குழந்தைகள் என்னும் ஆசான்கள்

காற்றின் நிறம் பச்சை, உப்பின் நிறம் சிவப்பு: தமிழ் மொழியில் முதல்முறையாக நிகழ்ந்திருக்கும் அழகான முயற்சி.
காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு
காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு

குழந்தைகளின் உலகம் குதூகலமுடையது மட்டுமல்ல, அதில் ஏழ்மையின் சோகம் உண்டு, பிரிதலின் துயர் உண்டு. உழைப்பின் வலியும் சுமையும்கூட உண்டு. புறக்கணிப்பின் அவமானம் உண்டு.

சமூகத்தின் கசடுகள் படிந்திராத பளிங்கு உள்ளம் கொண்ட சிறுமியர்களும், சிறுவர்களும் பெரியவர்களைப் போல இடம், பொருள், காலமறிந்து  பேசக் கற்றவர்கள் அல்லர். எனினும், அந்தந்த சூழலுக்குப் பொருந்தும்படியாக அவர்கள் பேசும் சொற்களில் ஆழ்ந்த பொருளும் அழகு மிளிரும் கவிதையும் உண்டு. அவர்களிடமிருந்து இயல்பாக வந்து விழும் சொற்திரள்களில் மறைபொருளாக சமூக அரசியல் தொனிப்பதும் உண்டு.

சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியானாலும் வருத்தமானாலும் போட்டியானாலும் அதனதன் உணர்வுநிலையின் சிகரத்தைத் தொட்டுவிடுபவர்கள். குழந்தைகள் தங்கள் அளவில் தூய்மையானவர்கள். வர்க்க, இனப் பாகுபாடு கடந்த நேசம் கொண்டவர்கள். பால்பேதம் கடந்து அவர்கள் கொண்டிருக்கும் அன்பு உன்னதமானது. இயேசு கிறிஸ்து சொல்கிறார், “குழந்தைகளைப் போல உள்ளம் கொண்டோர் சொர்க்கத்தில் பிரவேசிக்கக் கடவர்.”

இயேசுவின் வார்த்தைகளில் ஆழ்ந்த பொருள் உண்டு. குழந்தைகள் மகிழ்வடைய பெரிய விஷயங்கள் எதுவும் நடைபெற வேண்டியதில்லை. எளிய நிகழ்வுகளில் குதூகலமும் பூரிப்பும் கொள்பவர்கள் குழந்தைகள். சிறு சிறு பேச்சுகளிலும் சின்னஞ்சிறிய செயல்களிலும் தங்களது சூழலைச்  சொர்க்கமாக மாற்றிக்காட்டுபவர்கள்.

குழந்தைகள் குறித்து ரஷிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகவும் மகத்துவமானவை, “ஓர் அப்பாவிக் குழந்தை துன்புறுத்தப்பட்டு அது ஒரு துளி கண்ணீர் சிந்துதலின் பொருட்டு நான் எனது சொர்க்கத்திற்கான பயணச்சீட்டை மிகத் தாழ்பணிவுடன் திருப்பிக் கொடுத்துவிடுவேன்”

குழந்தைகளுக்காக எழுதியும் பேசியும் களச்செயல்பாடுகளில் பங்காற்றியும் உலகம் முழுவதிலும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இயங்கிவரும் காலமிது.

மதுரை மாநகரத்தைத் தொட்டுக்கொண்டே அமைந்திருக்கும் நாகமலை புதுக்கோட்டையில் சமணர் குன்று அருகில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் லிட்டில்ஸ் என்னும் அமைப்பைக் குழந்தைகளுக்காக நிறுவி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளுக்காகச் செயலாற்றிவரும் பர்வத வர்த்தினியுடனான தனது அனுபவ பொக்கிஷங்களைத் தொகுத்து அழகான நூல் வடிவம் பெறச் செய்திருக்கிறார்:

“காற்றின் நிறம் பச்சை

உப்பின் நிறம் சிவப்பு”

“குழந்தைகள் எனக்குத் தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுக்கிற ஆசான்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் வர்த்தினி, குழந்தைகளின் உலகத்தில் நுழைந்துவிட்டால் இவர்களும் அவர்களோடு ஒரு குழந்தை போலாகி அவர்களது விளையாட்டில் கலந்து உற்சாகத் துள்ளல் கொள்கிறார். அவர்களின் உரையாடல்கள் கேட்டு மகிழ்வடைகிறார். அந்தப் பிஞ்சு மனங்களின் வேதனைகள் அறிந்து கண்ணீர் கசிகிறார்.

