயை வைத்துக்கொள்ள முடியாதென்றும் காரணம் கூறினார் ஈஸ்வராச்சாரி.

கடைசியாக, உள்ளூர் கவுன்சிலர் அட்லா சரிதாவின் கணவர் அசோக் மற்றும் தெருக்காரர்கள் எல்லாரும் மூத்த மகன் நரசிம்மாச்சாரியுடன் பேசி விளக்கி, சம்மதிக்க வைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர் மிகுந்த தயக்கத்துடன் தாயை வீட்டுக்குள் அனுமதித்தார் நரசிம்மாச்சாரி.

இத்தனையையும் இந்த வயதில் பெற்ற வயிறு பற்றியெரிய பார்த்துக்கொண்டிருந்தார் 80 வயதான தாய் கட்டா சியாமளா, பாவம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com