தேசநலனை, மக்கள் நலனை தாக்குவதற்கு தமிழ்நாடு சோதனைக் களமா? - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

இந்தியாவின் நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போகக்கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல்ஐசி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக்கி வலுப்படுத்த வேண்டும்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்


"இந்தியாவின் நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போகக்கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல்ஐசி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக்கி வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்" என்றும் தமிழகம் சோதனைக்களமோ, சமூக நீதியின் பலி பீடமோ அல்ல என்று  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு:
பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் எந்த நிறுவனத்தை என்று சொல்ல மாட்டேன் என்கிறார்.

மத்திய நிதியமைச்சரே, இது என்ன ஜனநாயகம்!

என்னிடம் பெயர் கேட்டால் சொல்ல மாட்டேன் என்று நிதியமைச்சர் சொல்லும் போதே நிதி அயோக் தனது பரிந்துரையை அரசிடம் தந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்து விட்டன.

கசிந்ததா.. கசிய விடப்பட்டதா...

1971 இல் 107 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டுதான் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பிறகு இந்த அரசு நிறுவனங்கள் பொது இன்சூரன்ஸ் பரவலை சிற்றூர்கள், கிராமங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளன. த‌னியா‌ர் நிறுவனங்களின் அலுவலக அமைவிடங்கள் எல்லாம் அவர்கள் வணிகத்தில் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ரோ நகரங்கள் அல்லது இரண்டாம் தட்டு நிறுவனங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன என்ற இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ஐ.த.ஈ.அ) 2020 ஆண்டறிக்கை கூட சொல்வது நிதி அமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.

ரூ 12 பிரீமியத்திற்கு ரூ 2 லட்சம் காப்பீடு வழங்குகிற, வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'பிரதான் மந்திரி சுரக்ச பீம யோசனா' திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே!

லாபமா... மக்கள் நலனா என்றால் தனியார்கள் எதை தெரிவு செய்வார்கள்? அரசு நிறுவனங்கள் எதை தெரிவு செய்யும் என்பதற்கு உதாரணங்கள் ஏராளம் உள்ளன.

நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போக கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல். ஐ. சி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும். மத்திறய அரசே... அரசின் நிதித் தேவைகளை ஈடு செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றை செய்ய அரசியல் உறுதி இல்லாமல் அரசு நிறுவனங்கள் மீது கை வைக்காதே!

இவ்வளவு காலம் பங்கு விற்பனைதான்; அரசு நிறுவனங்களாகவே தொடரும் என்று பேசி வந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கம் இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

அரசின் கைகளில் 51 % பங்குகள் இருக்கும் வரை ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடி இட ஒதுக்கீடுகள் தொடரும். ஆனால் தனியார் மயம் என்றால் சமூக நீதியும் சேர்ந்து பலியாகும். இட ஒதுக்கீடு இருக்காது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே முதல் இலக்காக இருக்கும் என்று செய்திகள் வருவதும், அரசோ நிதி ஆயோக்கோ மவுனமாக அந்த செய்தி பரவ அனுமதிப்பதும் அதிர்ச்சி தருகிறது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டில், சென்னையில், தலைமையகம் கொண்ட நிறுவனம். அதனால் அது அகில இந்திய நிறுவனம் எ‌ன்றாலு‌ம் அதன் சேவை இயல்பாகவே தமிழ் நாட்டையும், தென் மாநிலங்களையும் சுற்றி அதிகமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் காப்பீடு திட்டத்தை இதுவே நிர்வகித்து வருகிறது.

நான்கு அரசு பொது நிறுவனங்களும் அரசின் கைகளிலேயே தொடரட்‌டும்! தமிழ் நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன்.

மக்கள் நலனையும், தமிழ் நாட்டை த‌லைமை இடமாகக் கொண்டு இயங்குகிற ஒரு அரசு நிறுவனத்தையும், சமூக நீதியையும் காவு கேட்கிற இந்த தனியார்மய நகர்வை தமிழ் நாடு எதிர்க்கும். மும்பை, டெல்லி, கொல்கத்தாவை தலைமை இடங்களாகக் கொண்ட அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் காத்து நிற்கும். தேசத்தி‌ன் குரலை ஒன்று திரட்டுவதிலும் முன் நிற்கும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com