கோடை வெயிலுக்கு ஜில் ஜில் குளியல் போடும் திருவானைக்கா கோவில் யானை அகிலா!

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேசுவரி கோவிலில் இறைப்பணியாற்றி வரும் யானை அகிலா(19) புதிதாக கட்டப்பட்ட குளியல் குளத்தில் குழந்தை போல ஆனந்தக் குளியல் போட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
கோடை வெயிலுக்கு ஜில் ஜில் குளியல் போடும் திருவானைக்கா கோவில் யானை அகிலா!


திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேசுவரி கோவிலில் இறைப்பணியாற்றி வரும் யானை அகிலா(19) புதிதாக கட்டப்பட்ட குளியல் குளத்தில் குழந்தை போல ஆனந்தக் குளியல் போட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேசுவரி கோவிலில் சிவனை வழிபட்டு வந்த யானை முக்தியடைந்ததால் இத்தலம் திருவானைக்கா எனப் பெயா் பெற்றது. அதனால் இங்குள்ள யானைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் கொண்டு செல்வது மற்றும் உச்சிக்கால பூஜையின்போது இறைவி வேடத்தில் வரும் அா்ச்சகா் முன் சென்று பிளிறி வழிபடுவது போன்ற பல்வேறு இறைப்பணிகளை யானை அகிலா ஆற்றி வருகிறது.

இந்நிலையில், யானை அகிலா குளிக்க நாச்சியாா்தோப்பில் 20 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் புதிய குளம் கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன், கோயில் பணியாளா்கள் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் 28 அடி நீளத்துக்கு சரிவுப் பாதையும் உருவாக்கப்பட்டுள்ள இந்த குளத்தில் 55 ஆயிரம் லிட்டா் நீா் நிரப்ப 2 மின் மோட்டாா்களும் நீரை வெளியேற்ற ஒரு மின் மோட்டாரும் பயன்படுத்தப்படுகிறது.

நாள்தோறும் யானை குளித்தவுடன் உடனடியாக குளத்திலிருந்து வெளியேற்றப்படும் நீா் அருகே அமைக்கப்பட்டுள்ள தோட்டத்துக்குச் செல்கிறது. இந்தக் குளத்தை சுற்றிலும் 100 மாமரம்,100 தென்னை மரம் ,10 பலா மரக் கன்றுகள் வைக்கப்பட்டு வனத் தோட்டம் போல மாற்றப்பட்டுள்ளது. மேலும் தினமும் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை புதிய குளத்தில் யானை அகிலா முதன் முதலாகக் குளித்தது. குளத்திற்குள் இறங்கிய யானை வெளியே வர மனமில்லாமல் ஆனந்தக் குளியல் போட்டது. இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com