தனது லிட்டில்ஸ் அமைப்பிற்கு வரும் குழந்தைகளின் மகிழ்வுகள், குமுறல்களைத் தனதாக்கிக்கொண்டு, அவர்களுக்கு செயல்புரிந்துவரும் பர்வத வர்த்தினியின் களச்செயல்பாடுகளில் அவரது இணையர் ஆறுமுகமும்  ஆதரவு நல்குபவராக இருந்துவருகிறார்.

குழந்தைகள் உடனான தனது வாழ்வியல்போக்கைப் பயணம் என்னும் விதத்தில் முன்னுரையில் குறிப்பிடும் நூலாசிரியர், இந்நூலின் முதல் கதையைத் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் சந்திக்கும் அழகான அனுபவத்திலிருந்து தொடங்குகிறார். அவருக்கு முன்னால் இருக்கும் ஜன்னலோர இருக்கையில் அமரும் குட்டிச் சிறுமி ஹரிணி, யூகேஜி உடனான அறிமுகத்தில் அவளிடம்  நிலாப் பாட்டும் மயில் பாட்டும் கற்று,  பாடிக் காட்டுவதோடு அவளது வீட்டின் பூச்செடிகள், பழமரங்கள், காய்கறிச் செடிகளும் அறிமுகம் ஆகின்றன. மேலும் அவளது குழந்தை மொழியில் மனோரஞ்சிதச் செடியின் பச்சைநிறம் கொண்ட காய் பூவைப் பற்றியும் மஞ்சள் வண்ணமுள்ள “பூ பூவும்” பற்றியும் பேசி கவித்துவப்படுத்துகிறாள்.

அடுத்ததோர் அனுபவக் கதையில் ஒண்ணாப்புப் படிக்கற ஆனந்த், மரம் அசையும்போது காற்று வருவதாகச் சொல்லி, "காத்து பச்சைக் கலர்தான்" என்று உறுதியாகச் சொல்கிறான்.

இவரது லிட்டில்ஸ் அமைப்பிற்குக் கற்றல் சிரமமுள்ள குழந்தைகள் வருகிறார்கள். அறிவுத் திறன் கூடுதலான மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயில்கிறார்கள். அதில் ஒரு குழந்தைக்கு ‘ப்ளு’ கலர் பிடிக்காதாம்.

“கடல் பார்த்திருக்கிறாயா?”

“ம்... தண்ணி கலர்ல இருக்கும்”

அதேபோல அந்தக் குழந்தை, 4 என்ற எண்ணுக்குப் பின் 6 என்பாள். ஐந்து என்ற எண்ணும் பிடிக்காது அந்தக் குழந்தைக்கு. எதிர்வீட்டில் வசிக்கும் ஹரீஷ் என்ற குட்டிச் சிறுவன் நூலாசிரியரை அழைக்கும்விதமே ஒரு சங்கீத ஆலாபனை.

“சகாண்ணேயம்மா”

எதிர்வீட்டு சகா, ஹரீஷுக்கு அண்ணனாம். அதனால் சகாவின் அம்மாவை அப்படியாக மதுரை வட்டார வழக்கில் ராகம் போட்டு அழைக்கிறார். சாக்லேட் காய்க்கும் செடியைக் காட்டவே அப்படி ஆர்வம் மிகுதியில் அழைத்திருக்கிறார். அந்தச் சிறுவனின் தந்தை வாங்கி வந்த பைவ் ஸ்டார் சாக்லேட்டிலிருந்து, “கொஞ்சத்த மண்ணுல ஊண்டி தண்ணி ஊத்தி...” என வெள்ளந்தியாக நகரும் அவன் “கலர் பேப்பரும் சுத்தி முளைக்கிற மாதிரி விதை இருக்காண்ணு கேட்டுப் பாக்கணும்” என அச்சிறுவனின் அக உலகம் விரிகிறது.

‘உப்பின் நிறம் சிவப்பு’ என்ற அனுபவக் கதையை வாசிக்கும் எவருக்கும் கண்ணீர்க் கசிவைத் தவிர்க்க இயலாது. உப்பளங்களில் உப்பு பாக்கெட் போடும் 15-18 வயதுப் பெண் குழந்தைகளைப் பற்றியது. காலை 5.30 மணிக்கு வேனில் ஏறிச் செல்லும் இவர்கள், வேலை முடித்து இரவு 7.30 மணிக்கு வீடு திரும்புகிறார்கள்.

