முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
‘அனிதா விடியோவிற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை’: மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
By DIN | Published On : 04th April 2021 01:27 PM | Last Updated : 04th April 2021 01:27 PM | அ+அ அ- |

மாஃபா பாண்டியராஜன்
அதிமுகவை ஆதரிப்பதாக அனிதா பேசுவது போன்று வெளியான விடியோ தனது அனுமதியின்றி பதிவேற்றம் செய்யப்பட்டதாக அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் சுட்டுரைக் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை காலை அதிமுகவை ஆதரிப்பது போன்றும், நீட் தேர்விற்கு திமுக தான் காரணம் எனத் தெரிவிக்கும் வகையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா பேசுவது போன்ற விடியோ வெளியானது.
பின்னணி குரல் மாற்றம் செய்யப்பட்டு வெளியான அந்த விடியோவிற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாஃபா பாண்டியராஜனின் சுட்டுரைப் பக்கத்தில் இருந்து அந்த விடியோ நீக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாஃபா பாண்டியராஜன் தனது அனுமதியின்றி அனிதாவின் விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
— Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021
மேலும், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் தனக்கு இல்லை எனவும், தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியான விடியோவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.