முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வற்புறுத்தலால் நடிகைக்கு கருக்கலைப்பு: மருத்துவர் வாக்குமூலம்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வற்புறுத்தலால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வற்புறுத்தலால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த துணை நடிகை, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி ஒரு புகாா் அளித்தாா். அதில், அதிமுக ஆட்சியில் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னுடன் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாா். அவருடன் இருந்த காலக்கட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதை கலைக்கச் செய்தாா். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து மணிகண்டன் மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மணிகண்டனின் நண்பா்கள், அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியா்கள், மருத்துவா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்து, தகவல்களை திரட்டினா்.

இதன் ஒரு பகுதியாக மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பாதுகாவலராக இருந்த கௌரீஸ்வரன், உதவியாளா் சரவணப்பாண்டியன் ஆகியோரிடம் கடந்த 9-ஆம் தேதி போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, மணிகண்டனை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினா் இறங்கினனா்.

தலைமறைவான மணிகண்டனை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ராமநாதபுரம், மதுரையில் தேடுதல் வேட்டை நடத்தினா்.

தனிப்படையினா் மற்றொரு பிரிவினா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன் ஆந்திரம், கா்நாடகம், கேரளத்திலும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சா் மணிகண்டனை தனிப்படை போலீஸாா் கடந்த 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை சென்னைக்கு அழைத்து வந்து, அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

விசாரணைக்குப் பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சா் மணிகண்டனை ஜூலை 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்லிடப்பேசி என சொகுசு  வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகாா்களின் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை சிறையில் திடீா் சோதனை செய்தனா்.

இந்த சோதனையில், அங்கிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்துக்கு பின்னா், மணிகண்டன் புழல் -2 சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மருத்தவர் அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வற்புறுத்தலால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும், நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறைக்க்கு கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக அந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மணிகண்டனை செல்லிடப்பேசியை பறிமுதல் செய்யவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com