சாப்பாடு இடைவேளை வெறும் பத்து நிமிசம். டாய்லெட் வசதி கிடையாது. 

“நாங்க ஒன் பாத்ரூம் போகணும்னுனாலும் கடலுக்குத்தான் போகணும். டாய்லெட் எல்லாம் இல்ல. பீரியட்ஸ் டைம்ல ரொம்பக் கஷ்டம். உப்புத் தண்ணி எரியும்ல?”

குழந்தைகள் உலகம் என்றால் அங்கு பேய் இல்லாமலிருக்குமா?

புலிவால் சர்ஜான் அதோட வீட்டையே பார்த்திருப்பதாகச் சொல்கிறான். ஏழாப்பு படிக்கும் வின்சி ஸ்கூல் டாய்லெட்ல பேய பாத்தக் கதைய நடிச்சே காண்பிக்கிறான். சமணர் மலையில் இருக்கும் குகை மற்றும் சமணர் படுக்கை ஆகியவற்றைக் காணச் செல்லவிருந்த பயணத்தின்போதும் முதல் நாளே பேய் பற்றிய கற்பனைகளை அவிழ்த்துவிடுகிறான் ஒரு சிறுவன். குகைப் பயணம் ரத்தாகிறது.

பேயைப் பார்த்த நாய் குரைக்குமாம். ஒன்பதாப்பு படிக்கும் கெத்து நவீன் சொல்கிறான்: “ பேயுமில்ல, பிசாசுமில்ல. நம்ம மனசோட பயம்தான் அப்படித் தோணும்.”

பள்ளிக்கூடப் படிப்பை பாதியில் விட்டு விட்டு லாட்ஜ் வேலைக்கு ஓடிப்போகும் பாலா என்ற சிறுவனைக் குறித்த கதை பரிதாபமானது. தந்தை குடிகாரன். தாய்க்குப் பனங்காட்டு வேலை. பசியோடு பள்ளிக்குப் போனால் "ஒழுங்காப் படிக்கல"ன்னு வாத்தியாரோட பனைமட்டை அடி. வாத்தியார் அடிக்கப் பயன்படுத்தும் பனைமட்டையை வாகாகச் செதுக்கித் தந்தவன் அந்தப் பாலா என்ற சிறுவன்தான் என்பதுதான் துயரம். அம்மாவின் அடி மற்றும் வாத்தியாரின் அடிக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடிப்போய் மூன்றாண்டு காணாமல் போகிறான். லாட்ஜ் ஒன்றில் வேலைக்குப் போய் அங்கே மேனேஜராக ஆன கதை பின்பு தெரிய வருகிறது.

அடுத்து, கண்ணாடித் தொட்டிக்கு வெளிப்புறத்தில் உங்கள் விரலை வைத்தால் மீன் வேகமாக வந்து அந்த விரலைப் பிடிக்கப் பார்க்கும் என்பதாக ஹரீஷ் என்னும் சிறுவன் சொல்லும் விளக்கம் அழகானது.

சிந்து என்ற சிறுமியின் லட்சியம் சயன்டிஸ்ட் ஆகி மருந்து கண்டுபிடிப்பதாம். எதற்கு? “ சூ..மந்திரகாளி” சொல்ற மாதிரி சாராயம் குடிக்கறவங்கள டக்குன்னு குடிக்காம நிறுத்த வைக்கவாம். இவளது குடிகாரத் தந்தை கோபத்தில் அம்மா மீது சீமத்தண்ணிய ஊற்ற தீ பரவி தொட்டியில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியும் அம்மாவும் தீயில் கருகி எரிஞ்சிபோயிருக்காங்க. சிந்து மட்டும் இரண்டு பீரோக்களுக்கு இடையில் புகுந்து நின்று உயிர் பிழைத்திருக்கிறாள்.

இயற்கை நிகழ்வுகளின் பொருள் புரியாத வயதில் குழந்தைகளுக்கு எல்லாமே கொண்டாட்டம்தான். இறந்துபோன தாத்தா பற்றி 3 வயது விப்ரதா சொல்வது: “தூங்குமூஞ்சி லூசு தாத்தா உட்காந்துட்டே தூங்கிட்டாரு. அப்புறம் நிறைய பேரு சேந்து அவரைக் குளிக்க வச்சு எழுப்பினாங்க. அவரு எந்திரிக்கவே இல்ல. அப்புறம் ரோட்டுல கொண்டு போயி சுத்திச் சுத்தி விட்டாங்க. அப்பவும் முழிச்சே பாக்கல. அப்புறமா சாமிகிட்டே விட்டுட்டாங்களாம்.”

