மும்பையில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி
By DIN | Published On : 10th June 2021 10:11 AM | Last Updated : 10th June 2021 10:32 AM | அ+அ அ- |

தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்
மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று கனமழையினால் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை புதன்கிழமை பெய்ய தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மதியம் முதல் கனமழை பெய்தது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்
இந்தநிலையில் மும்பை மாலட் மேற்கு பகுதியில் இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் புதன்கிழமை இரவு 11.10 மணி அளவில் கனமழையினால் இடிந்து விழுந்தது. இரண்டு தளம்கொண்ட குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
கனமழையினால் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்
இதன்பின்னர் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மேலும் 2 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 11 -ஆக அதிகரித்தது.
மேலும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.