உயிர்மீன் கொண்டுவரும் மீன்காரரைப் பார்த்து குட்டிச்சிறுவன் சகா “பேமியா வருது” என்கிறான். பேமியா என்றால் பயமாம்.

வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த நாலாப்பு படிக்கும் சங்கரி, கற்பனையில் கம்பனையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறாள். அவள் சொல்லும் கதையொன்றை கேளுங்கள்:

“சமண மலைக் குன்றைத் தேடி ஒரு கருமேகம் வந்துச்சாம். குன்றிடம் அந்தக் கருமேகம், நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கலாமா, என்கூட விளையாட வர்றியான்னு?” கேட்டுச்சாம். குன்று பகல் வெயில் தாங்காமல் உம்முனு இருந்துச்சாம். ஆனாலும் கருமேகம் அந்த குன்றின் மேல் மழை பெய்ததாம்.

அங்கிருந்த மரம், செடி, கொடி, புல் எல்லாம் சந்தோசமா நனைஞ்சாங்கலாம். குன்றுக்கு வெக்கமா போச்சாம். நாளைக்கி கருமேகம் வந்தா நிப்பாட்டி விளையாடனும்னு குன்று நினைச்சுதாம். அதான் அந்த குன்று மேல இன்னைக்கு கருமேகம் இன்னமும் விளையாடிக்கிட்டிருக்கு. இல்லனா அப்பவே மழை வந்திருக்கும் தெரியுமா?”

படைப்புத் திறனில் காவியக் கவிஞர்களை கடந்துநிற்கிறாள் இந்த சிறுமி.

அஜீத் எனும் சிறுவன் சொல்லும் கதை சூப்பர் நகைச்சுவை. பாட்டி குழம்பு வைக்க 5 தக்காளி வாங்கி வர அதில் ஒரு குண்டுத் தக்காளி கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அது அந்த வீட்டின் குழந்தை போல ஆகி யூனிபார்ம் போட்டு பள்ளிக்கூடம் போகிறது. நன்றாகப் படித்துக்  கேள்விக்கெல்லாம் டக் டக்னு பதில் சொல்லி நூத்துக்கு நூறு மார்க் வாங்கி ரேங்க் கார்டை கொண்டு போய் பாட்டியிடம் காட்ட சந்தோசத்தில் அவள் குண்டுத் தக்காளியைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சுனதுல தக்காளி நசுங்கிப் போச்சாம்.

குழந்தைகளின் அறிவியல் சிந்தனைகூட அந்த வயதிற்குரிய வினோதமும் நகைச்சுவையும் கொண்டது. 

“பூமி சுத்துதுனு சொல்றீங்க. அப்ப நாம ஏன் சுத்தல?” என்ற அவர்களின் வியப்பும்  “நான் வானத்துல உயரே நின்னுக்கிட்டு பூமி சுத்தி வர்றப்ப, கீழே இருக்கிற அமெரிக்கா சுத்தி வர்ற சமயத்துல அது மேல குதிச்சிரலாமா?” என்னும் அவர்களின் ஆச்சர்யம் தொனிக்கும் சிந்தனைகளும் கேள்விகளும் குழந்தைகள் உலகத்தின் கவித்துவமான மன இயல்புகள். இந்த நூல் முழுவதும் இத்தகைய தருணங்கள் ஏராளம்.

குழந்தைகளின் பல்வகை உளவியல் இயல்புகள் குறித்து அறியவும் உணரவும் இந்நூல் ஒரு நல்வாய்ப்பாக நமக்குக் கிடைத்துள்ளது.

தனது முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளைக் குழந்தைகளுடனான பயணத்திற்காகவே கைவிட்டிருக்கும் வர்த்தினி, சிறார்களின் கொண்டாட்டங்களை மட்டுமின்றி அவர்களின் துயரம், ஏக்கம், ஆற்றாமை இவற்றோடு அவர்களிடம் இழையோடும் இயல்பான நகைச்சுவை என மாறுபட்ட உணர்வுகளோடு குழந்தைகளின் உலகத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்நூல் தமிழ் மொழியில் முதல்முறையாக நிகழ்ந்திருக்கும் அழகான முயற்சி.

காற்றின் நிறம் பச்சை

உப்பின் நிறம் சிவப்பு

ஆசிரியர் : பர்வத வர்த்தினி

காலம் வெளியீடு, மருதுபாண்டியர் 4-வது தெரு, சுல்தான் நகர், மதுரை - 625002, கைபேசி : 9443078339

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com